திராவிட மாடல் Vs பாட்டாளி மாடல்.. வித்தியாசத்தை விளக்கிய அன்புமணி! அப்போ "அவங்களோட" கூட்டணி இல்லையா?
தருமபுரி: திமுகவுக்கு ஒரு திராவிட மாடல் இருப்பதை போல் பாமகவுக்கு ஒரு பாட்டாளி மாடல் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக் குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்த விழாவில் பாமகவின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருக்கும் தருமபுரியை முன்னேற்ற வேண்டும் என நான் சபதம் எடுத்தேன். 5 ஆண்டுகள் மக்களவை உறுப்பினராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
’சந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது'..முதல்வரை சந்திக்கும் பாமக அன்புமணி! ஓ இந்த விஷயத்துக்காகவா?

காவிரி தென்பெண்ணை
நானும் பொறுப்பை ஏற்றேன். நாம் எதற்காக பொறுப்பிற்காக வந்தோம். பின்தங்கிய மக்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்பதால்தான். தருமபுரி மாவட்டத்தில் இரு ஆறுகளான காவிரியும் தென்பெண்ணையும் ஓடி கொண்டிருக்கிறது. ஆனாலும் குடிநீர் பிரச்சினை தீர்வு காணப்படவில்லை.

பாமக நடத்திய போராட்டம்
பாமக நடத்திய போராட்டத்திற்கு பிறகுதான் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு திமுக ஆட்சியில் திட்டப்பணிகள் தொடங்கியது. அதிமுக ஆட்சியில் இருந்த போது அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இது ஒரு அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட திட்டம். எனவே இது திமுக, அதிமுகவின் சாதனை அல்ல. இது நமது சாதனை.

திராவிட மாடல்
தமிழகத்தில் புதிதாக திராவிட மாடல் என்ற சொல் திடீரென உருவாகியுள்ளது. திராவிட மாடல் எது தெரியுமா, பள்ளி மாணவர்கள், அரை டவுசர் போட்டுக் கொண்டு மது பாட்டிலுடன் இருப்பதுதான்!. ஆனால் நம்மிடம் ஒரு மாடல் இருக்கிறது. அதுதான் பாட்டாளி மாடல்! இந்த மாடலை செயல்படுத்த ஒரு முறை ஆட்சி அதிகாரத்தை தாருங்கள்.

பாட்டாளி மாடல்
பாட்டாளி மாடல் என்ன தெரியுமா? ஒரு சொட்டு சாராயம் இல்லாத மதுவிலக்கு அமல், இலவச கல்வி, மருத்துவமனைகளை தரம் உயர்த்தி இலவச மருத்துவ சிகிச்சை, விவசாய பொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்து கொள்வது தான் பாட்டாளி மாடல். உங்களுக்கு எந்த மாடல் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

பாமக 2.0
2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் என்ற அடிப்படையில் முதல்வர் தேர்தலை சந்தித்தோம். அடுத்து வரும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பாமகவின் 2.0 என்ற அம்சத்தை முன் வைத்து தேர்தலை சந்திக்கிறோம். நிச்சயம் 2026 இல் பாமக ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறும் என அன்புமணி தெரிவித்தார்.

திமுகவுடன் பாமக கூட்டணியில்லையா
திமுகவுடன் பாமக உறுப்பினர்கள் இணக்கம் காட்டி வருவதால் அக்கட்சியுடன் பாமக வரும் தேர்தல்களில் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்புமணி சொல்வதை பார்த்தால் 2026 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி இல்லை என்றே தெரிகிறது.