திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் இன்னொரு கொடூரம்.. சத்தமில்லாமல் அரங்கேறும் "சமூக விலக்கல்".. அரசுகள் சுதாரிக்க வேண்டும்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: கொரோனா தொற்று நோயை கையாள்வதில் அரசுகள் நடந்து கொண்ட விதம் ஒரு பக்கம் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், இந்திய சமூக அமைப்பின் அடிமட்டத்திலும் கூட நிஜமான சமூக விலக்கல் ஒன்று விஷமத்தனமாக சப்தமின்றி பேராபத்தாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தேசம் எங்கும் பல மாதங்களாக இஸ்லாமியர்கள் போராடினார்கள்.. இஸ்லாமியர்களுக்கு தோளோடு தோள் நின்று மதமாச்சரியங்களை தூர எறிந்து சக மனிதர்களாக கை கோர்த்து நின்றார்கள் பிற மதத்தினர்..

இந்த ஒற்றுமைக்குத்தான் கொரோனாவின் பெயரால் ஆகப் பெரும் வேட்டு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் 190 நாடுகளை கொரோனா பதம் பார்த்து மனித குலத்தையே நிர்மூலமாக்கிக் கொண்டு வருகிறது. அதேவிளைவுகள்தான் இந்திய மண்ணிலும் நிகழ்ந்திருக்கிறது. நிகழ்ந்தும் கொண்டிருக்கிறது. ஆனால் பெருந்துயரமாக இந்த கொரோனாவை பரவுவதற்கு காரணமே இஸ்லாமியர்கள் என்கிற கற்பிதம் லாக்டவுன் காலத்திலும் ரெக்கை கட்டி பறந்து அடித்தட்டு மக்களையும் சென்றடைந்திருக்கிறது என்பதுதான்.

இஸ்லாமியர் எதிர்ப்பு மன நிலை

இஸ்லாமியர் எதிர்ப்பு மன நிலை

அரசியல் புரிதல் ஏதுமில்லாத மிக சாதாரணமான நாட்டு நடப்புகளை மேம்போக்காக விவாதிக்கும் குடும்பம் ஒன்றின் உரையாடலில் நானும் பங்கேற்ற போது எழுப்பப்பட்ட வினாக்கள் தூக்கி வாரிப் போட்டன. அந்த உரையாடலில் இயல்பாக ஒருவர் கேட்கிறார். தற்கொலைப்படையை போல முஸ்லிம்கள் கொரோனாவை பரப்புகிறார்கள் போல என்கிறார். இன்னொருவரோ, இஸ்லாமியர்களால் மட்டும்தான் எல்லாம் நடக்குது என கொச்சை மொழியில் வசைபாடுகிறார். இன்னும் ஒருவர், எங்க ஊரு பக்கம் போலீஸே வந்தது இல்லை.. அந்த 4 வீட்டுக்காரங்க, பேகம்பூர் (திண்டுக்கல்) போய்ட்டு வந்தாங்க.. அதான் வினையே என அங்கலாய்க்கிறார்.

புதியதாக வந்த மாற்றம்

புதியதாக வந்த மாற்றம்

இதுமட்டுமல்ல. திண்டுக்கல் நகரில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகள் தீவைப் போல தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.. இது டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் இருந்த பகுதி என்பதால் கூட ஏற்கக் கூடியது. திண்டுக்கல் நகரில் இருந்து 20கிலோ மீட்டர் தொலைவில் எரியோடு ஒரு சிறு நகரம். இந்த இடைப்பட்ட தொலைவில் நானும் லாக்டவுன் காலத்தில் பயணித்து இருக்கிறேன். அப்போது வராத போலீசார், டெல்லி மாநாட்டு செய்தி பரவலுக்குப் பின்னர் இஸ்லாமியர்கள் வசிக்கும் ஊரில் டேரா போட்டிருக்கிறார்கள். இப்போது அந்த பகுதியை கடந்து வருபவர்கள் சொல்கிறார்கள்.. அந்த ஒரு ஊரை கடந்துவிட்டால் போலீஸ் சிக்கல் எங்குமே இல்லை.. எல்லாம் அவர்களால் வந்தது என்கிறார்கள்.

சிறுவர்களிடம் விஷ விதை

சிறுவர்களிடம் விஷ விதை

10 வயது சிறுவனிடம் இந்த ஊர் வழியாகவும் நம்ம கிராமத்துக்கு செல்லலாம் என கூறினால்.. வேண்டாம்.. அங்கே.. அவர்கள் அதிகம்.. கொரோனா பரவிவிடும் என்கிறான்.. அவன் நீண்டநாட்களாக சாப்பிட விரும்பியது அந்த கடையின் பிரியாணி.. அதை கடக்கும் போது இங்கே பார்சல் வாங்கலாமா? என்றால் அய்யோ இந்த ஊரிலா என மிரட்சியை காட்டுகிறான்.. இப்படித்தான் பிஞ்சுகள் மனதில் சமூக விலக்கம் என்கிற விஷ விதை கொரோனாவால் விதைக்கப்பட்டிருக்கிறது.

சமூகத்தில் தனிமைப்படுத்துதல்

சமூகத்தில் தனிமைப்படுத்துதல்

இதைவிட பெருங்கொடுமை ஒன்றை நேரில் காணவும் நேரிட்டது.. கையறு நிலையாய் நிற்கவும் தள்ளப்பட்ட துயரம் அது.. திண்டுக்கல் மாநகரில் திருச்சி சாலையில் இயங்கி வருகிறது தனியார் மருத்துவமனை. இந்த நகரிலேயே அரசு மருத்துவமனைக்கு அடுத்ததாக முழுமையான வசதிகளுடன் முழு வீச்சில் செயல்படுகிறது இந்த மருத்துவமனை. இரவு 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் பேகம்பூரில் இருந்து ஒரு முஸ்லிம் பெரியவர் இளம்வயது மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். எட்டி நின்று வழிமறித்த மருத்துவமனையின் வாட்ச்மேனிடம், பாப்பா கீழே விழுந்துவிட்டது.. கால் பிசகிவிட்டது டாக்டரை பார்க்கனும் என்றார். ஆனால் வாட்ச்மேனோ டாக்டர் யாருமே இல்லை என 24X7 எமர்ஜென்சி என ஒளிரும் பலகையின் கீழ் நின்று வேண்டா வெறுப்பாக உறுமிக் கொண்டிருந்தார். அந்த பெரியவர் பேகம்பூர் என்று சொன்னதுதான் தாமதம்.. சுற்றியிருந்தவர்களிடம் வெளிப்பட்ட ஒரு அசூயை வெட்கித் தலைகுனிய வைத்தது.

விஷம பிரசாரம்

விஷம பிரசாரம்

அதே மருத்துவமனையில் இரவு 7 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் ஊர்சுற்றி கீழே விழுந்த போக்கிலி இளைஞர்களுக்கு அதே 24X7 அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவம் பார்க்கப்பட்ட காட்சியையும் பார்த்துவிட்டு மவுனமாகத்தான் நகர்ந்தேன். மததுவேஷிகள் பல்லாயிரக்கணக்கான பிரசார மாநாடுகள் மூலம் சாதிக்காததை 15 நாள் கொரோனா லாக்டவுன் காலம் சாதித்திருக்கிறது. காரணம் கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்களே காரணம் என்கிற தொனியில் எந்த ஒரு பொறுப்புமே இல்லாமல் போகிற போக்கில் பேசிவிட்டுப் போன அதிகாரிகளும் சமூக விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பின்தொடர்ந்த ஊடகத்தாரும்தான்.

இவற்றை எல்லாரும் மறந்துவிட்டார்கள்

இவற்றை எல்லாரும் மறந்துவிட்டார்கள்

ஆனால் பல உண்மைகளை எல்லோரும் வசதியாக மறந்து விட்டனர்.. டெல்லியில் தப்லீக் மாநாடு நடந்தது மார்ச் 14,15 தேதிகளில். ஆனால் மகாராஷ்டிராவின் சித்தி விநாயகர் கோவிலும் மஹா காலேஸ்வர் கோவிலும் மார்ச் 16-ந் தேதி வரை மூடப்படவில்லை. ஷீரடி சாய்பாபா கோவிலும் சனி ஷிக்னாபூர் கோவிலும் மார்ச் 17-ந் தேதிதான் மூடப்பட்டது. மார்ச் 18-ல்தான் வைஷ்ணவி தேவி கோவில் நடை சாத்தப்பட்டது. மார்ச் 20-ந் தேதி வரை அதாவது ஒட்டுமொத்த தேசமே முழுமையாக லாக்டவுனை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்த மார்ச் 19-ந் தேதிக்கு மறுநாள் வரை புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் மூடப்படாமல் தரிசனத்துக்காக திறந்தே வைக்கப்பட்டிருந்தது.

பின்வாங்குகிற அரசு அதிகாரிகள்

பின்வாங்குகிற அரசு அதிகாரிகள்

ஈரோட்டில் அடுத்தடுத்து இதே டெல்லி மாநாட்டுக்குப் போய் வந்தவர்களால் தொற்று ஏற்பட்டதை கூட படுநாசூக்காகத்தான் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், தொடர்ந்து கூறப்பட்ட டெல்லி மாநாடு என்ற வார்த்தை மிகப் பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது உண்மை. இதற்கெல்லாம் இஸ்லாமியர்கள் மட்டுமே காரணம் என்கிற அளவுக்கு மக்கள் கருத ஆரம்பித்து விட்டனர். ஆனால் தற்போது தாங்கள் செய்த தவறை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்களே ஜகா வாங்குகிறார்கள்..

சுதாரிக்காவிட்டால் விளைவு மோசம்

சுதாரிக்காவிட்டால் விளைவு மோசம்

ஆனால் விதைக்கப்பட்டு விட்ட இந்த அதிதீவிரமான நச்சு விதையை அவ்வளவு எளிதாக அறுத்துவிடவா முடியும்? அரசுகள் சுதாரிக்க வேண்டும்.. அனைத்து மதத்தினர் மத்தியில் யாரும் யார் மீதும் துவேஷமாக விஷத்தைக் கக்காத அளவுக்கு சமூக நல்லிணக்கத்தைக் கட்டமைக்க வேண்டியது மிக மிக அவசியம். இல்லாவிட்டால் கொரோனாவுக்குப் பிந்தைய கால கட்டம் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி அரசுகளுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்து விடும்.

English summary
Here is a article on How the Coronavirus Lockdown created a real social distance against the Muslims in Country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X