• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலையங்கம்: இடஒதுக்கீட்டில் கைவைத்துப் பார்க்க துடியாய் துடிக்கும் 'இந்துத்துவா'

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: "படேல்களுக்கு இடஒதுக்கீடு கொடு; இல்லையேல் எவருக்குமே இடஒதுக்கீடு கூடாது"

"ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறைக்கு முடிவுகட்டும் தருணம் வந்துவிட்டது"

"பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து ஆராய வேண்டும்"

"அரசியல்கருவியாக பயன்படுத்தப்படுகிறது இடஒதுக்கீடு"

கடந்த சில மாதங்களாக 'தலைப்புச் செய்திகளாக' அடிபட்டுக் கொண்டிருக்கிறது இந்த முழக்கங்கள்...

Editorial: Hindutva outfits attempt to destroy Reservation Policy

குறிப்பாக குஜராத்தின் முற்படுத்தப்பட்ட சமூகமான படேல் வகுப்பினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி நடத்திய கிளர்ச்சியைத் தொடர்ந்து இந்த முழக்கங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

ஹர்திக் படேல் என்ற 22 வயது இளைஞர் தலைமையில் லட்சக்கணக்கான படேல் சமூகத்தினர் ஒன்று திரண்டு இடஒதுக்கீடு கோரி போராடிய போது 'காந்தியின் மண்ணில் பெரியார் நுழைந்தார்' என்றனர்.

அப்போது ஹர்திக் படேல் யார்? இந்த கிளர்ச்சியின் பூர்வோத்திரம் என்ன? என்று ஊடகங்கள் அலசத் தொடங்கிய நேரத்தில் 'பூனைக்குட்டி வெளியே வந்தது' கதையாக ஹர்திக் படேல் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். "எங்களுக்கு இடஒதுக்கீடு கொடு.. இல்லையேல் இடஒதுக்கீட்டு முறையையே ஒழி" என்ற சாரம்சமே அந்த வாக்குமூலம்.

அதற்கும் முன்னதாகவே ஹர்திக் படேலின் கிளர்ச்சியில் நாங்கள் மத்தியஸ்தம் செய்யப் போகிறோம் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கம் களமிறங்கியது.. அந்த இயக்கம் சொன்னால் ஹர்திக் படேல் சமாதானமாகிவிடுவார் எனில் அவர் நிச்சயம் ஒரு காங்கிரஸ் அனுதாபியாக இருக்க முடியாது என்பது ஊரறிந்த உண்மையாகிவிடுகிறது.

ஹர்திக் படேலை முன்வைத்து தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்கள் நாட்டின் எந்த மூலைக்குப் போனாலும் மறக்காமல் பேசிவிட்டு வருவது "ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீடு" முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டிய தருணம் இது என்பதுதான்...

அதாவது "ஜாதிய அடிப்படையில் இடஒதுக்கீடு" கொடுக்கப்பட்டதால் நாட்டில் அனைத்து மக்களும் சுபிட்சமடைந்துவிட்டனர்; ஆகையால் இனி பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுத்து அப்படியே படிப்படியாக இந்த இடஒதுக்கீட்டு முறைக்கே 'சமாதி' கட்டிவிடலாம் என்பதை பகிரங்கமாக சொல்லாமல் பூசி மெழுகிக் கொண்டிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா இயக்கத் தலைவர்கள்.

"ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீடு" என்பது ஏதோ இந்திய அரசியல் சாசனம் இந்த நாட்டின் மக்களுக்கு கொடுத்த சலுகை போல பிரசாரம் செய்கிறார்கள் இந்துத்துவா பிரசாரகர்கள்...

"வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்" "ஜாதிவாரி இடஒதுக்கீடு" என்பதெல்லாம் இந்த தேசத்து மக்களின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை நோக்கிய போராட்டம் நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்டது..

1928ஆம் ஆண்டு பெரியார் ஆதரவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகுப்புவாரி இடஒதுக்கீட்டு ஆணையை அன்றைய சென்னை மாகாணம் பிறப்பித்தது...அதாவது தங்களை உயர்ஜாதி என்று தாங்களே சொல்லிக் கொள்கிற சமூகத்தினர் கல்வி,வேலைவாய்ப்பில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த ஏகபோகத்துக்கு வேட்டு வைத்து இந்த மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் சம அளவிலான ஜாதிவாரியிலான.. வகுப்புவாரியிலான பிரதிநிதித்துவம் கிடைக்க வகை செய்தது அந்த உத்தரவு.. அதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து ருட்சமாக இன்று "இடஒதுக்கீடு" என்ற பெருமரமாக வளர்ந்து நிற்கிறது.

இந்தப் பெருமரத்தின் நிழலைக் கூட இன்னமும் முழுமையாக அனுபவிக்க முடியாத துயரம் இருக்கிறது. அதெப்படி 69% இடஒதுக்கீடு தரலாம்? நீங்க 50% இடஒதுக்கீட்டுக்கு மேலே போனது தப்பு.. என்கிற சட்டாம்பிள்ளைத் தனங்கள் இன்னொரு புறம்...

இடஒதுக்கீட்டின் அடுத்த பரிமாணமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கமைய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதுதானே தவிர ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையே ஒழித்துவிடு; அல்லது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற குறுக்குசாலெல்லாம் ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள்.

இந்த புளித்துப் போன இற்றுப் போன வாதங்களை மீண்டும் மீண்டும் இந்துத்துவா சக்திகள் கையிலெடுப்பது என்பது ஒரு சமூகம் அனைத்திலும் மேலாதிக்கம் செலுத்த வேண்டும்; எங்கள் கையில் அரசு இருக்கிறது.. என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற மமதைகளின் கூப்பாடுதானே தவிர வேறு எதுவும் கிடையாது....

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் வெறும் 27% இடஒதுக்கீடு மட்டுமே என கொண்டுவரப்பட்ட சட்டத்துக்கு எதிராக இந்த தேசத்தையே பற்றி எரியவைத்துப் பார்த்தீர்கள்.. ஆனால் தமிழகம் மட்டும் அமைதிப் பூங்காவாக அதை கொண்டாடி மகிழ்ந்த வரலாறு "ஜஸ்ட்" கால் நூற்றாண்டுக்கு முந்தையதுதான் என்பதை மறந்துவிடாதீர்கள்...

இடஒதுக்கீடு ஏதோ தமிழகத்து பெரியாரின் கோட்பாடு மீது நடத்துகிற தாக்குதல் அல்ல; மகாராஷ்டிராவின் பூலே... மத்திய இந்தியாவின் லோகியா என இந்தியப் பெருநிலப்பரப்பெங்கும் இவர்களது வாரிசுகள் விரிந்து கிடக்கிறார்கள்...

"இடஒதுக்கீடு" என்பது அரசுகள் போடும் பிச்சையுமல்ல..சலுகையும் அல்ல..

இந்திய மண்ணின் பெரும்பான்மை மக்களின் "அடிப்படை உரிமை"களில் ஒன்று...

இந்த விஷயத்தில் விளையாடுவது யாருக்கும் நல்லதல்ல. குறிப்பாக தமிழகத்தில் அதன் எதிர் விளைவுகள் கடுமையானதாகவே இருக்கும்!

English summary
Hindutva outfits try to destroy the Reservation Policy which is the birthright of oppressed people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X