அருணாச்சல பிரதேச இளைஞரை கடத்தி கரண்ட் ஷாக் கொடுத்து சீன ராணுவம் அட்டூழியம்!
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்துக்குள் ஊடுருவி 17 வயது இளைஞரை கடத்திச் சென்று கரண்ட் ஷாக் கொடுத்து சீன ராணுவம் சித்ரவதை செய்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதியாக தொடர்ந்து உரிமை கோரி வருகிறது சீனா. இதற்கு ஒவ்வொரு முறையும் மத்திய அரசு பதிலடி தந்தும் வருகிறது.

நாட்டின் மத்திய அமைச்சர்கள் அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றாலே சீனா எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அண்மையில் கூட அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை தன்னிச்சையாக சீனா மாற்றியது.
இந்நிலையில் கடந்த மாதம் 17 வயது இளைஞர் ஒருவரை சீன ராணுவம் கடத்திச் சென்றது. நமது ராணுவம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஒருவாரம் கழித்து அந்த இளைஞரை சீனா விடுவித்தது. சீனாவால் விடுவிக்கப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்த இளைஞர் பெற்றோரிடம் நேற்று சேர்க்கப்பட்டார்.
காணாமல் போன அருணாச்சல பிரதேச இளைஞரை ஒப்படைத்தது சீனா ராணுவம்
இது தொடர்பான நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய இளைஞரின் பெற்றோர், சீன ராணுவம் மகனை கடத்திச் சென்றது. கடத்திச் செல்லும் போது கைகளையும் கண்களையும் கட்டியிருக்கின்றனர். ஒருவார காலமாக இதேநிலைமையில்தான் மகனை வைத்திருந்தனர். மகனை அடித்து உதைத்ததுடன் பின்பகுதியில் கரண்ட் ஷாக்கும் கொடுத்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் மனதளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மகன் இருக்கிறார் என்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 5 இளைஞர்களை சீனா ராணுவம் கடத்திச் சென்றது. இதேபோல ஒரு வாரம் அடைத்து வைத்து சித்ரவதை செய்த பின்னரே சீனா விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.