நான்கு பேரில் ஒருவருக்கு அடிக்க போகும் ஜாக்பாட் .. மந்திரி பதவி யாருக்கு.. பரபரக்கும் அரசியல்களம்
டெல்லி: சிவசேனா, சிரோன்மணி அகாலிதளம் கட்சிகள் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், அதிமு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர் பதவி பெற அதிமுகவில் கடும் போட்டி உருவாகி உள்ளது. ரவீந்திரநாத் . வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தம்பித்துரை ஆகிய நான்கு பேரில் ஒருவருக்கு வாய்ப்பு உள்ளது..
கடந்த 2019ம் ஆணடு மே மாதம் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடி, 24 கேபினட் அமைச்சர்கள், ஒன்பது இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு), 24 இணை அமைச்சர்கள் உட்பட 57 அமைச்சர்களுடன் பதவியேற்றார். மோடியின் அமைச்சரவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான சிவசேனா சார்பில் அரவிந்த் சாவந்த் , சிரோன்மணி அகாலிதளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் பாதல், லோக் ஜனசக்தி சார்பில் ராம்விலாஸ் பஸ்வான், இந்திய குடியரசு கட்சி சார்பில் ராம்தாஸ் அதவாலே ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது.
அதேநேரம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி மத்திய அமைச்சரவையில் சேர மறுத்துவிட்டது. அதேநேரம் அதிமுகவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்த சூழலில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு பின்னர் மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்து வந்த சிவசேனா, அமைச்சரவை மற்றும் கூட்டணியில் இருந்து விலகியது. இதேபோல் வேளாண் சட்டங்களை முன்னிறுத்தி சிரோன்மணி அகாலிதளமும் சமீபத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

2 அமைச்சர்கள் மரணம்
இது ஒருபுறம் எனில் ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன் பலியானார். அதன் தொடர்ச்சியாக, லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.. இதன் மூலம் அமைச்சரவையில் 4 இடங்கள் காலியாக உள்ளது.

கூடுதல் பொறுப்புகள்
இந்த நான்கு பேரில மூன்று பேர் கேபினட் அமைச்சர்கள் ஆவர். இதனால், ஒரு மூத்த மத்திய அமைச்சர் நான்கு அமைச்சகங்களையும், ஐந்து அமைச்சர்கள் தலா மூன்று அமைச்சகங்களையும் கவனித்து வருகிறார்கள். குறிப்பாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண்மை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட 4 அமைச்சகங்களை கவனித்து வருகிறார். ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ்வர்தன், பியூஷ் கோயல், பிரஹ்லாத் ஜோஷி மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் மூன்று அமைச்சகங்களை கவனித்து வருகிறார்கள். இப்படி கூடுதல் இலாக்காக்களை கவனிக்கும் அமைச்சர்கள் பணி சுமையில் உள்ளதால் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் மற்றும் மாற்றங்கள் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போட்டியில் 4 பேர்
அதிமுகவும் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமைச்சரவையில் அதிமுக இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பபட்ட போது ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு இடம் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியோ வைத்திலிங்கத்தக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அப்போது சொல்லப்பட்டது. இதனால் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. தற்போது, ரவீந்திரநாத்துடன் சேர்த்து வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தம்பித்துரை ஆகியோரும் அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

ஆதரித்தாரா இபிஎஸ்?
ரவீந்திரநாத்துக்கு பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் ரவீந்திரநாத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். . எடப்பாடி பழனிசாமி 3 சீனியர்களில் ஒருவரை ஆதரிப்பார் என்றும் சொல்கிறார்கள். இதனால் அதிமுகவில் அமைச்சரவையில் 4 பேரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி உறுதி என்பதால் இப்போதே கடும் போட்டி நிலவுகிறது,