காஷ்மீரில் பண்டிட்கள் வெளியேற்றம்.. நுபுர் சர்மா நீக்கம்! தடுமாறுகிறதா தலைமை? பாஜக தொண்டர்கள் கேள்வி
டெல்லி: அடுத்தடுத்து தேசிய அளவில் கவனம் பெற்ற இரண்டு விவகாரங்கள் காரணமாக பாஜகவின் தீவிர ஆதரவாளர்களே பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இஸ்லாமிய இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு எதிராக பேசியதால் பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக பாஜகவும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கத்தாரை கதற வைத்து.. இந்தியாவையே ஆட வைத்த ஒரு பெண்.. மோடியே பாலோ பண்றாரு! யாரு இந்த நுபுர் சர்மா!
அதில், இந்தியாவின் பல்லாயிர வருட வரலாற்றில், இந்தியாவில் பல்வேறு மதங்கள் வளர்ந்து இருக்கின்றன, தோன்றி இருக்கின்றன. பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தை சேர்ந்த தலைவர்களையும் விமர்சிப்பதை பாஜக ஏற்றுக்கொள்ளாது, என்று பாஜகவும் மத ஒற்றுமை குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

கத்தார், ஈரான்
கத்தார் உள்ளிட்ட நாடுகள் நுபுர் சர்மா பேச்சு குறித்து விளக்கம் கேட்டு இந்திய வெளியுறவுத்துறைக்கு சம்மன் அனுப்பியது. நுபுர் சர்மா ஆளும் பாஜகவின் செய்தி தொடர்பாளர் என்பதால், இதுதான் உங்கள் அரசின் கருத்தா என்று கேள்வி கேட்டு கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. கத்தார் உள்ளிட்ட நாடுகளின் இந்த சம்மன் மற்றும் எதிர்ப்பு காரணமாக, பாஜகவில் இருந்து நுபுர் சர்மாவும் நீக்கப்பட்டார். அதோடு இந்த கருத்துக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று இந்தியா சார்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்செட்
இந்த நிலையில் பாஜகவில் இருந்து, நுபுர் சர்மா நீக்கப்பட்டதை கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. நுபுர் சர்மா நீக்கப்பட்டு இருக்க கூடாது. அவருடன் கட்சி உடன் இருந்திருக்க வேண்டும். இப்படி செய்திருக்க கூடாது. இந்திய உள்நாட்டு விவகாரத்தில் கத்தாரை தலையிட அனுமதித்து இருக்க கூடாது என்று பாஜக ஆதரவாளர்கள் பலர் போஸ்ட் செய்து வருகிறார்கள். இந்தியா தேவையின்றி அடிபணிந்து விட்டதாக பாஜக ஆதரவாளர்கள் ட்விட் செய்து வருகிறார்கள்.

மோடி
நேற்று பிரதமர் மோடிக்கு எதிராக கூட சில பாஜகவினர் டிரெண்ட் செய்து வந்தனர். இந்தியா இன்னும் வலிமையான முடிவுகளை எடுக்க வேண்டும். மோடி விட்டுக்கொடுத்துவிட்டார். பாஜக கொஞ்சம் பயந்து போய் முடிவு எடுத்துவிட்டது என்று பாஜக ஆதரவாளர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நுபுர் சர்மா நெக்கத்தோடு.. காஷ்மீர் பண்டிட் விவகாரமும் இதில் சேர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது காஷ்மீரில் இருக்கும் பண்டிட்கள் மீண்டும் ஜம்முவை நோக்கி சாரைசாரையாக இடம்பெற தொடங்கி உள்ளனர். அங்கு பண்டிட்கள் மீதும், வெளிமாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறி, பண்டிட் பிரிவினர் காஷ்மீரை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர்.

காஷ்மீரி பண்டிட்
முக்கியமாக ஜம்முவில் இருந்து காஷ்மீரில் வந்து குடியேறிய பண்டிட்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரி பண்டிட்கள் சிலர் சமீபத்தில் தீவிரவாதிகள் மூலம் அங்கு கொலை செய்யப்பட்ட நிலையில்தான் அங்கிருந்து பண்டிட்கள் வெளியேறி வருகிறார்கள். நாங்கள் இங்கே 15 வருடமாக வேலை செய்கிறோம். எப்போதும் இவ்வளவு பாதுகாப்பின்றி உணர்ந்தது இல்லை. இப்போது உணர்கிறோம். எங்களால் தொடர்ந்து காஷ்மீரில் வேலை செய்ய முடியாது என்று மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் செய்யும் பண்டிட்கள் கூறியுள்ளனர்.

வெளியேற்றம்
அரசு தங்களை பாதுகாக்க தவறிவிட்டதாக கூறி காஷ்மீர் பண்டிட்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில்தான் பிரதமர் மோடியையும், பாஜகவையும் பாஜக ஆதரவாளர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். காஷ்மீர் பண்டிட் வெளியேற்றம்.. நுபுர் சர்மா நீக்கம்.. இரண்டிலும் பாஜக எங்களை கைவிட்டுவிட்டது. இரண்டு விஷ்யங்களிலும் பாஜக தவறான முடிவு எடுத்துவிட்டது. இந்துக்களுக்கு ஆதரவான மனநிலையில் பாஜக முடிவுகளை எடுக்கவில்லை. வாக்களித்தவர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்று தீவிர பாஜக ஆதரவாளர்களே விமர்சனம் வைத்து வருகின்றனர்.