ஓமன் துணை விமானியை விடுங்க.. புதிதாக கைதான மாலத்தீவை சேர்ந்த 2 பைலட்டுகள்.. பகீர் தகவல்
துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தில் இந்திய விமானியை தாக்கிவிட்டு விமானத்தை கடத்த முயன்ற வழக்கில் ஓமன் துணை விமானி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மாலத்தீவை சேர்ந்த 2 பைலட்டுகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளயாகி உள்ளது.
செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு 'ஃப்ளைதுபாய்' விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை இயக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கிய ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி விமானத்தை கடத்த முயன்றார். இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

விமானத்தை கடத்த முயன்ற ஓமன் நாட்டின் ஹமாம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஐக்கிய அருபு அமீரகத்தை சேர்ந்த அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இநநிலையில் தான் தற்போது மாலத்தீவை சேர்ந்த 2 பைலட்டுகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் 'ஃப்ளைதுபாய்' நிறுவனத்தில் தான் பணியாற்றி வருகிறார். ஒரே கட்டடத்தில் 3 பேரும் தங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி மாலத்தீவை சேர்ந்த 2 விமானிகளும் இஸ்ரேலுக்கு விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர்களாக உள்ளனர். இருப்பினும் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இன்னும் முழு விவரம் வெளியாகவில்லை.
கைதான 2 மாலத்தீவு பைலட்டுகளுக்கும், ஓமன் துணை விமானி விமானத்தை கடத்தும் திட்டம் பற்றி முன்கூட்டியே அறிந்து வைத்திருக்கலாம். அல்லது விமானத்தை கடத்துவதற்கு திட்டம் வகுத்து கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை அதிகாரிகள் சொன்னால் தான் உண்மை தெரியவரும்.
அதேவேளையில் மாலத்தீவை சேர்ந்த 2 பைலட்டுகள் கைது செய்யப்பட்டு இருப்பது பற்றி மாலத்தீவில் உள்ள அவர்களின் குடும்பத்துக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மாலத்தீவின் தூதரகம் வழியாக இந்த தகவல் சொல்லப்பட்டுள்ளதாக மாலத்தீவை சேர்ந்த பத்திரிகை 'Adhadhu' செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், ''மாலத்தீவை சேர்ந்த 6 பைலட்டுகள் சமீபத்தில் 'ஃப்ளைதுபாய்' விமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தனர். இவர்கள் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமியுடன் பணி நிமித்தமாக பேசி வந்துள்ளனர்'' என்று கூறியுள்ளது. அதேவேளையில் மாலத்தீவின் 'Standared Maldives' வெளியிட்டுள்ள செய்தியில், ''தற்போது கைதாகி உள்ள 2 மாலத்தீவு விமானிகளும், ஓமன் துணை விமானியுடன் ஒரே கட்டடத்தில் தங்கி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் தாக்குதலுக்கான தயாரிப்பு பணியில் உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது'' என கூறியுள்ளது.
மாலத்தீவை சேர்ந்த 2 பைலட்டுகளும் கடந்த 3ம் தேதியே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அதுபற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அந்த விமானிகளின் பெயர் என்ன? அவர்கள் எப்படி இந்த சம்பவத்தில் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர்? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி விசாரணை அதிகாரிகள் ரகசியம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
