தப்பி தவறியும் கங்கை நதியில் நீராட வேண்டாம்! உச்சத்தில் பாக்டீரியா! தேசிய பசுமை தீர்ப்பாயம் வார்னிங்
டெல்லி: கங்கை நிதி மிக மோசமாக மாசுபட்டு இருப்பதால் மேற்கு வங்கத்தில் உள்ள கங்கையில் யாரும் நீராட வேண்டாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பரபர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நமது நாட்டில் இந்துக்கள் புனிதமாக நினைக்கும் விஷயங்களில் ஒன்று கங்கை. இமயமலையில் உருவாகும் இந்த கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் கழியும் என்பது இந்துக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.

கங்கை நதி: ஆனால், கங்கை நதி மிக மோசமாக மாசுபட்டு இருப்பதால் அங்கே யாரும் நீராட வேண்டாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தி இருக்கிறது. மலக் கோலிஃபார்ம் என்ற பாக்டீரியாவின் அளவு அதிகமாக இருப்பதால், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கங்கை நதியின் முழுப் பகுதியும் குளிப்பதற்குத் தகுதியற்றதாக இருப்பதாகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்பகுதியில் உள்ள கங்கை நதியில் ஒவ்வொரு நாளும் 258.67 மில்லியன் லிட்டர்கள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாகப் பாய்வதாகப் பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது. இது மிகப் பெரிய சுகாதார அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களிலும் கங்கை நதி மாசுபடுவதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும், குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த பகீர் விவகாரம் தெரிய வந்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயம்: இதனால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் நிலையில், கங்கை நீர் மாசுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மேற்கு வங்க அரசு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து இருந்த நிலையில், அதைத் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்தே இந்த காட்டமான கருத்துகளைத் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
வடக்கு 24 பர்கானாஸ், முர்ஷிதாபாத், நாடியா, மால்டா, ஹூக்ளி, புர்பா பர்த்வான், ஹவுரா, பர்பா மேதினிபூர் எனப் பல மாவட்டங்களில் அறிக்கையை ஆய்வு செய்த தீர்ப்பாயம் கங்கை நதியின் நிலை மோசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக 24 பர்கானாஸ். மாநிலம் முழுவதும் போதுமான கழிவுநீர் சுத்திகரிப்பு இல்லை. பூர்பா மேதினிபூர் போன்ற சில மாவட்டங்களில், ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
கங்கையில் கலக்கும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மேற்கு வங்க அதிகாரிகளுக்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாகத் தேசிய பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் கூறுகையில், "நாளொன்றுக்கு உற்பத்தியாகும் கழிவுநீரைச் சுத்திகரிக்க போதுமான வசதிகள் இல்லை. 100 சதவீத கழிவுநீர் சுத்திகரிப்பு என்ற இலக்கை அடையக் காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
பூர்பா மேதினிபூர் போன்ற சில மாவட்டங்களில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியத்தைத் தருகிறது. கழிவுநீரை 100 சதவீதம் சுத்திகரிக்கும் இலக்கை அடைய உடனடியாக காலக்கெடுவை நிர்ணயம் செய்யுங்கள்.. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை நதியில் அதிக மலக் கோலிஃபார்ம் இருப்பதால், அந்த நீர் குளிக்கக் கூட தகுதியற்றதாக உள்ளதாகத் தெரிவித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், அங்கே நீராட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications