திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் நல்லிணக்கம்.. இரு மத ஒற்றுமையை பறை சாற்றும் திண்டுக்கல் பட்டாணி சாமி கோவில்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: தங்கள் பகுதியை ஆண்ட முஸ்லிம் மன்னரே குலதெய்வமாகவே வணங்கப்படுகிறார்- முஸ்லிம் மன்னரின் தளபதிகளே துணை சாமிகள்... நினைத்தது நடக்க இந்த சாமிக்கு கிடா வெட்டி வழிபாடு நடத்திக் கொண்டிருப்பவர்கள் இந்துக்கள் மட்டும்தான் என்பதை தற்போதைய சூழ்நிலையில் நினைத்துப் பார்க்கையிலேயே பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இப்படியும் ஒரு அதிசயமாக திகழ்கிறது திண்டுக்கல் பட்டாணிசாமி கோவில்.

திண்டுக்கல் அருகே உள்ளது பாடியூர். இங்கே உள்ள கோட்டைமேடு பகுதியில்தான் கீழடி போல ஆதி தமிழர் வாழ்வியல் எச்சங்கள் சிதைந்து இருப்பதை நாம் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம். இதே பகுதியில்தான் பட்டாணி சாமி கோவில், தர்கா சாமி என அடுத்தடுத்து விசித்திரங்கள் இருப்பதாக ஆசிரியராக இருக்கும் மைத்துனர் கூறினார்.

Agri: படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர் Agri: படித்ததோ எம்.பி.ஏ... பார்ப்பதோ விவசாயம்... அத்திப்பழம் சாகுபடியில் அசத்தும் திருப்பூர் இளைஞர்

பாடியூரின் மறுபக்கம்

பாடியூரின் மறுபக்கம்

அப்படி என்னதான் இந்த பட்டாணிசாமி கோவில், தர்கா வழிபாடு இருக்கிறது என சென்று பார்த்தோம். ஆள் அரவமற்ற குளத்து கரையில் வழக்கம் போல் கம்பீரமான குதிரைகளில் சாமி சிலைகள்.. வேல் கம்புகள், வேண்டுதல்களுக்கு கட்டப்பட்ட துணிகள், தொட்டில்கள்.. லாக்டவுன் காலமான போதும் பக்தர்கள் வருகிறார்கள் என்பதற்காகவே காத்திருக்கும் பூசாரி.

கோவில் எதிரே தர்கா

கோவில் எதிரே தர்கா

இப்படித்தான் பட்டாணிசாமி கோவில் நம்மை வரவேற்றது. ஊதுபத்தி ஏற்றப்பட்டு சூடம் எரிந்து கொண்டிருந்த பட்டாணிசாமி கோவிலுக்கு நேர் எதிரே சில அடி தொலைவில் உள்ள தர்காவைத்தான் முதலில் பார்த்தோம். இன்றும் இஸ்லாமியர்கள் மட்டுமே வழிபாடு செய்கிறார்கள் இந்த தர்காவில்.. ஆனால் சுற்று வட்டாரத்தில் 10 கி.மீ. தொலைவில் இஸ்லாமியர்களே இல்லை. ஆனாலும் தொலைவில் இருந்து வந்து சிதிலமடைந்த இந்த தர்காவில் வழிபாடு நடத்திவிட்டு செல்கின்றனர் இஸ்லாமியர்கள்.

அய்யனாருக்கும் மன்னருக்கும் மோதல்

அய்யனாருக்கும் மன்னருக்கும் மோதல்

இந்த தர்காவை பார்த்துவிட்டு ஆல மரத்தின் அடியில் அமர்ந்திருந்த பூசாரி பெரியவரிடம் பட்டாணி சாமியின் பூர்வோத்திர கதை கேட்டேன்... எதிரே உள்ள குளக்கரையில் அய்யனார் இருப்பதாகவும் அவருக்கும் இந்த ஊரை ஆண்ட முஸ்லிம் மன்னருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இந்த ஊரை ஆண்ட முஸ்லிம் ராஜாவின் தலையை அய்யனார் துண்டித்துவிட்டார். அந்த தலை விழுந்த இடம்தான் தர்காவாக இருக்கிறது என்றார்..

முஸ்லிம் மன்னரே சாமி

முஸ்லிம் மன்னரே சாமி

ஒருநிமிடம் அய்யா என பூசாரியை குறுக்கிட்டு சரி தலை துண்டாகி விழுந்த இடம்தான் தர்கா என்றால்.. அவரது உடல் எங்கே போனது என்றேன்? அவர் லேசாக புன்னகைத்தபடியே இதோ இந்த குதிரையில் இருக்கிறாரே இவர்தான் அந்த முஸ்லிம் ராஜா என்றார்.. ஒரு கணம் திடுக்கிட்டுப் போனேன்.. அய்யனாரைப் போலவே குதிரையில் உட்கார்ந்து இருக்கும் உருவத்தை உற்று நோக்கினேன்.. ஆமாம்.. அது அய்யனார் அல்ல.. இஸ்லாமிய மன்னர்தான் என உறைத்தது.

Recommended Video

    இயல்பு நிலைக்குத் திரும்பிய திண்டுக்கல்
    சாமிகளாக இஸ்லாமியர்கள்

    சாமிகளாக இஸ்லாமியர்கள்

    அப்படியே இந்த அய்யனார் கோவில் தோற்றத்தில் இருக்கும் ஒவ்வொரு சிலையையும் நோட்டமிட்டேன்.. அத்தனை சிலைகளிலும் குல்லா, தாடி மற்றும் பூட்ஸ் கால் அணிந்த இஸ்லாமியர் தளபதிகள்.. கருவறையாக பூஜை நடக்கும் இடத்திலும் கூட பூட்ஸ் கால் அணிந்த நிலையில் ராஜாவும் அவரது தளபதிகள் இருவருமாக காட்சி தருகிறார்கள்.. அந்த சிலைகளுக்குதான் சூடம் ஏற்றி ஊதுபத்தியுடன் பய பக்தியுடன் வழிபாடு நடத்தி திருநீறு, எலுமிச்சை கொடுத்தார் பூசாரி பெரியவர். ஆம் முஸ்லிம் மன்னரையும் தளபதிகளையும் குலசாமியாகவே இந்துக்கள் மட்டுமே கும்பிடுகிற கோவில் இது.

    பட்டாணிசாமி கோவில் விருந்து

    பட்டாணிசாமி கோவில் விருந்து

    இந்த பட்டாணிசாமி கோவிலில்தான் கல்யாணம், காதுகுத்து, குழந்தை பேறு என அத்தனைக்கும் வேண்டிக் கொள்கின்றனர் இந்துக்கள். லாக்டவுனுக்கு முந்தைய காலத்தில் வாரந்தோறும் ஞாயிறன்று பட்டாணிசாமி கோவிலில் கறிவிருந்து அமர்க்களப்பட்டு கொண்டிருக்குமாம். இப்போதும் பட்டாணிசாமி கோவிலில் கிடாய் வெட்டும் இடத்தைப் பார்த்தாலே தெரியும்... எத்தனை கிடாய்களை பட்டாணிசாமிக்கு நேர்ந்துவிட்டிருப்பார்கள் என.. இப்படி ஒரு மிக உயர்வான தமிழர் பண்பாடு என் அருகிலேயே இருந்தது பெருமைக்குரியதாக இருந்தது. இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய மதநல்லிணக்கத்துக்கான மகத்தான பெருமதிப்புமிகு அடையாளம்தான் திண்டுக்கல் பாடியூர் பட்டாணிசாமி கோவில்.

    English summary
    A temple near Thindukkal has emerged as a Symbol of communal harmony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X