மகாராஷ்டிரா குழப்பம்.. பின்னால் இருப்பது பாஜக தான்.. அடித்துச் சொல்லும் ஆதித்ய தாக்கரே! பரபர பேச்சு
டெல்லி: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் தொடரும் நிலையில், ஆதித்ய தாக்கரே அதிருப்தி எம்எல்ஏக்களை கடுமையாகச் சாடி உள்ளார்.
மகாராஷ்டிரா அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் இப்போது அசாம் மாநிலத்தில் இருக்கும் ஹோட்டலில் உள்ளார்.
முதலில் 16 எம்எல்ஏக்கள் மட்டுமே ஷிண்டே ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், அது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது.
கொரோனாவிலிருந்து குணமடைந்த மகாராஷ்டிரா ஆளுநர்.. பணிக்கு திரும்பியதால் அரசியல் களம் விறுவிறுப்பு

அதிகரிக்கும் ஆதரவு
இப்போது ஷிண்டே தனக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறி உள்ளார். உண்மையில் 40 எம்எல்ஏக்கள் இருந்தால் அவரால் கட்சி தவால் தடை சட்டத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ள முடியும். சில நாட்களுக்கு முன்பு வரை பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை உடன் இருந்த உத்தவ் தாக்கரே அரசு, இப்போது சொந்த கட்சி எம்எல்ஏக்களால் மைனாரிட்டி அரசாக மாறிப் போயுள்ளது.

ஆலோசனை
இதனால் சிவசேனா- என்சிபி- காங்கிரஸின் மகா விகாஸ் கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை என்சிபி மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளிப்படையாக இந்த விவகாரத்தில் கருத்து கூறவில்லை. ஒட்டுமொத்த கட்சியும் தனது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருந்த தாக்கரேவுக்கு இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிவசேனா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

ஆதித்ய தாக்கரே
சமீபத்தில் தான் உத்தவ் தாக்கரே தலைமையில் அக்கட்சின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தான் 17 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில் இன்றைய தினம் சிவசேனா இளைஞரணி சார்பில் கூட்டம் நடைபெற்றது. அதில் உத்தவ் தாக்கரே மகனும் எம்எல்ஏவுமான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். அதில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் குறித்து காட்டமான கருத்துகளை முன்வைத்தார்.

துணிச்சல் இருந்தால்
அங்கு பேசிய ஆதித்ய தாக்கரே, "இவர்கள் துணிச்சல் இருந்தால் நேருக்கு நேர் வந்து பேச வேண்டும். ஏக்நாத் ஷிண்டேவுக்கு தானேவில் இருந்து கொண்ட இதுபோல நடந்து கொள்ளத் தைரியம் இல்லை. இதனால் தான் அவர் பயந்துபோய் சூரத் சென்றார். இந்த விவகாரத்தை நாம் மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும். வீதி வீதியாக இறங்கி ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

பதவி ஆசை
எந்தவொரு பிரச்சினை வந்தாலும் நாம் அஞ்சி ஓடக் கூடாது. உண்மையான புலிகளைப் போல இருக்க வேண்டும். உத்தவ் தாக்கரேவுக்கு பதவி மீது எல்லாம் ஆசை இல்லை. அனைவரும் கேட்டுக் கொண்டதால் தான் அவர் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார். கடந்த மே 30ஆம் தேதியே ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை வழங்குவதாக உத்தவ் தாக்கரே கூறி இருந்தார்.

பின்னால் இருப்பது பாஜக
உத்தவ் தாக்கரேவின் உடல்நிலை இப்போது பாதிக்கப்பட்டு உள்ளது. நேரடியாக எதிர்கொள்ள துணிச்சல் இல்லாமல் ஷிண்டே இந்த நேரத்தைப் பயன்படுத்துகிறார். இந்த விவகாரத்தில் பாஜக தான் பின்னால் உள்ளது. பாஜகவுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றால், அசாமில் இருக்கும் எம்எல்ஏக்களை அவர்களது ஆட்கள் ஏன் சந்திக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

பாஜக
இதுவரை இந்த விவகாரத்தில் பாஜக கருத்துச் சொல்லவில்லை அது சிவசேனாவின் உட்கட்சி பிரச்சினை என்றும் இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றுமே பாஜக தொடர்ச்சியாகக் கூறி வந்தது. இதனிடையே திடீர் திருப்பமாக நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஏக்னாத் ஷிண்டே சந்தித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர அரசியல் குறித்து இரு தரப்பும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.