அக்னிபத் திட்டத்திற்கு நீடிக்கும் எதிர்ப்பு..தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போராட்டம்
திண்டுக்கல்: அக்னி பாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டுமென மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் புதிதாக ஆள் சேர்க்கும் வகையில் அக்னிபத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. வட மாநிலங்களில் இளைஞர்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டாலின் சுற்றுப்பயணம்: 'அந்த மேட்டர் இல்ல’ 3 மாவட்டங்களுக்கு.. தள்ளிப்போனதை கையில் எடுத்த முதல்வர்!
பல்வேறு பகுதியில் ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தன. ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது சொத்து போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன. தொடர்ந்து தென் மாநிலங்களில் அக்னிபத் எதிராக போராட்டம் பரவியது. குறிப்பாக தெலுங்கானாவில் ரயில்நிலையத்தில் நடத்த போராட்டத்தை கட்டுபடுத்த, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகினர்.

அக்னிபாத் போராட்டம்
நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் இரண்டு முறை தனது இல்லத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான உச்ச வயது வரம்பிலிருந்து இந்த ஆண்டு மட்டும் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஆயுதப்படை மற்றும் அசாம் ரைபிள் பிரிவில் அக்னி வீரர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

57000 பேர் விண்ணப்பம்
பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் உள்ள வேலைவாய்ப்பில் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இருப்பினும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. நாடுமுழுவதும் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சி போராட்டம்
இதனிடையே இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் தராத, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிற அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று தலைவர் ராகுல் காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அழைப்பு விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்லில் போராட்டம்
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்தனர். இதில் கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், வேங்கைராஜா, ஒழுங்கு நடவடிக்கை குழு முகமது சித்திக், துணை தலைவர் அப்துல் ரஹ்மான், மாமன்ற உறுப்பினர் பாரதி, மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரோஜாம்மாள், காங்கிரஸ் கட்சியின் மண்டலத் தலைவர் அப்பாஸ் மந்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பழனியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பார்ட்டம்
பழனி பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி வேல் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு, அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஜூலை 5 கடைசி தேதி
இதனிடையே அக்னிபத் திட்டத்தின் மூலம் இராணுவத்தில் சேருவதற்கு விண்ணப்பித்தற்கான வாய்ப்பு ஜூலை 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தொண்டர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதில் பலர் கைதாகினர்.