உதய்பூர் கொலை.. ஹேல்மெட் உடன் பைக்கில் பறந்த கொலையாளிகள்! சுற்றிவளைத்த போலீஸ்! பரபர சிசிடிவி வீடியோ
டெல்லி: உதய்பூர் டெய்லர் கொலை சம்பவம் தொடர்பான முக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
Recommended Video - Watch Now
பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளராக இருந்த நுபர் சர்மா, டிவி நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் எதிர்ப்புகளைக் கிளப்பிய நிலையில், அவர் மீது பாஜக கட்சி ரீதியான நடவடிக்கை எடுத்தது. அவர் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உதய்பூர் டெய்லர் கொலை வழக்கு! இஸ்லாம் இதை போதிக்கவில்லை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

உதய்பூர் டெய்லர்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஹாதி போல் பகுதியில் சுப்ரீம் டெய்லர்ஸ் என்ற டெய்லர் கடையை நடத்தி வந்தவர் கன்ஹையா லால். இவர் நுபர் சர்மாவுக்கு ஆதரவாகத் தனது சமூக வலைத்தள பக்ககங்களில் பதிவிட்டுள்ளார். இதற்காக ஏற்கனவே அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அவரிடம் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு ஏற்கனவே இது தொடர்பாகக் கொலை மிரட்டல் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கொலை
இந்தச் சூழலில் அவர் நேற்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் இந்தச் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தும் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் இருவர் முதலில் துணியைத் தைக்கக் கொடுப்பது போல அவரது கடைக்குச் சென்றுள்ளனர். கன்ஹையா லால் துணிக்கு அளவு எடுக்கும் போது, திடீரென அவரை தாக்கத் தொடங்கி உள்ளனர். அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல், "என்ன பிரச்சினை.. என்னாச்சு!" என்று கன்ஹையா லால் கேட்கிறார்.

மிரட்டல்
அப்போது அவரை கழுத்தை அழுத்து கொலை செய்தனர். இஸ்லாம் மதத்தை அவமதித்தால் கொலை செய்ததாகத் தெரிவித்த அவர்கள், பிரதமருக்கும் கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் ஏற்படாமல் இருக்க ராஜஸ்தானில் இணையச் சேவை முடக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரிக்கத் தேசியப் பாதுகாப்பு முகமை களமிறக்கப்பட்டு உள்ளது.

பைக்கில் பறந்த கொலையாளிகள்
கொலையாளிகள் இருவரையும் ராஜஸ்தான் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இதனிடையே அவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான தகவல்களும் அது தொடர்பான வீடியோக்களும் இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. கொலை செய்த உடனே இருவரும் தயாராக இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு உதய்பூர் புறநகர்ப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றுள்ளனர்.

மடக்கி பிடித்த போலீஸ்
அவர்கள் ஹேல்மெட் அணிந்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து உள்ளனர். கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சிசிடிவி காட்சிகளின் உதவி உடன் அவர்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்களைச் சேகரித்த போலீசார், உதய்பூர் சாலையில் தடுப்புகளை அமைத்துப் பிடித்துள்ளனர். அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற போது, அவர்களைச் சுற்றி வளைத்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
|
காங்கிரஸ்
இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இதனைக் காங்கிரஸ் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் நிதின் அகர்வால் பதிவிட்டுள்ளார். உதய்பூர் கொலை விவகாரத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் காங்கிரஸ் ஆளும் உத்தரப் பிரதேசத்தில் சமூக விரோதிகளுக்கு இடம் இல்லை என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.