ராமர் சிலை வைத்த சாது முதல் துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞர்கள் வரை.. போற்றப்படக்கூடிய 10 ஹீரோக்கள்
டெல்லி: சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்கான இயக்கத்தில் பலர் போராடியுள்ள நிலையில் குறிப்பாக 1980 முதல் 1990 வரை போராடிய 10 பேர் யார் யார் என்பதை பார்ப்போம்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்டுவது என்பது பெரும் பிரச்சினையாக இருந்தது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் நீங்கி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது.
இந்த நேரத்தில் 1980-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை ராமர் கோயில் இயக்கத்தில் போராடிய 10 ஹீரோக்கள் குறித்து பார்ப்போம்.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி... வீட்டில் தாய் பூரிப்பு!!

பைராகி அபிராம் தாஸ்
பைராகி அபிராம் தாஸ்- பீகார் மாநிலம் தர்பங்காவில் பிறந்தவர். இவர் ராமானந்தி பிரிவை சேர்ந்த ஒரு சன்னியாசி. இவருக்கு வாரியர் சாது என்ற பெயரும் உள்ளது. அதாவது போராளி சாது. இவர் கடந்த 1949-ஆம் ஆண்டு டிசம்பர் 22- 23 ஆம் தேதிகளில் இரவு நேரத்தில் ராமர் பிறந்த இடத்தில் ஒரு சிலையை வைத்தார். அதிலிருந்து இவருக்கு வாரியர் சாது என்ற பெயர் உருவானது. அந்த நேரத்தில் இவர்தான் முக்கிய குற்றவாளியாவார். இவர் இந்து மகாசபாவின் உறுப்பினராக இருந்தவர். இவர் மல்யுத்தக் கலையில் தேர்ச்சி பெற்றவர். இவர் 1981ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

தேவராஹா பாபா
தேவராஹா பாபா- இவரும் அனைவராலும் அறியப்படும் துறவியாவார். இவர் பிறந்த இடமும் பிறந்த ஆண்டும் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இவர் உத்தரப் பிரதேசத்தில் தியோராவில் சரயு ஆற்றின் கரையில் தங்கியிருந்தார். இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்டோர் இவரது பக்தர்கள் ஆவர். இவர் 1984ஆம் ஆண்டு தர்ம சன்சத்தை தலைமையேற்று நடத்தினார். இங்குதான் 1989-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்ட வேண்டும் என அனைத்து ஆன்மிகவாதிகள் மற்றும் இந்து மதகுருமார்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவதற்கு முன்னர் ராஜீவ் காந்தி பாபாவிடம் கேட்ட போது மகனே அது நிச்சயம் நடக்கும் என ஆசிர்வதித்தார்.

மோரோபந்த் பிங்கிள்
மோரோபந்த் பிங்கிள்- இவர் நாக்பூரில் உள்ள மோரிஸ் கல்லூரியில் படித்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்தவர். ராமர் கோயில் கட்டுவதற்காக முக்கிய யாத்திரைகளையும், நாடு முழுவதும் பிரசாரங்களை முன்னெடுப்பதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். சிலை பூஜை நிகழ்ச்சிக்காக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கற்களை அயோத்திக்கு அனுப்பி வைத்தார். இவர் அனைவராலும் அறியப்படாதவர். திரைமறைவிலிருந்து அனைத்து பணிகளையும் செய்பவர். 1980-களில் கோயில் கட்டும் இயக்கத்திற்காக முக்கிய வியூகம் வகுத்தவர்.

மஹாந்த் அவைத்யநாத்
மஹாந்த் அவைத்யநாத்- 1980களில் தொடங்கப்பட்ட ராம்ஜென்ம பூமி முக்தி யாக்யா சமிதி என்ற இயக்கத்தின் முதல் தலைவர் இவராவார். இவர் மற்றொரு இயக்கத்தின் ராம் ஜென்ம பூமி நியாஸ் சமிதியின் தலைவருமாவார். இந்த இயக்கமும் ராமர் கோயில் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. இவரது இயற்பெயர் கிரிபா சிங் பிஷ்ட். இவர் உத்தரப்பிரதேசத்தில் கோரக்ஷா பீடத்தின் தலைவராக இருந்த மஹாந்த் திக் விஜயநாத்தின் பக்தர் ஆவார். இவர் 1940-ஆம் ஆண்டு முதல் மஹாந்த் அவைத்யநாத் என்ற பெயரை பெற்றார். 1969-ஆம் ஆண்டு கோரக்ஷா பீடத்தின் தலைவராக உயர்ந்தார். இவர் இந்து மகாசபையின் உறுப்பினராவார். இவர் கோரக்பூரின் 5 முறை எம்எல்ஏவாகவும், 4 முறை எம்பியாகவும் இருந்தார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இவர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

வாம்தேவ்
சுவாமி வாம்தேவ்- இவர் மென்மையாக பேசும் துறவியாவார். பசு பாதுகாப்பில் தீவிரமாக இருந்தவர். 1984ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் அனைத்து இந்து மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகளையும் ஒன்றிணைத்தவர் வாம்தேவ். ராமர் கோயில் இயக்கத்திற்காக 15 நாட்களில் 500-க்கும் மேற்பட்ட இந்து மதத்தலைவர்களை ஒன்றிணைத்தார். 1990ஆம் ஆண்டு அயோத்தியில் கர சேவகர்களை முன்னின்று இயக்கினார் சுவாமி வாம்தேவ். அப்போது முலாயம்சிங் யாதவ் அரசால் ஏராளமானோர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தள்ளாத வயதிலும் கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றார்.

ஷ்ரீஷ் சந்திர தீட்சித்
ஷ்ரீஷ் சந்திர தீக்ஷித்- ராமர் ஜென்ம பூமி இயக்கத்தின் முக்கிய முன்கள வீரராக இருந்தார். இவர் 1982 முதல் 1984-ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச போலீஸின் டிஜிபியாக இருந்தவர். பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அவர் விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் துணை தலைவராக பொறுப்பேற்றார். அயோத்தியில் ராமர் கோயில் இயக்கத்தில் பங்கேற்றதால் 1990ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் பாஜக சார்பில் வாரணாசியில் 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டு எம்பியானார்.

விஷ்ணு ஹரி டால்மியா
விஷ்ணு ஹரி டால்மியா- அனைவராலும் அறியப்படும் தொழிலதிபர். இவர் 1992-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆம் ஆண்டு வரை விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவராக இருந்தார். இவரும் ராமர் ஜென்ம பூமி இயக்கத்தின் தலைவர்களுள் முக்கியமானவராவார். 1985ஆம் ஆண்டு ஸ்ரீ ராம் ஜென்ம பூமி நிவாஸ் தொடங்கியபோது அதன் பொருளாளராக இருந்தார். பாபர் மசூதி இடிப்பின் போது கைது செய்யப்பட்டவர்.

தவுதயாள் கன்னா
தவுதயாள் கன்னா- ராமர் ஜென்ம பூமி முக்தி சமிதியின் பொதுச் செயலாளர் ஆவார். ராமர் கோயில் இயக்கத்திற்காக அடிமட்ட அளவில் இருந்து பணியாற்றியவர். இவர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். 1960-ஆம் ஆண்டு களில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர். மதுரா, வாரணாசியில் கடந்த 1983-ஆம் ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயிலை மீண்டும் கட்டுவது குறித்த விவகாரத்தை எழுப்பியவர்களில் ஒருவர். இவரது முன்னெடுப்புதான் ராமர் ஜென்ம பூமி இயக்கம் தொடங்க காரணமாயிற்று. பீகாரில் சீதாமர்ஹியில் 1984ஆம் ஆண்டு நடந்த முதல் யாத்திரையை முன்னெடுத்து நடத்தியவர் இவர்.

கோதாரி சகோதரர்கள்
கோதாரி சகோதரர்கள்- ராம் குமார் கோதாரி (23), சரத்குமார் கோதாரி (20) ஆகியோர் சகோதரர்கள். இவர்கள் கொல்கத்தாவிலிருந்து அயோத்தியாவுக்கு கடந்த 1990-ஆம் ஆண்டு வந்தார்கள். இவர்கள் கரசேவையில் 1990இல் கலந்து கொண்டார்கள். இரு நாட்கள் கழித்து நவம்பர் 2-ஆம் தேதி இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர். இறக்கும் போது இருவருக்கும் 23 மற்றும் 20 வயதுடையவர்கள். இவர்கள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் இந்துக்கள் முன்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ராமர் ஜென்ம பூமி இயக்கத்தின் ஹீரோக்களாக இவர்கள் போற்றப்படுகிறார்கள். இவர்களது இறப்பு இந்த அமைப்புக்கு நிறைய இளைஞர்களை கொண்டு வந்து குவித்தது. கைகளைக் கொண்டு பிறருக்கு தொண்டு செய்வது, வழிபாட்டிற்கான இறைவனின் ஆலயம் கட்டுதல் போன்ற செயல்கள் சீக்கிய சமய வரலாற்றில் கரசேவை என்பர். இதை செய்பவர்கள் கரசேவகர்கள் என்பர்.