மோடியின் "அந்த கொள்கை இருக்கு பாருங்க.." பாஜகவில் இணைந்ததற்கு காரணம் சொன்ன கிரேட் காளி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் தன்னை கவர்ந்ததால் பாஜகவில் இணைந்ததாக WWE மல்யுத்த வீரரான தி கிராட் காளி தெரிவித்துள்ளார்.
உலக புகழ்பெற்ற மல்யுத்த நிகழ்ச்சியான WWE யில் உலக சாம்பியன் உள்ளிட்ட பல பெல்டுகளை வென்று பிரபலமானவர் தி கிரேட் காளி.
7.1 அடி உயரம் கொண்ட தி கிரேட் காளி தனது மிகப்பெரிய உடல் தோற்றத்தை வைத்தே மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
ஹிட்லர், முசோலினி வரிசையில் பாஜகவை சேர்த்த மம்தா பானர்ஜி... அவற்றைவிட இந்த ஆட்சி மோசமாம்

உபி தேர்தல் அன்று கட்சியில் இணைவு
டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற தி கிரேட் காளி, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நாளில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இது அப்போது பெரும் விவாதப் பொருளானது.

மத்திய அமைச்சருடன் சந்திப்பு
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கை டெல்லியில் தி கிரேட் காளி நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் ஜிதேந்திர சிங் அவர்களை சந்திக்க வந்தேன். என்னை போன்ற மலை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை சந்தித்தேன். இது ஒரு சாதாரணமான சந்திப்புதான்.

மோடியின் கொள்கை
நான் பாஜகவில் இணைந்ததை நினைத்து பெருமை அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை என்னை வெகுவாக கவர்ந்தது. எனவே நான் பாஜகவில் இணைந்தேன்." என்றார். பாஜகவில் சேர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு ஜிதேந்திர சிங்கை சந்தித்து இருக்கிறார் தி கிரேட் காலி. கடந்த பிப்ரவரி மாதம் ஜிதேந்திர சிங், மாநிலங்களவை உறுப்பினர் அருண் சிங், மக்களவை உறுப்பினர் சுனிதா துக்கல் முன்னிலையில் தி கிரேட் காலி பாஜகவில் இணைந்தார்.

WWE இல் இருந்து விலகல்
அண்டர்டேக்கர், ஜான் சீனா, ஷான் மைக்கேல்ஸ், கேன், ரே மிஸ்டீரியோ உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர்களுடன் WWE சண்டையிட்டுள்ளார் தி கிரேட் காலி. பின்னர் அதிலிருந்து விலகிய காலி இந்தியாவில் மல்யுத்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதுடன், உள்ளூர் மல்யுத்த போட்டிகளையும் ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துகிறார்.