India
  • search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

TIMELINE: உலகை உலுக்கிய குஜராத் கலவரம்.. ரயில் எரிப்பு முதல் படுகொலைகள் வரை! ஆறாத வடுக்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: 2002 குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கும் நிலையில், குஜராத் கலவரத்தின் தொடக்க புள்ளியிலிருந்து இன்று வரை நடந்த நிகழ்வுகளின் கால வரிசையை பார்க்கலாம்.

கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.

நரேந்திர மோடி முதல்முறையாக குஜராத் மாநிலத்தின் 14 வது முதலமைச்சராக பதவியேற்றார்.

 2002 குஜராத் வன்முறை- பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு டிஸ்மிஸ் - உச்சநீதிமன்றம் 2002 குஜராத் வன்முறை- பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு டிஸ்மிஸ் - உச்சநீதிமன்றம்

கோத்ரா ரயில் எரிப்பு

கோத்ரா ரயில் எரிப்பு

குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது.

இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்

இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்

இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடும் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அரசு தகவலின்படி 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் இதில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

நரோதா பாட்டியா படுகொலைகள்

நரோதா பாட்டியா படுகொலைகள்

பிப்ரவரி 28 ஆம் தேதி அகமதாபாத்தின் நரோதா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிறுவர்கள், ஆண்கள் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், பாஜக அமைச்சராக இருந்த மாயா கோட்னானி 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குல்பெர்க் சொசைட்டி கொலைகள்

குல்பெர்க் சொசைட்டி கொலைகள்

அதே நாளான பிப்ரவரி 28 ல் அஹமதாபாத்தின் சமன்புராவில் உள்ள இஸ்லாமியர் குடியிருப்பான குல்பெர்க் சொசைட்டியில் கலவர கும்பல் தாக்குதல் நடத்தி வீடுகளுக்கு தீ வைத்தது. இதில் காங்கிரஸ் எம்.பியாக இருந்த இஹ்சான் ஜாஃப்ரி உட்பட 35 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டனர். இந்த கொடூர நிகழ்வில் மட்டும் 69 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாஜகவை சேர்ந்த பிபிப் படேல் உட்பட 12 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பில்கிஸ் பானு

பில்கிஸ் பானு

28 ஆம் தேதி தொடங்கிய கலவரம் மார்ச் மாதம் வரை நீண்டது. மார் 3 ஆம் தேதி தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் கலவரம் வெடித்தது. அப்போது ஒரு வீட்டில் இருந்த 19 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானுவை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

நரேந்திர மோடி மீது புகார்

நரேந்திர மோடி மீது புகார்

குஜராத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற நரேந்திர மோடியும், பாஜகவினருமே இதற்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது. கலவரக்காரர்களுக்கு குஜராத் காவல்துறையும் உதவியதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின. 2002 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸுக்கு பேட்டியளித்த நரேந்திர மோடி, குஜராத் கலவரத்தை கையாண்ட விதம் திருப்தியளிப்பதாக கூறியதுடன் ஊடகங்கள் முறையாக செய்தி வெளியிடவில்லை என்று குற்றம்சாட்டினார்.

 மோடிக்கு தடை விதித்த அமெரிக்கா, பிரிட்டன்

மோடிக்கு தடை விதித்த அமெரிக்கா, பிரிட்டன்

மோடியை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. ஆனால் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதே நேரம் குஜராத் கலவரத்தை காரணம்காட்டி நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வரக்கூடாது என விசா தடை விதிக்கப்பட்டது. இதனால் 2014-ல் பிரதமராகும் வரை அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. அதேபோல் 2002 முதல் 2012 வரை நரேந்திர மோடியை ராஜாங்க ரீதியாக பிரிட்டன் புறக்கணித்தது.

உச்சநீதிமன்றத்தில் 2,000 வழக்குகள்

உச்சநீதிமன்றத்தில் 2,000 வழக்குகள்

குஜராத் கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனை தொடர்ந்தே குஜராத் கலவரத்துக்கு காரணமானவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அப்போது, கலவர நேரத்தில் பேசப்பட்ட செல்போன் அழைப்புகளின் குரல் பதிவு ஆதாரங்களை போலீசார் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் வழங்கினர். இது குற்றவாளிக்கு எதிரான மிக முக்கிய சாட்சியாக இருந்தது. 2011 ஆம் ஆண்டு 33 முஸ்லிம்கள் கொலை வழக்கில் 31 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

மன்னிப்பு கேட்ட மோடி

மன்னிப்பு கேட்ட மோடி


கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக நரேந்திர மோடி தெரிவித்தார். 6 கோடி குஜராத் மக்களும் தன்னை மன்னிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நரேந்திர மோடி இந்திய பிரதமராகி 8 ஆண்டுகள் கடந்தும்கூட குஜராத் கலவரம் தொடர்பாக அவர் மீது மக்கள் மனதில் பதிந்த கரைகள் இன்னும் நீங்கவில்லை.

ஜக்கியா ஜாஃப்ரி வழக்கு

ஜக்கியா ஜாஃப்ரி வழக்கு

இந்த கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், நரேந்திர மோடி, போலீஸ் உயரதிகாரிகள் உட்பட 59 பேர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை மறு ஆய்வு செய்யக்கோரி கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கு அஹமதாபாத் மாஜிஸ்திரேட் மற்றும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜக்கியா ஜாஃப்ரி மற்றும் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து இன்றைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று நரேந்திர மோடிக்கு எதிரான ஜக்கியா ஜாஃப்ரியின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

English summary
Timeline of Cold blood massacre - Gujarat Riots: 2002 குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கும் நிலையில், குஜராத் கலவரத்தின் தொடக்க புள்ளியிலிருந்து இன்று வரை நடந்த நிகழ்வுகளின் கால வரிசையை பார்க்கலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X