குறைய தொடங்கும் கொரோனா பாதிப்பு - 9 மாநிலங்களுடன் மத்திய அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா ஆலோசனை
டெல்லி: இந்தியாவில் கொரோனா அதிஉச்ச பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில் 9 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று காலை ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கடந்த சில ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்ததாக இருந்தது. இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேர நிலவரப்படி இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,55,874 என குறைந்துள்ளது.
முந்தைய நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிடுகையில் 50,190 குறைவாகும். திங்கள்கிழமையன்று 3,06,064 என கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமையைவிட 28,000 குறைவாகும்.
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 614 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 2,67,753 மீண்டுள்ளனர். நாட்டில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,36,842 ஆக உள்ளது.

இந்நிலையில் கொரோனா நிலவரம் தொடர்பாக 9 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், டெல்லி, லடாக், உ.பி, சண்டிகர் ஆகியவற்றின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் உ.பி. மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.
முன்னதாக மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளில் மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியிருந்தார். இம்மாதத்தின் தொடக்கத்தில் பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்