திண்டுக்கல் இளம் பெண் சாவில் திடீர் திருப்பம்.. காதலன் கைது.. நண்பனும் சிக்கினார்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே வாகரையில் பிணமாக கிடந்த இளம் பெண் சாவில் திடீர் திருப்பமாக கழுத்தை இறுக்கி காதலனே கொலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.. உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள வாகரையில் சாலையோரத்தில் கடந்த 5ம் தேதியன்று 20 வயது இளம் பெண் அழுகிய நிலையில் பிணமாக உள்ளதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இது குறித்து கள்ளி மந்தையம் போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த பெண், ஜெயஸ்ரீ(20) என்று தெரியவந்தது. இவர் வடமதுரை அருகே தென்னம்பட்டி இந்திராநகரைச் சேர்ந்த கொத்தனார் கதிர்வேல் என்பவரின் மகள் என்பது தெரியவந்தது.

செல்போனில் பேச்சு
ஜெயஸ்ரீ எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், அவரது செல்போனை வைத்து ஆய்வு செய்தனர். ஜெயஸ்ரீயுடன் செல்போனில் பேசியது யார் யார்? என்ற பட்டியலை சேகரித்த போலீசார், அதில் பழனி அடுத்த கோம்பைப்பட்டியைச் சேர்ந்த தங்கதுரை(25) என்பவருடன் அதிக நேரம் பேசியது தெரியவந்தது.

இரண்டு பேரும் கைது
இதையடுத்து போலீசார் அவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர், விசாரணையில் தனது நண்பன் ஜெகநாதன்(25) என்பவருடன் சேர்ந்த தங்கதுரை கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் தங்கத்துரை வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேடசந்தூர் அருகே தனியார் மில்லில் தங்கதுரை வேலை செய்து வந்துள்ளார். அதே மில்லில் வேலை செய்தவர் தான் தங்கதுரை. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

சேர்ந்து சாகலாம்
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கதுரையிடம் ஜெயஸ்ரீ வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தங்கதுரையோ வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நம் திருமணத்தை வீட்டில் ஏற்க மாட்டார்கள் என்று கூறி தங்கதுரை மறுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜெயஸ்ரீ திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று தொல்லை கொடுத்தாராம். இதனால் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என தங்கதுரை கூறியிருக்கிறார். இதற்கு ஜெயஸ்ரீ சம்மதித்துள்ளார்.

கழுத்தை இறுக்கி கொலை
இதையடுத்து தங்கதுரை, ஜெயஸ்ரீ ஆகியோர் கடந்த 1ம் தேதி ஒட்டன்சத்திரம் வந்துள்ளனர். பின்னர் தங்கதுரையின் நண்பர் ஜெகநாதனுடன் சேர்ந்து 3 பேரும் வாகரை பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்திருந்த கயிற்றால் கழுத்தை இறுக்கி ஜெயஸ்ரீயை கொலை செய்தனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இழப்பீடு கேட்டு மறியல்
இந்நிலையில் ஜெயஸ்ரீயின் உடல் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் குவிந்தனர், அவர்கள் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஜெயஸ்ரீயின் சாவுக்கு இழப்பீடு கேட்டு நடந்த போராட்டத்தில் தனியார் மில் வேன் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது,. இதையடுத்து விரைந்து வந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர், வேனை சேதப்படுத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.