குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா - தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்வீட்
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனிமைப்படுத்த கொண்டுள்ள நிலையில் அவரைச் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என குடியரசு துணைத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,33,533 புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை 0.56 சதவீதம் குறைந்துள்ளது. இதில் ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்ட 10,050 பேரும் அடங்குவர். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 525 இறப்புகள் பதிவாகியுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மட்டுமின்றி 3வது அலையில் திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள் என அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக குடியரசு துணைத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, கொரோனா பரிசோதனை செய்ததாகவும் அதில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒரு வாரம் சுய தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளார் எனவும், அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் என்று குடியரசு துணைத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.