டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி; இந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி இந்தியாவை அழைக்க வேண்டும் என ராஜ்யசபாவில் மதிமுக எம்.பி. வைகோ வலியுறுத்தினார்.

ராஜ்யசபாவில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் வைகோ பேசிய முதலாவது உரை:

Vaiko vehemently opposed UAPA bill in RS

என்னுடைய 55 ஆண்டுக் கால பொதுவாழ்க்கையில், இந்த நாள் மறக்க முடியாத நாள்! ஆம்; 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அவையில் இன்று என்னுடைய கன்னி உரை ஆற்றுகின்றேன். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வாய்ப்புகள்தாம், அவருக்குக் கிடைக்கின்ற பரிசு!

புகழ்பெற்ற கவிஞர் தாமஸ் கிரே எழுதிய Elegy written in a Country churchyard என்ற கவிதையின் ஒருசில வரிகளை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். அவர் ஒரு கல்லறைத் தோட்டத்துக்குள் நுழைகின்றார்; ஒவ்வொரு கல்லறையாகச் சுற்றிப் பார்க்கின்றார்; அழுகின்றார், கண்ணீர் உகுக்கின்றார். அடுத்துச் சொல்லுகின்றார்:- "இந்தக் கல்லறைக்குள் புதையுண்டு கிடக்கின்ற மனிதன் ஆலிவர் கிராம்வெல் போல அரசியல் தலைவன் ஆகி இருக்கலாம். ஆனால் அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த உலகத்தின் கவனத்திற்கு வராமலேயே மறைந்து போய்விட்டான்."

அடுத்தக் கல்லறையைப் பார்த்துச் சொல்லுகின்றார்:- "இந்தக் கல்லறையில் உறங்குகின்ற மனிதன், மில்டன் போன்ற கவிஞன் ஆகி இருக்கலாம். ஆனால் அவனுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை." அடுத்து ஒரு கல்லறையைப் பார்க்கின்றார்:- "இந்த மனிதன் வில்லேஜ் ஹேம்டன் போல ஆகி இருக்கலாம். ஆனால் அவனுக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை."

அடுத்து அவர் ஒரு கவிதை வடிக்கின்றார்.
ஆழ்கடலுள் புதைந்து கிடக்கின்ற சிப்பிகளுக்குள்
ஒளிரும் முத்துக்கள் உறங்கிக் கிடக்கின்றன
பாலைவனத்தில் மலர்கின்ற பூக்களின் நறுமணம்
வெப்பக்காற்றில் வீணாகிப் போகின்றன...
அதுபோல,
தக்க வாய்ப்புகள் இல்லை என்றால்,
திறமைகள் வெளிப்படாமல் முடங்கிப் போகின்றன

சரியான வாய்ப்புகள் கிடைக்காவிட்டால், எவ்வளவு திறமைகள் இருந்தாலும் பயன் இல்லை என்று அமெரிக்க அரசியல் சட்டத்தின் தந்தை தாமஸ் ஜெபர்சன் கூறுகின்றார். 41 ஆண்டுகளுக்கு முன்பு, 1978 ஆம் ஆண்டு மாண்புமிகு உறுப்பினர்கள் நிறைந்து இருந்த மாநிலங்கள் அவையில் இடம்பெறுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய பெருந்தலைவர்களின் வழிவந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி எனக்கு அந்த நல்ல வாய்ப்பை நல்கினார்கள். அவருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் நான் கடமைப்பட்டு இருக்கின்றேன். தி.மு.கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் முரசொலி மாறன் நாடாளுமன்றப் பணிகளில் என்னை வார்ப்பித்தார்கள். 1978 ஆம் ஆண்டு மே 2 ஆம் நாள் மத்திய - மாநில உறவுகள் குறித்த தனிநபர் மசோதா ஒன்றில் கன்னி உரை ஆற்றினேன்.

பூபேஸ் குப்தா, பேராசிரியர் என்.ஜி.ரங்கா போன்ற பெருந்தகையோர் என்னை வாழ்த்தினார்கள். 1984, 1990 ஆம் ஆண்டுகளில் கருணாநிதி என்னை மீண்டும் மாநிலங்கள் அவைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த அவையில் என்னுடைய மூன்றாவது பணிக்காலம் 1996 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அன்புச் சகோதரர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையோடும், பேரன்போடும் என்னை இந்த அவைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றார்கள். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

1998, 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் அவைத் தேர்தலில் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு பணியாற்றினேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தன்னிகர் அற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள், 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இதே மாநிலங்கள் அவையில் ஆற்றிய கன்னி உரையில் செய்த பிரகடனத்தை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். நான் ஒரு திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றேன். ஆனால் அப்படி நான் சொல்வதால், நான் வங்காளிகளுக்கோ, மராட்டியர்களுக்கோ, குஜராத்தியர்களுக்கோ எதிரானவன் என்று பொருள் அல்ல. எல்லோரும் சமம் என்று கருதுபவன்தான் முழுமையான மனிதன் என்று ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிடுகின்றார்.

இந்த நாட்டுக்கு, திராவிட இனம் என்பது, உறுதியான, முழுமை பெற்ற, மாறுபட்ட ஒன்றை, இந்த நாட்டுக்குத் தர வல்லது என்பதாலேயே, ஒரு திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை கொள்கின்றேன். இந்த அவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா, ஒரு அடக்குமுறைச் சட்டம் ஆகும். மனித உரிமை ஆர்வலர்கள், சிறுபான்மை மக்கள், இந்த அரசை எதிர்ப்பவர்களின் குரல்வளையை நெறிக்கின்ற சட்டம் ஆகும். நான் மிகுந்த வேதனையோடு குறிப்பிட விரும்புகின்றேன். முன்பு எவரெல்லாம் இந்தகைய அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டார்களோ, அவர்கள் பின்பு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு அவர்களே இந்தகைய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்தார்கள்.

பிரித்தானியர்களின் ஆட்சியின்போது பண்டித ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் இத்தகைய முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். ஆனால் விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை அவர்கள் ஏற்றபோது, அவர்களே மீண்டும் இந்தக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இந்திரா காந்தி அம்மையார், மன்னர் மானியத்தை ஒழித்து, 14 வங்கிகளை நாட்டு உடைமை தேசிய வங்கிகள் ஆக்கினார் பாராட்டுப் பெற்றார். வங்கதேச யுத்தத்தில் இந்தியா வெற்றி பெற்றபோது, நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தி அம்மையாரை, இந்தியாவின் துர்கா தேவியே வருக என்று, ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் வரவேற்றார். அலகாபாத் உயர்நீதிமன்றம் பிரதமர் இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்தபோது, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் பிரதமர் இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்கினார்.

லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் தலைமையில் ஜனசங்கம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். அதே நாள் இரவில் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜோதிர்மயி பாசு, மொரார்ஜி தேசாய், சரண் சிங், வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலை வர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மிசா என்ற உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜார்ஜ் பெர்ணான்டஸ் சில மாதங்களுக்குப் பின்பு கைதானார். இன்று இந்த அவையின் தலைவராகப் பொறுப்பு வகிக்கின்ற, இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்களும் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகம் நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணநிதி, நெருக்கடி நிலையை எதிர்த்து ஒரு தீர்மானம் இயற்றினார்கள். அந்தத் தீர்மானம்தான், 'இந்திய ஜனநாயகத்தின் மேக்னா கார்ட்டா' என்று நம்பூதிரிபாடு அவர்கள் கூறினார்கள். ஜனநாயகத்தைக் காக்க மேற்கொண்ட இந்த அறப்போராட்டத்தின் விளைவாக, 1976 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்பட்டது. நான் உட்பட 500 க்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டோம்.

நான் பாளையங்கோட்டை, சேலம் சிறைகளில் ஓராண்டு மிசா கைதியாக அடைக்கப்பட்டு இருந்தேன். நெருக்கடி நிலையால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னரும், பாடம் கற்றுக்கொள்ளாத காங்கிரஸ் கட்சி 1980 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, தடா என்ற கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தது. என்னுடைய உடன்பிறந்த தம்பி வை.இரவிச்சந்திரன் அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கை, கால்களை இழந்த விடுதலைப் புலிகளை தன் வீட்டில் தங்கவைத்து மருத்துவம் செய்ததற்காக, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு என் தம்பியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் ஓராண்டு சிறையில் பூட்டப்பட்டு இருந்தார். ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கும், மருத்துவமனைக்கும் கொண்டுசென்ற வேளைகளில் அவரது கைகளுக்கு விலங்கு பூட்டித்தான் கொண்டு சென்றார்கள். 2002 ஆம் ஆண்டு, பெரும் மதிப்பிற்குரிய அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி, மிகக் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (பொடா) கொண்டுவந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், நானும், முரசொலி மாறன் மட்டுமே இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தோம்.

நான் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் பொடா சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களைக் கைது செய்யும் பிரிவு நீக்கப்பட்டது என்பதை, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு பாராட்டி எழுதி இருக்கின்றது. பொடா சட்டத்திற்கு முதலாவது பலி யார் என்றால், அது வேறு யாரும் அல்ல நானேதான்! 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் நாடாளுமன்ற மக்கள் அவையில் குஜராத் பிரச்சினை குறித்து நடைபெற்ற விவாதத்தில் நான் பேசும்போது, "நான் விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன்" என்று பேசினேன்.

நாடாளுமன்றத்தில் பேசிய இந்த உரையை, திருமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேற்கோள் காட்டிச் சொன்னேன். அதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா பொடா சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தார்கள். அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன். சிகாகோவில் நடைபெற்ற தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றேன். அங்கிருந்து திரும்பி வரும்போது, 2002 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டேன். ஒரு சர்வதேச பயங்கரவாதியைப் போலக் கருதி, 500 காவலர்கள் படை சூழ என்னைக் கொண்டுபோய் வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்கள்.

இந்தியாவில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான். 19 மாதங்கள் (577 நாட்கள்) சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். மாண்புமிகு அடல்பிகாரி வாஜ்பாய் வேதனை அடைந்தார்கள். வேலூர் சிறைக்கே வந்து என்னைப் பார்க்க விரும்பினார்கள். ஆனால் நெறிமுறைகள் அதற்கு இடம் தரவில்லை. எனவே பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸையும் இன்று இந்த அவையின் தலைவராக வீற்றிருக்கின்ற எம்.வெங்கையா நாயுடுவையும் வேலூர் சிறைக்கு அனுப்பி என்னைச் சந்திக்கச் செய்தார்கள். என்னுடைய அன்புச் சகோதரர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்கள், மூன்று முறை வேலூர் சிறைக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள்.

English summary
MDMK General Secretary Vaiko In his maiden speech, he alleged that laws like POTA, TADA and sedition have been misused by various governments in the past.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X