துபாயில் இருந்து.. அபுதாபி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்! முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்
துபாய்: முதல்வர் ஸ்டாலின் தனது துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது அபுதாபிக்குச் சென்றுள்ளார்.
சர்வதேச முதலீடுகள் ஈர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார்.
இந்த 4 நாட்கள் பயணத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
கடல் கடந்து சென்றேன்! கை நிறைய முதலீடுகளை பெற்றேன்! துபாயிலிருந்து முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

முதல்வர் ஸ்டாலின்
முன்னதாக துபாயில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைபெறும் உலக எக்ஸ்போ கண்காட்சியில் மார்ச் 25 முதல் மார்ச் 31 வரை தமிழ்நாடு வாரம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அதையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளைக் காட்சிப்படுத்தும் வகையில் அந்த அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 192 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முக்கிய சந்திப்பு
அதைத் தொடர்ந்து அங்குள்ள முக்கிய அமைச்சர்கள் முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக உள்ள சூழல் குறித்தும் அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் விவரித்தார். மேலும், ஐக்கிய அமீரக அமைச்சர்களையும் முதலீட்டுக் குழுவையும் தமிழ்நாட்டிற்கு வருமாறும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

துபாயில் ஸ்டாலின்
துபாய் நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள அயலக தமிழர்களிடையே உரையாடினார். "நம்மில் ஒருவர், நம்ம முதல்வர்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அயலக தமிழர்களிடையே உரையாடினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக அரசை அயலக தமிழர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர். மேலும், தாயின் கனிவோடு திமுக அரசு அயலக தமிழர்களைப் பாதுகாக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

அபுதாபியில் ஸ்டாலின்
பின்னர் இன்று துபாயில் உள்ள Museum of the Futureஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது அபுதாபிக்குச் சென்றுள்ளார். சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நாளை காலை அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.