சூப்பர்! 3 அடி உயர மனிதரை பணிக்கு அழைக்கும் 35 நிறுவனங்கள்! காங்கிரஸ் எம்எல்ஏ செயலால் மாறிய வாழ்க்கை
குவாலியர்: பட்ட மேற்படிப்பு படித்திருந்தும் உயரம் குறைவால் வேலை கிடைக்காமல் தவித்த 28 வயது வாலிபருக்கு காங்கிரஸ் எம்எல்ஏ செய்த செயலால் 35 நிறுவனங்களில் இருந்து நேர்க்காணலுக்கான அழைப்பு வந்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் பதாக், அங்கேஷ் கோஷ்தியின் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் அங்கேஷ் கோஷ்தி (வயது 28). இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் பட்ட மேற்படிப்பு படித்து முடித்துள்ளார்.
நள்ளிரவில் 5 பேர்.. கதறிய பெண் மருத்துவர்! வேலூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்! பாய்ந்தது குண்டாஸ்
அங்கேஷ் கோஷ்தியின் தாய் பீடி தொழிற்சாலையில் வேலை செய்யும் நிலையில் தந்தை தையல் தொழிலாளியாக உள்ளார். வறுமையிலும் கூட அங்கேஷ் கோஷ்தியை அவர்கள் படிக்க வைத்தனர்.

உயரம் குறைவு
அங்கேஷ் கோஷ்தி பட்ட மேற்படிப்பை முடித்த நிலையில் 2020 முதல் வேலை தேடி அலைகிறார். ஆனால் அவருக்கு வேலை என்பது எட்டாக்கனியாக உள்ளது. இதற்கு அவரது உயரம் தான் காரணமாக கூறப்படுகிறது. 3 அடி 7 இன்ச் உயரம் உள்ள அங்கேஷ் கோஷ்தி பல்வேறு இடங்களில் பணி தேடினார்.

சிரமத்தில் குடும்பம்
திறமைகள் இருந்தும் கூட உயரம் குறைவை காரணம் காட்டி நிறுவனங்கள் அவருக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். மேலும் அவரது குடும்பம் சிரமத்தை சந்தித்து வந்தது. மகன் படித்து வேலை வாங்கி குடும்ப பொருளாதார நிலையை உயர்த்தி விடுவான் என்ற அவரது பெற்றோரின் கனவு நனவாகவில்லை.

காங்கிரஸ் எம்எல்ஏ உதவி
இந்நிலையில் தான் அங்கீஷ் கோஷ்தியின் விஷயம் குவாலியர் தெற்கு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பிரவீன் பதாக் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து அவர் அங்கீஷ் கோஷ்தி குறித்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவரது குடும்ப சூழலையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலர் அங்கீஷ் கோஷ்திக்கு உதவி செய்ய முன்வந்தனர்.

35 நிறுவனங்கள் அழைப்பு
இதை பதிவிட்ட அடுத்த சில மணிநேரங்களில் பல நிறுவனங்கள் அங்கீஷ் கோஷ்தியை வேலைக்கு அழைக்க துவங்கின. 30 முதல் 35 நிறுவனங்கள் வரை அவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளன. இதனால் அங்கீஷ் கோஷ்தி மகிழ்ச்சியில் உள்ளார். மேலும் எம்எல்ஏவான பிரவீன் பதாக்கின் உதவிக்கு அங்கீஷ் கோஷ்தி உள்பட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.