குதுப்மினார் கோபுர வளாகத்தை ஆய்வுக்கு தோண்ட உத்தரவா? சர்ச்சைக்கு நடுவே மத்திய அமைச்சர் விளக்கம்
டெல்லி: குதுப்மினார் கோபுரத்தை இந்து மன்னர் விக்ரமாதித்யா கட்டியதாகவும், அருகே உள்ள மசூதி கோவில்கள் இடித்து கட்டப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து குதுப்மினார் கோபுரத்தின் வளாகத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா என்பது பற்றி மத்திய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக வழிபாட்டு தலங்கள், புராதன சின்னங்கள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்து வருகிறது. குறிப்பாக கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாக இந்துத்துவ அமைப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதான் ஞானவாபி மசூதியில் கிடைத்த லிங்கமா? தீயாக பரவும் போட்டோ.. கடைசியில் பார்த்தால்..!
சமீபத்தில் கூட உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹால் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக பாஜக எம்பி தியாகுமாரி கூறினார். இதையடுத்து தாஜ்மஹால் ரகசிய அறையில் இந்து கடவுள்களின் சிலைகள் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினர்.

ஞானவாபி வழக்கு
இதற்கு மத்தியில் உத்தர பிரதேசம் மாநிலம் ஞானவாபி மசூதியின் சுவரில் இந்து கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும், தினமும் வழிபாடு நடத்த அனுமதிக்க கோரியும் 5 இந்து பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஆய்வுக்கு உத்தரவிட்டது. அப்போது மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு வாரணாசி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

குதுப்மினார் சர்ச்சை
இதற்கிடையே தான் இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தரம்வீர் சர்மா புதிய சர்ச்சையை கிளப்பினார். அதாவது டெல்லி குதுப்மினார் கோபுரம் குத்புதீன் ஐபக்கால் கட்டப்படவில்லை. இந்த கோபுரத்துக்கும் அருகே உள்ள மசூதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக இந்த கோபுரத்தை இந்து மன்னரான விக்ரமாதித்யா கட்டினார். சூரியனின் நகர்வை கண்டறியும் வகையில் 25 அங்குலம் சாய்த்து இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன'' என்றார். இது பெரும் விவாதப்பொருளானது. இவரது இந்த கூற்றை முஸ்லிம் அமைப்பினர் மறுத்தனர்.

ஆய்வுக்கு உத்தரவு
இந்நிலையில் தான் குதுப்மினார் கோபுரத்தின் வளாகத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இன்று மதியம் தகவல்கள் வெளியாகின. இதனால் குதுப்மினார் கோபுரம் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் விரைவில் ஆய்வு துவங்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் இதனை மத்திய காலச்சாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதுபற்றி அந்த துறையின் அமைச்சர் ஜிகே ரெட்டி இன்று மாலை விளக்கம் அளித்தார். அப்போது குதுப்மினார் ஆய்வு குறித்து எந்த உத்தவும் பிறப்பிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

தொடரும் சர்ச்சை
டெல்லியின் மெஹரோலி பகுதியில் உள்ள இந்த குதுப்மினார் கோபுரம் புராதான சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன் அருகே உள்ள மசூதியானது 20க்கும் அதிகமான கோவில்களை இடித்து கட்டப்பட்டுள்ளதாக இந்துத்துவ அமைப்பினர் சார்பில் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆய்வுக்கு உத்தரவு விடப்பட்டுள்ளதாக மீண்டும் சர்ச்சையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.