பக்கா பிளான்.. ஸ்காட்லாந்தை சுருட்டிய இந்திய அணி! ரவீந்திர ஜடேஜா படைத்த ரெக்கார்ட்! ஏமாற்றிய வருண்
துபாய்: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளனர் பந்துவீச்சாளர்கள்.
ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ரன் ரேட்டுடன் வெற்றி பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று களம் கண்டது இந்தியா. இந்த தொடரில் தொடரில் முதல் முறையாக விராட் கோலி டாஸ் வென்றார். ஆரம்பத்திலேயே அவருக்கு பிறந்த நாள் பரிசு காத்திருந்ததை டாஸ் வெற்றி உறுதி செய்தது.
புதிய கொரோனா அலை.. ஆபத்தை நோக்கி 53 நாடுகள்.. 5 லட்சம் மரணங்களுக்கு வாய்ப்பு.. ஹு எச்சரிக்கை!
இதன் பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக பந்துவீசி கேப்டன் மனதை குளிர வைத்து விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஸ்பின் வியூகம்
ஸ்காட்லாந்து அணி வீரர்கள் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு பழகியவர்கள். எனவே அவர்களை சுழலில் சிக்க வைத்து திணறடிக்க வேண்டும் என்பது இந்திய அணியின் வியூகமாக இருந்தது. நியூசிலாந்துக்கு எதிராக ஸ்காட்லாந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் மட்டும்தான் தோல்வி அடைந்தது. சிறப்பாக ஆடி நியூசிலாந்துக்கு பயம் காட்டியது. எனவே இந்திய அணி அதிகப்படியான சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் காண்பது சிறப்பாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தது நிர்வாகம். எனவேதான் ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி ஆகிய இரண்டு ஸ்பின்னர்கள் இன்றைய போட்டியில் ஆடினனர். கூடுதலாக ஒரு ஸ்பினஅனராக, வழக்கம்போல ரவீந்திர ஜடேஜா பந்து வீசினார்.

ரவீந்திர ஜடேஜா கலக்கல்
அதிலும், குறிப்பாக, ரவீந்திர ஜடேஜா இன்று விஸ்வரூபம் எடுத்தார் 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிச்சி பெர்ரிங்டன், ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் கிளீன் போல்டான விதம் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளருக்கே உரித்தான முத்திரை பந்துவீச்சு. அதேபோல மைக்கேல் லீஸ்க், ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டான விதமும் உற்சாகமளிக்கும் வகையில் இருந்தது.

திணறிய ஸ்காட்லாந்து
ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரு வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக யார்க்கர் வீசி ஸ்காட்லாந்தை திணற வைத்தனர். மிஸ்ட்ரி ஸ்பின்னர் என்ற எதிர்பார்ப்போடு இந்திய அணிக்கு அழைத்து வரப்பட்ட வருண் சக்கரவர்த்தி மூன்றாவது போட்டியில் இன்று ஆடியபோதிலும் இன்றும் ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை. ஆம்.. இதுவரை எந்த போட்டியிலும் அவர் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. நியூசிலாந்து, பாகிஸ்தான் கூட ஓகே. ஸ்காட்லாந்துடனும் வருண் சக்கரவர்த்தி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது. வருண் சக்கரவர்த்தி 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார், விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை. 3 ஓவர்களில் அவர் கொடுத்த ரன்னும் சற்று அதிகம்தான்.

விராட் கோலிக்கு பிறந்த நாள் பரிசு
அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர் என்பதை என்று நிரூபித்தார். 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்த தவறவில்லை. மொத்தத்தில் ரவீந்திர ஜடேஜா இன்று ஸ்டாராக ஜொலித்தார். 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி துபாய் சர்வதேச மைதானத்தை ரசிகர்களின் கரகோஷத்தால் அதிர வைத்தார். இதைவிட சிறப்பான பிறந்தநாள் பரிசு விராட் கோலிக்கு வேறு என்ன இருக்க முடியும்?

சாதித்த ரவீந்திர ஜடேஜா
இந்த ஸ்கோரை குறைந்த ஓவர்களில் அடித்து ஜெயித்தால் இந்தியாவின் ரன் ரேட் கிடுகிடுவென ஆப்கானிஸ்தானை விட வேகமாக உயர்ந்து விடும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சமி ஆகிய இருவருக்குமே சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இதுதான் பெஸ்ட் பந்துவீச்சு ஆகும். இதுவரை அவர்கள் ஒரே போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது கிடையாது. இன்று அந்த சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.