திமுக எம்.பி. செந்தில்குமாரை ஊருக்குள் விடாத பாமகவினர்... வாக்குவாதம்-தள்ளுமுள்ளுவால் பரபரப்பு..!
தருமபுரி: தருமபுரி மாவட்டம் நத்தமேடு கிராமத்திற்குள் திமுக எம்.பி.செந்தில்குமார் நுழையக்கூடாது எனக் கூறி பாமகவினர் அவரை மறித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாமகவினரை எதிர்த்து ஊருக்குள் செந்தில்குமார் எம்.பி.யை திமுகவினர் அழைத்துச்செல்ல முயன்றதால் அங்கு இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவாகியது.
நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் செந்தில்குமார் எம்.பி.யை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

சுப்ரமணியம் உயிரிழப்பு
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த சுப்ரமணியம் என்பவரது நினைவுத்தூண் தருமபுரி மாவட்டம் நத்தமேடு கிராமத்தில் உள்ளது. அங்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு ஏழ்மை நிலையில் உள்ள சுப்ரமணியம் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்குவதற்காக தருமபுரி எம்.பி. செந்தில்குமார் அங்கு சென்றார்.

பாமகவினர் ஆத்திரம்
இந்நிலையில் செந்தில்குமார் நத்தமேடு கிராமத்திற்குள் வரக்கூடாது எனக் கூறி பாமகவினர் அவரை மறித்து திருப்பி அனுப்ப முயன்றனர். ஆனால் எம்.பி.யோடு சென்ற திமுகவினர் பாமகவினரை மீறி அவரை ஊருக்குள் அழைத்துச்சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் செந்தில்குமார் எம்.பி.யை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தனர்.

சமுதாய நலக்கூடம்
மேலும், காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று செந்தில்குமார் எம்.பியை அங்கிருந்த சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்துச்செல்ல முற்பட்ட போது, திடீரென ஓடி வந்த பாமகவை சேர்ந்த ஒருவர் சமுதாய நலக்கூடத்தின் கதவுகளை பூட்டை போட்டுப் பூட்டினார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே பெரிய மோதல் ஏற்படும் நிலை உருவாகியது. நிலைமையை உணர்ந்த செந்தில்குமார் தன்னுடன் வந்த திமுகவினரை அமைதிப்படுத்தினார்.

திமுக பிரச்சார வேன்
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுக தலைமைக்கழகம் சார்பில் செந்தில்குமார் எம்.பி. பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக அவருக்கு தலைமையில் இருந்து பிரத்யேக பிரச்சார வாகனமும் தரப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்வு குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் செந்தில்குமார் எம்.பி. விளக்கிக் கூறியிருக்கிறார்.

திமுக பொறுமை
அரியலூரில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதி ஸ்டாலினை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாமகவினர் தடுத்து நிறுத்தினர். இப்போது இரண்டாவது முறையாக திமுக எம்.பி. செந்தில்குமாரை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனிடையே இந்த விவகாரத்தில் திமுக தொடர்ந்து பொறுமை காத்து வருவது குறிப்பிடத்தக்கது.