டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும்- அணு கழிவை கொட்ட கூடாது: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி: கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும்; அணு கழிவை அப்பகுதியில் கொட்டவும் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபாவில் ஆவேசமாக இன்று வலியுறுத்தினார்.

ராஜ்யசபாவில் பூஜ்ய நேரத்தில் வைகோ பேசியதாவது:

கற்பனை செய்து பார்க்க முடியாத பேரழிவை, பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அணுக்கழிவுகளை திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கொட்டப் போகின்ற செய்தியை,"இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விழைகின்றேன். 1988 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் இந்த அவையில் நடைபெற்ற ஒரு விவாதத்தை நினைவு கூர்கின்றேன்.

அப்போது இந்தியாவுக்கு வருகை தந்திருந்த சோவியத் ஒன்றியத்தின் தலைவர் மிக்காயில் கொர்பச்சோவ் அவர்களை வரவேற்று, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மக்கள் அவையிலும் மாநிலங்கள் அவையிலும் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் இந்தியாவில் ஒரு அணு உலை அமைக்கப் போவதாகத் தெரிவித்து இருந்தார்.

ஆனால் அது எந்த இடம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. மக்கள் அவையில் ஒருவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மாநிலங்கள் அளவையில் நான் மட்டுமே அந்த அறிக்கை எதிர்த்தேன். காரணம் அந்த அணுஉலையை எனது சொந்த மாவட்டமான திருநெல்வேலியில் கூடன்குளத்தில் அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. எனவே, அதை எதிர்த்து அந்தப் பகுதியில் வாழ்கின்ற பொது மக்களும் மீனவர்களும் போராட்டங்களை நடத்தினர். நான் தில்லியில் இருந்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை அழைத்துச் சென்று அந்தப் போராட்டத்தில் பங்கேற்கச் செய்தேன்.

கூடங்குளம்-ராஜீவுடன் மோதல்

கூடங்குளம்-ராஜீவுடன் மோதல்

எனவே, அதைக் குறிப்பிட்டு நீங்கள் அணு உலையை கூடங்குளத்தில் அமைக்க இருக்கின்ற செய்தியை உங்கள் அறிக்கையில் திட்டமிட்டு மறைத்து இருக்கின்றீர்கள் என்று குற்றம் சாட்டினேன். அப்போது பிரதமருக்கும் எனக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. அப்போது அவர், அனல் மின்சாரத்தில் இருந்தும்கூடத்தான் கதிரியக்கம் வெளிப்படுகின்றது. அதனால் பாதிப்பு இல்லை என்று சொன்னார். அப்போது நான் குறுக்கிட்டு, இப்படி ஒரு அரிய கண்டுபிடிப்பை அறிவித்து இருக்கின்ற நமது பிரதமர் பெரிய விஞ்ஞானிதான் என்று சொன்னேன்.

இரண்டு அணு உலை பேரழிவுகள்

இரண்டு அணு உலை பேரழிவுகள்

அப்போது நான், பேரழிவு ஏற்படுத்திய இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிட்டேன். 1978 மார்ச் 28ஆம் நாள் அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் ஒரு மிகப்பெரிய அணு உலை விபத்து நிகழ்ந்தது. அதேபோல 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தில் செர்னோபிலில் மற்றொரு பயங்கரமான அணு உலை வெடிப்பு நிகழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டார்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்தார்கள்.

ஐரோப்பாவில் அணு உலை இல்லை

ஐரோப்பாவில் அணு உலை இல்லை

அந்த மூன்று மைல் தீவு விபத்திற்கு பிறகு அமெரிக்கா இதுவரை தங்கள் நாட்டில் ஒரு அணு உலை கூட அமைக்கவில்லை. செர்நோபில் விபத்துக்குப் பிறகு இன்று வரையிலும் கூட உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கின்றன. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் இருந்த அணு உலைகளை மூடிவிட்டன. இப்போது எந்த ஐரோப்பிய நாடும் புதிய அணு உலைகளை அமைப்பது இல்லை.

புகுஷிமா அணு உலை வெடிப்பு

புகுஷிமா அணு உலை வெடிப்பு

2011 மார்ச் 11ஆம் நாள் ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் மிகப்பெரிய அணு உலை வெடிப்பு நிகழ்ந்தது. உலகை அதிர்ச்சியில் உறையச் செய்தது. அந்த விபத்து செர்னோபில் விபத்தை விடக் கொடியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் இறந்ததாக, ஜப்பானின் 13வது நகராட்சிகள் சான்றிதழ் அளித்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் புகுஷிமா சுற்றுவட்டார பகுதியை விட்டுப் புலம் பெயர நேர்ந்தது.

கூடங்குளம் அணு உலை பூங்கா

கூடங்குளம் அணு உலை பூங்கா

எனவே, கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரை என்ற கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாகப் பெண்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். ஆனால், ஏற்கனவே காயம்பட்ட புண்ணில் உப்பைத் தடவுவது போல அதே கூடங்குளத்தில் அணு உலை பூங்கா அமைக்கப்போவதாக நடுவண் அரசு அறிவித்து இருக்கின்றது. பண்டோரா என்ற கொரியப் படத்தில், அணு உலை வெடிப்பால் நிகழக்கூடிய பேரழிவுகளைச் சித்தரித்துக் காட்டுகின்றார்கள். இது ஆவணப்படம் அல்ல. இந்தப் படத்தில் இரண்டு லட்சம் கொரியர்கள் நடித்து இருக்கின்றார்கள்.

அணுக்கழிவை கொட்டுவதா?

அணுக்கழிவை கொட்டுவதா?

அவைத்தலைவர் அவர்களே அந்தப்படத்தை நீங்கள் பார்த்தால், கண்ணீர் வடிப்பீர்கள். நான் உங்களுக்கு அந்தப் படத்தின் குறுவட்டைத் தருகின்றேன். இப்போது கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டுவதற்கு மத்தியஅரசு திட்டமிட்டு இருப்பது திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களை அழித்துவிடும். இப்போது எத்தனையோ வழிகளில் புதுப்பிக்கத்தக்க மின் விசை பெறக்கூடிய கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. சூரிய ஒளியில் இருந்தும் காற்றில் இருந்தும் கடல் அலையில் இருந்தும் மின்சாரம் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம்.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அணு உலைகளை மூட வேண்டும் இனி புதிய அணு உலைகள் அமைக்க கூடாது என்று அரசை வலியுறுத்துகின்றேன். இவ்வாறு வைகோ பேசினார்.

வைகோ அவர்கள் இவ்வாறு பேசினார்.

வைகோ அவர்கள் பேசி முடித்தவுடன், பல உறுப்பினர்கள் வைகோ அவர்களின் பேச்சை ஆதரித்தனர். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்தனர்.

English summary
Rajyasabha MP Vaiko has urged that centre should be closed the Kudankulam Power Plants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X