அடேங்கப்பா.. காசி விஸ்வநாதர் கோவில் உருவ படத்துடன் வலம் வந்த உ.பி. அலங்கார ஊர்திக்கு முதல் பரிசாம்!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அனுமதிக்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநில அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி. மாநில அலங்கார ஊர்தியில் காசி விஸ்வநாதர் கோவில் உருவப் படங்கள் இடம்பெற்றிருந்தன.
பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் பிப்ரவரி 6-ல் அறிவிப்பு
நாட்டின் 73-வது குடியரசு தினம் ஜனவரி 26-ந் தேதி கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு
தமிழகம் சார்பில் வீரத்தாய் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சிதம்பரனார், பாரதியார் உருவப் படங்களுடனான அலங்கார ஊர்தியின் மாதிரி அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை. இது மிகப் பெரும் சர்ச்சையானது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் இந்த அனுமதி மறுப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, மேற்கு வங்கம் என பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கும் மத்திய அரசு அனுமதி தரவில்லை.

சென்னை டூ தமிழகம் முழுவதும்..
இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அதே அலங்கார ஊர்தி இடம்பெற்றது. அத்துடன் தந்தை பெரியார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஊர்திகளும் இடம்பெற்றன. மத்திய அரசு அனுமதி மறுத்ததால் சென்னை குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் வலம் வந்தன. இந்த அலங்கார ஊர்திகளுக்கு பொதுமக்கள் மிகப் பெரும் வரவேற்பும் அளித்தனர்.

உ.பி.க்கு விருது
இந்நிலையில் டெல்லி ராஜபாதையில் அணிவகுத்த அலங்கார ஊர்திகளில் சிறந்ததாக உ.பி. மாநில அரசின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. உ.பி. அரசின் அலங்கார ஊர்தியில் காசி விஸ்வநாதர் கோவில் உருவப் படங்கள் இடம்பெற்றிருந்தன. உ.பி.யில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அம்மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசை மத்திய அரசு வழங்கியிருப்பது விவாதத்துக்குரியதாகி உள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது. ராஜபாதையில் நடத்தப்பட்ட அணிவகுப்புகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு சிறப்பானதாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு குழு
இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடியரசு தின அணிவகுப்பு 2022-ன் சிறந்த அலங்கார ஊர்தி மற்றும் சிறந்த அணிவகுப்புக் குழுக்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள்/ பிற துணைப் படைகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புக் குழுக்கள் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் அலங்கார ஊர்திகளை மதிப்பிடுவதற்கு மூன்று நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. நீதிபதிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், இந்திய கடற்படை அணிவகுப்புக் குழு முப்படைகளில் சிறந்த அணிவகுப்புக் குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப் படைகள்/பிற துணைப் படைகளில் சிறந்த அணிவகுப்புக் குழுவாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உ.பி, மகாராஷ்டிரா கர்நாடகா
ஜனவரி 26, 2022 அன்று நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உத்தரப்பிரதேசத்தின் அலங்கார ஊர்தி சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டிருந்தது. கர்நாடகாவிற்கு இரண்டாவது இடமும், மேகாலயாவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. மக்கள் விருப்பத் தேர்வு பிரிவில் மகாராஷ்டிரா மாநில அலங்கார ஊர்தி வெற்றி பெற்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.