• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மிசா, தடா, பொடா மூன்றின் கீழும் பாதிக்கப்பட்ட ஒரே நபர் நானே - வைகோ

|

நான் வேலூர் சிறையில் இருந்தபோது, உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தேன். புகழ்பெற்ற வழக்குரைஞர் பாலி நாரிமன் அவர்கள் எனக்காக வாதாடினார்கள். அந்த வழக்கில், "விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை வெறுமனே ஆதரித்துப் பேசுவது மட்டுமே பொடா சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகாது" என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடும். ஆம்; இப்போதும் நான் 124ஏ சட்டத்தின் கீழ் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி.

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 2019 ஆம் ஆண்டு இந்த ஜூலை மாதத் தொடக்கத்தின் 5ஆம் நாள் சென்னை சிறப்பு நீதிமன்றம் எனக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்து இருக்கின்றது. பிரித்தானியர்களின் ஆட்சியின்போதுதான், பாலகங்காதர திலகரும், அரவிந்த் கோசும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் அதே பிரித்தானிய முடியரசு ஒன்றியம் இன்று தங்கள் நாட்டில் அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டது.

Vaiko vehemently opposed UAPA bill in RS

அரவிந்த கோஷ் 124 ஏ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்தார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நேதாஜியின் இந்த வழக்கில் வாதாடிய,தேசபந்து சித்தரஞ்சன்தாஸ், சொன்ன வார்த்தைகள் மெய்சிலிர்க்கச் செய்கின்றன. அரவிந்த கோஷ் நீதிமன்றத்தின் கூண்டில் நிற்கவில்லை. வருங்கால வரலாற்றின் புகழ் கூண்டில் நிற்கின்றார். எதிர்காலத்தில் உன்னத தீர்க்கதரிசியாகவும், மனித உரிமை காவிய நாயகனாகவும் போற்றப்படுவார் என்றார்.

1924 இல் மகாத்மா காந்தி யங் இந்தியாவில் 124 ஏ தேசத்துரோகக் குற்றப்பிரிவு, சட்டத்தைக் கற்பழிக்கும் பிரிவு என்று எழுதினார். அதற்காக காந்தியார் தண்டிக்கப்பட்டார். பால கங்காதர திலகர் இதே சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டு மாண்டலே சிறையில் 6 ஆண்டுகள் இருந்தார். இந்த நாள்தான் திலகர் மறைந்த நினைவு நாள்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் 124ஏ பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரே ஒரு நபர் நான்தான். அந்த வகையில் என்னுடைய பெயர் இந்தியக் குற்றவியல் சட்ட வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. இப்போது நான் பிணை விடுதலையில் இருக்கின்றேன். என் மீதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இன்னும் இரண்டு வாரங்களில் அந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது. அந்த வழக்கில் ஒருவேளை சென்னை உயர்நீதின்றம் எனக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்தால், நான் இந்த அவையின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிடுவேன். இனி என்னால் திரும்ப இங்கே வரமுடியாது. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் இலட்சியங்களுக்காக வாழ்கிறேன்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டேன். என்னுடைய அனுபவத்தில், ஒரு அரசியல்வாதி எழுதுவதற்கும், படிப்பதற்கும் ஏற்ற இடம் சிறைச்சாலைதான் என்பது என் கருத்து. இந்தச் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின்படியும், சர்வதேச நாடுகள் கலந்துகொண்ட பல்வேறு மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டதற்கு இணங்கவும், இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்திருப்பதாக மக்கள் அவையில் அரசு கூறி இருக்கின்றது. இந்தச் சட்டத் திருத்தம் எந்த ஒரு தனி மனிதனையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கே பயன்படும்.

நாடாளுமன்ற மக்கள் அவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசும்போது, "உங்கள் மனதில் அச்சம் இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்" என்று கேட்டு இருக்கின்றார். எதனால் கல்புர்க்கி கொலை செய்யப்பட்டார்? எதனால் கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்டார்? எதனால் நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டார்? எதனால் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார்? அச்சத்தினை மக்கள் மனதில் விதைப்பது இன்றைய அரசு. அந்த அச்சத்தை விதைத்தது யார்? இந்த அரசுதான்.

Vaiko vehemently opposed UAPA bill in RS

எனவே அந்த அச்சத்தைப் போக்க வேண்டியது இன்றைய அரசின் கடமை ஆகும். அதற்கு மாறாக அவர்கள் மேலும் மிகக் கடுமையான இந்தச் சட்டத்தை கொண்டுவந்து இருக்கின்றார்கள். இது எரியும் தீயில் மேலும் எண்ணெய் வார்ப்பது போன்றது ஆகும். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற கவியரசர் ரவீந்திரநாத் தாகூர், தனது புகழ்பெற்ற கீதாஞ்சலி கவிதையில், மனித வாழ்வின் உன்னதத்தைப் பற்றி வடித்துள்ள கவிதை...

எங்கே அச்சம் என்பது மனதில் இல்லையோ

எங்கே அறிவு செம்மாந்து நிற்கின்றதோ

எங்கே மனிதன் தலைதாழாமல் நிமிர்ந்து நிற்கின்றானோ,

எங்கே அறிவு சுதந்திரமாகக் கிடைக்கின்றதோ

எங்கே குறுகிய சுவர்களால்

இந்தப் பரந்த உலகம் சின்னஞ்சிறு சுவர்களால்

துண்டுகளாக உடையவில்லையோ,

எங்கே உண்மையின் ஆழத்தில் இருந்து சொற்கள் வெளிவருகின்றனவோ

எங்கே ஓய்வு அறியாத முயற்சியும் உழைப்பும்

நேர்த்தியான முழுமையை நோக்கித் தன் கரங்களை நீட்டுகின்றதோ

எங்கே பகுத்தறிவு எனும் நீரோடை

மடிந்து போன பழக்கங்களால்

வறண்ட பாலை மணலில் தன்னுடைய பாதையை இழந்து விடவில்லையோ

எங்கே பரந்து விரிந்த எண்ணத்திற்கும் செயலுக்கும்

உன்னுடைய மனதை முன்னெடுத்துச் செல்கின்றாயோ

அத்தகைய சுதந்திரத்தின் சொர்க்கத்தில்

என் தந்தையே

என்னுடைய நாடு கண்விழிக்கட்டும்

எந்த ஒரு சட்டமும் மனித உரிமைக் காவலர்களையும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களையும் மேலும் அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது. இருண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தின் அடித்தட்டு மக்களின் தொழு நோய்க்கு மருத்துவம் செய்து, தன்னலம் அற்ற அந்தத் தொண்டுக்காக நோபல் விருதை வென்ற அறிஞர் ஆல்பிரட் சுவைட்சர், கிழக்கின் தத்துவம் என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றார். அதில் அவர், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு நிகரான இலக்கியம் உலகில் வேறு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

அத்தகைய திருவள்ளுவர் இயற்றிய ஒரு குறட்பாவை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

என்கிறார்.

உரிமை ஒடுக்கப்படுகின்ற மக்களின் கண்ணீர் அரசுகளைத் தூக்கி எறிந்துவிடும். அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள தேசிய புலனாய்வு முகமைத் திருத்தச் சட்டத்திற்கு ஒத்திசைவாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது. ஆனால் தேசியப் புலனாய்வு முகமை பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாக ஓரவஞ்சகமாகச் செயல்பட்டு வருகின்ற நிலையில், இந்தச் சட்டம் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படாது என்று சிறுபான்மை மக்கள் எப்படி நம்ப முடியும்?

இதே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் என் மீது மேலும் இரண்டு வழக்குகள் புனையப்பட்டன. சென்னையில் நடைபெற்ற உள்அரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றியதற்காக என் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து நான் விடுதலை செய்யப்பட்டேன். மற்றொரு வழக்கு, இலங்கை விமானப் படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், இலங்கை அரசைக் கண்டித்தும் அமைதிப் பேரணி நடத்தியதற்காக என் மீது மற்றொரு வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் என் மீது புனையப்பட்டக் குற்றச்சாட்டுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடுத்தேன். அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் என்னை முழுமையாக விடுவித்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
MDMK General Secretary Vaiko In his maiden speech, he alleged that laws like POTA, TADA and sedition have been misused by various governments in the past.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more