சரத் பவார் அவுட்.. அப்போ யார் பொது வேட்பாளர்?- கட்சிகள் முன்வைத்த ஒரு பெயர்.. எல்லோருக்கும் சம்மதம்?
டெல்லி : எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிற்க சரத் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகிய 3 பேர் அடங்கிய குழு அடுத்த கூட்டம் குறித்து முடிவெடுக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்களின் ஆயுள் 5 வருசம் குறையுமாம்.. காரணம் என்ன தெரியுமா? - சிகாகோ பல்கலை. அதிர்ச்சித் தகவல்
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கோபாலகிருஷ்ண காந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுதொடர்பாகப் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் வாக்குகளில் சுமார் 48 சதவீத வாக்குகளை பா.ஜ.க கூட்டணி பெற்றுள்ளது. பாஜக தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக தேவைப்படுகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

பாஜகவுக்கு எதிராக
பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், டி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகள், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை களமிறக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

மம்தா பானர்ஜி
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க அழைப்பு விடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட நாடு முழுவதும் உள்ள 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார். அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், பிரபுல் படேல், சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தேவகவுடா, குமாரசாமி, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சரத் பவார்
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விருப்பம் தெரிவித்தன. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமுல் காங். தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் முன்பே சரத் பவாரை சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத்பவாருக்கு விருப்பம் இல்லை என அவர் கூறிவிட்டார். ஆனாலும், அவரை சம்மதிக்க வைக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வந்தன.

போட்டியிட மறுப்பு
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிற்க சரத் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் ஆகிய 3 பேர் அடங்கிய குழு அடுத்த கூட்டம் குறித்து முடிவெடுக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி
இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, "குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட சரத்பவாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை சரத் பவார் மீண்டும் நிராகரித்துவிட்டார். ஆனாலும், பொது வேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை செய்து முடிவெடுப்போம். இது நல்ல தொடக்கம். பல மாதங்கள் கழித்து நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம். இதேபோன்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நாங்கள் மீண்டும் நடத்துவோம்" எனத் தெரிவித்தார்.

எனில் வேட்பாளர் யார்?
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்த முடிவெடுத்த சரத் பவார் விலகிய நிலையில், அடுத்த தேர்வு யாராக இருக்கும் என்ற மிகப்பெரும் கேள்வி எழுந்துள்ளது. பொது வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளவர், எல்லாக் கட்சிகளாலும் ஆதரிக்கப்படக் கூடியவராக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதால், இந்தத் தேர்வில் பலகட்ட ஆலோசனைகள் வேகமாக நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இவர்தான் வேட்பாளரா?
இந்நிலையில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சில எதிர்க்கட்சி தலைவர்கள் கோபாலகிருஷ்ண காந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியதாகவும், அப்போது அவர் தனக்கு யோசிப்பதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்றும், விரைவில் தனது முடிவைக் கூறுவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கோபாலகிருஷ்ண காந்தி
77 வயதாகும் கோபாலகிருஷ்ண காந்தி, மகாத்மா காந்தியின் பேரன் ஆவார். இவர் காங்கிரஸ் ஆட்சியின்போது 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க ஆளுநராகப் பொறுப்பு வகித்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட கோபாலகிருஷ்ண காந்தி, அப்போது வெங்கையா நாயுடுவிடம் தோல்வியடைந்தார். அவரை இப்போது பொது வேட்பாளராக நிறுத்தி பாஜகவுக்கு டஃப் கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மிக விரைவில் மம்தா உள்ளிட்ட முக்கிய தலைவர் அவரைச் சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.