'உலகத்திலேயே நாம தான் பெஸ்ட்.. எத்தனை பிரச்சினையை அசால்டா டீல் பண்ணியிருக்கோம்..' அமித் ஷா பெருமிதம்
டெல்லி: சர்வதேச நாடுகள் மத்தியில் கொரோனாவை இந்தியா தான் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், வைரஸ் மட்டுமின்றி புயல் பாதிப்புகளையும் இந்தியா சிறப்பாகக் கையாள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா பரவலை இந்தியா மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளதாகப் புகழாரம் சூட்டினார்.
முதல் லைனில் அடங்கியிருக்கும் மர்மம்.. ரிட்டையர் ஹர்ட் ஆன சிக்ஸர் சித்து.. யார் இவர்? என்ன பின்னணி?

மிகச் சிறப்பாகக் கையாண்டோம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித் ஷா, "கொரோனா காலத்தை நாம் மிகச் சிறப்பாகக் கையாண்டோம். நடுநிலையான எந்த ஒரு நிறுவனம் ஆய்வு செய்தாலும் கொரோனாவை நாம் மிகச் சிறப்பாகக் கையாண்டதாகவே கூறுவார்கள். இந்த வித்தியாச வைரஸுக்கு எதிராக தீர்க்கமான உறுதியுடன் போராடிய சிறந்த நாடு இந்தியா தான். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமக்கு போதிய வளங்களும் உள்கட்டமைப்பு இல்லை. இருந்தாலும் கூட கொரோனாவுக்கு எதிராக இந்த போரை நாம் மிகச் சிறப்பாகக் கையாண்டோம்.

குறைவான உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்பு விகிதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், சர்வதேச அளவில் நாம் தான் மிகக் குறைவான உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டிருக்கிறோம்" என்றார். இந்தியாவில் கடந்த மே மாதம் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு அதன் பின்னர் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 18,795 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு தினசரி வைரஸ் பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் செல்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 192 நாட்களில் இல்லாத அளவுக்கு 2.92 லட்சமாகக் குறைந்துள்ளது.

புயல்கள்
இந்தியாவின் சிறப்பான செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அமித் ஷா, "மற்ற நாடுகள் கொரோனாவுடன் மட்டும் போராடிக் கொண்டிருந்த போது, நாம் வேறு சில பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டில் கொரோனா 2ஆம் அலை உச்சம் பெற்ற போது, டவ் தே மற்றும் யாஷ் என்று 2 வகையான புயல் பாதிப்புகளை நாம் எதிர்கொண்டோம். இருப்பினும், தொடர்ந்து சீராகக் கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்ததால் எந்தவித உயிரிழப்புகளும் இல்லாமல் நம்மால் தடுக்க முடிந்தது" என்றும் அவர் தெரிவித்தார்.

அமித் ஷா பாராட்டு
தொடர்ந்து கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க ரயில்கள் மூலம் ஆக்சிஜன்கள் கொண்டு செல்லப்பட்டது குறித்துப் பேசிய அமித் ஷா, "ஆக்ஸிஜனை எடுத்துச் சென்ற எந்தவொரு ரயிலும் விபத்தில் சிக்கவில்லை. ஆக்சிஜன் கசிவும் ஏற்படவில்லை. அனைத்து ரயில்களும் மிகவும் பாதுகாப்பாகவே இயங்கின. அதேபோல அந்த சமயத்தில் மின்வெட்டு காரணமாக ஒரு உயிரிழப்பைக் கூட நாம் சந்திக்கவில்லை. சரியான நேரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்திடம் தேவையான தகவல்கள் இருந்தன. இதன் மூலம் தேவையான நடவடிக்கைகளை அவர்களால் விரைவாக எடுக்க முடிந்தது" என்றும் அவர் குறிப்பிட்டார்.