டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா நோய் தடுப்பில் அசத்தும் ஒடிசா.. உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா நோய்த்தடுப்பு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுவதாக ஒடிசா மாநில அரசை உலக சுகாதார அமைப்பு (WHO) பாராட்டியுள்ளது.

அரசு நிர்வாகம் முதல் சமூக நிலை வரை என்ற தலைப்பில், உலக சுகாதார அமைப்பு தனது வெப்சைட்டில் ஒடிசா மாநில அரசை புகழ்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

அந்தக் கட்டுரையில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது, நோயாளிகளுக்கு சிறப்பான வகையில் சிகிச்சை ஏற்பாடுகள் செய்தது உள்ளிட்ட விஷயங்களுக்காக ஒடிசா மாநில அரசு பாராட்டப் பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது: பிற பகுதிகளில் சிக்கிக்கொண்டு இருந்த தங்கள் மாநில மக்களை உரிய சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக மாநிலத்துக்குள் அழைத்து வருவது என்பது மிகவும் சவாலான விஷயமாக இருந்தது. ஆனால் பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட்ட அனுபவம் கொண்ட அந்த மாநில அரசால் இந்த சிக்கலையும் சிறப்பாக கையாள முடிந்தது.

பஞ்சாயத்துராஜ் அமைப்புகளுடன் இணைந்து மாநில அரசு சமூக அளவில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி நோய் பரவலை குறைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத நிலையில் மார்ச் 13-ஆம் தேதி மாநில எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 15ம் தேதி அந்த மாநிலத்தின் முதல் முறையாக கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். இதையடுத்து மாநிலம் முழுக்க கொரோனா வைரஸ் பிரச்சினையை கட்டுப்படுத்துவது மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

WHO lauds Odisha govt for efficient COVID-19 management

மாவட்ட அளவிலான சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர். கை கழுவுவது, உட்பட நோய் பரவலை குறைப்பதற்கு தேவைப்படும் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதில் ஒடிசா மாநில அரசு சிறப்பாக செயல்பட்டது.

உடனுக்குடன் முடிவு எடுப்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலமாக கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த குழுக்கள் மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து தேவைப்படும் முடிவுகளை விரைவாக எடுக்க முடிந்தது. இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய ஒரு சிறப்பு மருத்துவமனை ஒடிசா மாநிலத்தில்தான் அமைக்கப்பட்டது. அதுவும் ஒரு வார இடைவெளிக்குள் இந்த பணியை அந்த மாநில அரசு நிறைவேற்றியது. பின்னர் மாவட்டங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், அதாவது, மொத்தம் 30 மருத்துவமனைகள் கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டன. மே மாத இறுதிக்குள் 22 ஆயிரத்து 340 படுக்கை வசதிகள் ஒடிசா மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டன.

புலம்பெயர் தொழிலாளர்களை மாநிலத்துக்கு திரும்ப அழைத்து வருவது, ஆன்லைன் மூலமாக இ பாஸ் வினியோகம் செய்வது, கொரோனா நோய் பாதித்தவர்களின் தொடர்புகளை கண்டறிவது, உரிய குடியிருப்புகளை ஏற்படுத்தி தேவைப்படுவோரை, அங்கு தங்க வைப்பது மற்றும் உணவு வழங்குவது உடல் நிலையை தொடர்ந்து பரிசோதனை செய்வது உள்ளிட்ட விஷயங்களில் ஒடிசா மாநில அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக மருத்துவ முகாம்கள் அந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டன.

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், அந்த மாநிலத்தின் சுகாதாரப் பணியாளர்களுக்கு 50 லட்ச ரூபாய் நிதி பேக்கேஜ் அறிவித்தார். மேலும் சுய உதவிக் குழுக்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

ஒடிசா மாநிலத்துக்கு திரும்பி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமானோர் தமிழகத்திலிருந்து திரும்பியவர்கள். ஜவுளி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி ஒடிசாவுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் மிக அதிகம். அவர்கள் ஒடிசா மாநிலத்திற்கு ரயில் மூலமாக வருவதற்காக நிதி உதவியை மாநில அரசு செய்து கொடுத்தது.

புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி வந்ததும் அவர்களுக்கு தங்குவதற்கான இடம் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. மருந்து மாத்திரைகள் தேவைப்பட்டால் அதுவும் கொடுக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த முகாம்களில் தங்கியிருந்த ஒவ்வொருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

கஞ்சம் மாவட்டம்தான், கொரோனா நோய் பாதிப்பால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டம். ஆனால் முதல்வர் நவீன் பட்நாயக், அவரது குழுவினருக்கு முழு சுதந்திரம் வழங்கினார். முதல்வர் நவீன் பட்நாயக்கின் செயலாளரான திறமைமிக்க ஐஏஎஸ் அதிகாரி வி.கார்த்திகேயன் பாண்டியன், வசம், கஞ்சம் மாவட்டத்திற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வி.கார்த்திகேயன் பாண்டியன், அந்த மாவட்டத்தில் முன்பு கலெக்டராக பணியாற்றியவர். இதையடுத்து கஞ்சம் மாவட்டத்தில் நோய் பரவல் குறைக்கப்பட்டு நிலைமை அப்படியே மாற்றப்பட்டது. தற்போது நாட்டிலேயே மிகவும் சிறப்பாக கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தக்கூடிய மாவட்டமாக கஞ்சம் மாவட்டம் மாறி உள்ளது.

English summary
The World Health Organisation (WHO) has heaped praises on the Odisha government for its efficient COVID-19 management, even though the state saw an influx of migrants and was also struck by cyclone Amphan during the crisis phase.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X