விவசாயி உடலில் துப்பாக்கி குண்டுகள் இல்லை... உண்மையை அம்பலப்படுத்திய அறிக்கை
டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒரு விவசாயி உயிரிழந்ததற்கு காரணம், போலீசார் துப்பாக்கியால் சுட்டது இல்லை. அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் ஏதும் இல்லை. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தப் போக்கு அதிகரித்ததே உயிரிழப்பிற்கு காரணம் என்ற உண்மையை பிரேத பரிசோதனை அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது.
இதில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஒரு விவசாயி உயிரிழந்த சம்பவம் தான் பெரும் சர்ச்சையை கிளப்பியது. போலீசார் சுட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக வெளியான தகவல் பதற்றத்தை தீவிரப்படுத்தியது.
'வன்முறையைத் தூண்டும் செய்திகள் கண்ணுக்கு தெரியலையா?' - சுப்ரீம் கோர்ட் கடும் தாக்கு

விவசாயி உயிரிழந்தது எப்படி
பேரணியில் நவ்னீத்சிங்( வயது 24) என்ற விவசாயி வேகமாக ஓட்டி வந்த டிராக்டர் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி கவிழ்ந்ததில் அவர் உயிரிழந்தார். ஆனால், நவனீத் சிங்கை போலீசார் சுட்டு கொன்றதாக தவறான செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த டில்லி போலீசார் வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தனர்.

உண்மையை சொன்ன பிரேத பரிசோதனை அறிக்கை
இந்நிலையில், நவ்னீத்சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. இதில், விவசாயி தலையில் எந்தவித புல்லட் காயங்களும் இல்லை. தலையில் ஏற்பட்ட பலத்த காயம், அதனால் ரத்தப்போக்கு அதிகரித்தது தான் காரணம் என அவரது சொந்த மாவட்டமான ராம்பூரின் போலீஸ் உயரதிகாரி உ.பி.,யில் தெரிவித்தார்.

உறுதி செய்த அதிகாரிகள்
ராம்பூர் மாவட்ட கலெக்டர் ஆஞ்சநேய குமார் சிங் கூறுகையில் , ‛பிரேத பரிசோதனையின் போது நவ்னீத்சிங்கின் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். அவரது தலையில் புல்லட் காயம் இருந்திருந்தால், பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்திருக்கும். பிரேத பரிசோதனையை வீடியா பதிவும் செய்யப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவ அலுவலரால் கண்காணிக்கப்பட்டது,' எனக்கூறினார். எஸ்.பி., ஷோகன் கவுதம் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் புல்லட் காயங்கள் இல்லை. எக்ஸ்ரே.,யும் எடுக்கப்பட்டது அதிலும், புல்லட் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தவிர முகம், கால்களில் 6 காயங்கள் இருந்தன,' என்றார்.

அறிக்கை முழு விபரம்
பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு தான் மரணத்திற்கு காரணம். நவ்னீத் சிங்கின் உடலில் ஆறு காயங்கள் ஏற்பட்டன. புருவத்திற்கு அருகில், அவரது வாயின் அருகே, வலது காதுக்கு மேல், மற்றும் வலது தொடையில் சிதைவுகள் ஏற்பட்டிருந்தன. அவர் இடது காதில் மண்டை ஓட்டின் மேல் வீக்கம் இருந்தது. மார்பின் வலது பக்கத்தில் பலமான காயம் இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.