• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நேரு மாதிரி இல்லை.. சீனா கண்ணில் விரல் விட்டு ஆட்டிய இந்திரா காந்தி.. நிஜமாகவே இரும்பு பெண்தான்

|

டெல்லி: நேருவின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த சீனா கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் இந்திரா காந்தி.

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று இந்திரா காந்தியை சும்மா அழைக்கவில்லை. அதன் பின்னணியில் அவர் செய்த பல்வேறு அதிரடிகள் மறைந்து கிடக்கின்றன.

இன்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 36ஆவது நினைவு நாளாகும். 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், அவரது மெய்க்காப்பாளர்களாலேயே சுட்டு ரத்த வெள்ளத்தில் வீழ்த்தப்பட்டார் இந்திரா காந்தி.

இரும்பு பெண்மணி

இரும்பு பெண்மணி

பஞ்சாபில் சீக்கிய வழிபாட்டு தலத்துக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியதால் கோபம் கொண்ட சீக்கிய பாதுகாவலர்கள் இந்திரா உயிரை பறித்தனர். துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் ஏந்தி வீரத்தோடு மறைந்தது மட்டுமல்ல, அவர் மறையும் காலம்வரையும் கூட, இரும்பு பெண்மணியாகத்தான் வாழ்ந்தார். அதற்கு சீனாவுடனான இந்தியாவின் உறவும் ஒரு நல்ல உதாரணம்.

முதுகில் குத்திய சீனா

முதுகில் குத்திய சீனா

ஜவகர்லால் நேரு இந்தியாவின் பிரதமராக இருந்தபோது, சீனா பற்றிய இந்தியாவின் பார்வை இப்போது இருப்பதற்கு நேரெதிர்மாறானதாக இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்று வளர்ந்து வந்த அந்த காலகட்டத்தில், ஆசியாவின் மற்றொரு மக்கள் தொகை பெருக்கம் கொண்ட, வேகமாக வளர்ந்து வந்த நாடாக, சீனா இருந்தது. எனவே அந்த நாட்டுடன் நட்பும், உறவும் வைத்துக் கொள்வது இந்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கு உதவும் என்றும், எல்லை பிரச்சனைகளை தீர்க்கும் என்றும் நேரு தீர்க்கமாக நம்பினார். ஆனால் 1962 ஆம் ஆண்டு போர் மூலம் நேருவின் முதுகில் குத்தி சீனா தன்னை ஒரு எதிரி அல்ல.. துரோகி என்று நிரூபித்தது.

இந்திரா காந்தி காலத்தில் நிலைமை

இந்திரா காந்தி காலத்தில் நிலைமை

இந்திரா காந்தி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு சீனா ஒரு எதிரி நாடு போலத்தான் கையாளப்பட்டது. பனிப்போர் ஒன்று தொடர்ந்து கொண்டு இருந்தது. 1962 ஆம் ஆண்டு இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது. அவற்றை எல்லாம் திருப்பி கொடுத்தால்தான் சீனாவுடன் பேச்சு நடத்த முடியும் என்று இந்திரா காந்தி அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதே நேரம் முன்பு கற்ற பாடத்திலிருந்து மீண்டு வர ஆரம்பித்தது இந்தியா.

இந்திரா அதிரடி

இந்திரா அதிரடி

இந்திரா காந்தி ஆட்சியில் இரண்டு விஷயங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. அதில் ஒன்று, பொருளாதாரம், இன்னொன்று ராணுவ பலம். தற்போது சுயசார்பு இந்தியா என்ற எந்த ஒரு கோஷம் முன்வைக்கப்படுகிறதோ, அது இந்திரா காந்தி காலத்திலேயே, தீவிரமாக முன்வைக்கப்பட்டதுதான். அமெரிக்கா மற்றும் சர்வதேச உதவிகளை தவிர வேறு எந்த நாடுகளுடனும் இந்தியாவுடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்தினார் இந்திரா. இந்திய ராணுவத்தை கட்டமைக்கும் பங்காளியாக ரஷ்யாவுடன் கைகோர்த்தார்.

அமெரிக்காவுடன் நெருக்கம்

அமெரிக்காவுடன் நெருக்கம்

சீனாவை எதிர்கொள்ள வேண்டுமானால் இந்தியா உள்ளே இருந்து வலிமையாக வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை இந்திரா காந்திக்கு இருந்தது. 1980களில் சீனாவின் ராணுவ பலத்தை இந்தியா நெருங்கிவிட்டது. ஆனால் பொருளாதாரம்தான் தேக்க நிலையில் இருந்தது. அந்தப் பக்கம் சீனா இந்த விஷயத்தில் தெளிவாக, நவீனமயமாக்கல் கொள்கைகளால் பொருளாதாரத்தை வளர்த்து எடுக்க ஆரம்பித்துவிட்டது. நிலவியல் அமைப்பு அடிப்படையில் பார்த்தால், ரஷ்யா, ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருப்பது இந்தியாவுக்கு சற்று நெருடலாக இருந்தது. எனவே, இந்தியாவுக்கு மற்றொரு கூட்டாளி தேவைப்பட்டது. எனவே இந்திராகாந்தி ஆட்சி, அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்த தொடங்கியது.

ராஜிவ் காந்தி காலத்தில் மாற்றம்

ராஜிவ் காந்தி காலத்தில் மாற்றம்

இந்தியாவுக்குத் தேவைப்படும் முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் கொட்டிக் கிடப்பதை இந்திராகாந்தி உணர்ந்திருந்தார். அதே நேரம், அமெரிக்கா இன்னொரு கண்டத்தில் உள்ள நாடு என்பதால் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார வளம் கொண்ட நாடுகளுடன் நட்பு இருக்க வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். எனவேதான் சீனாவுடன் பட்டும்படாமல் உறவை தொடர்ந்தது இந்தியா. இரண்டு நாடுகளுடனும் 1981 முதல் 1988 வரைஇரு நாட்டு எல்லை விவகாரங்கள் தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் 1986-87 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் சம்டூர்ரோங் சூ, பகுதியில் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானதும், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்திய வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்தார்.

நேர் எதிர் கொள்கை

நேர் எதிர் கொள்கை

சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 1988 ஆம் ஆண்டு விஜயம் செய்தார் ராஜிவ்காந்தி. இந்திராகாந்தி காலத்தில் பின்பற்றிய கொள்கை அப்போது தலைகீழாக மாற்றப்பட்டது. "எங்கள் பகுதிகளை திருப்பிக் கொடுக்கும் வரை பேச்சுவார்த்தை இல்லை" என்பது இந்திரா காந்தி ஆட்சியின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் ராஜீவ் காந்தி ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடக்கட்டும், அப்போதுதான் இந்திய பகுதிகளை சீனா திருப்பிக் கொடுக்க முன்வரும் என்று நம்பிக்கை வெளிப்படுத்தினார். பாஜகவின் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் சீனாவுடன் நட்பை பராமரிக்க விரும்பியது இந்தியா. ஆனால் 2006 ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தை உரிமை கொண்டாட ஆரம்பித்ததும்தான் சீனாவுடனான வெளிநாட்டுக் கொள்கையில் திரும்பவும் மாற்றம் ஏற்பட தேவை ஏற்பட்டது.

இந்திரா காந்தி வீரம்

இந்திரா காந்தி வீரம்

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, இந்திரா காந்தி காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அதே அணுகுமுறை சீனாவுக்கு எதிராக கையில் எடுக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்ட பிறகு நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. வெறுமனே கொள்கையோடு நிற்காமல், இந்திய ராணுவ பலத்தை உயர்த்தினார், பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் இந்திராகாந்தி. அவரது நினைவு நாளான இன்று, அவர் இந்தியாவுக்காக சீனாவுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி நின்ற இந்த வீரம் நினைவில் கொள்ளத்தக்கது. முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளத் தக்கது.

 
 
 
English summary
Indira Gandhi death anniversary: In this Tamil article, we are elaborating what is the foreign policy between India and China while Indira Gandhi was the prime minister.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X