For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலையங்கம்: துயரம் தொடராதிருக்க இந்தியா- பாக் இணைந்து தீவிரவாதத்தை வேரறுக்கட்டும்!!

By Mathi
Google Oneindia Tamil News

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தலிபான்கள் போட்ட வெறியாட்டம் உலகை உலுக்கியுள்ளது... 132 பிஞ்சு குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டும், தலைகளை துண்டித்துமாக கொலைவெறித் தாண்டவமாடியிருக்கிறது தலிபான் கும்பல்..

பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் பெயரளவுக்கு ஒரு ஜனநாயக ஆட்சி.. நடைமுறையில் ஒரு ராணுவ ஆட்சி.. எப்போதும் அச்சுறுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். உளவு அமைப்பும் ஆதரவு தீவிரவாதிகளும்... எல்லையில் டேரா போட்டு இப்படி கொலைவெறியாட்டம் போடும் தலிபான்கள் என்பதாகத் தான் இருக்கிறது..

Pakistan Should join hands with India

இந்த பிரிவுகளில் எவர் ஒருவர் தலையெடுத்தாலும் மற்றொருவர் 'தலை'யை காவு வாங்குவது என்பது சாத'ரணமாகி'விட்டது! ஆப்கானிஸ்தானில் ஒடுக்கப்பட்ட தலிபான்கள் பாகிஸ்தானின் வஜ்ரிஸ்தான் எல்லையில் பதுங்கிக் கொண்டு வாலாட்டிக் கொண்டிருக்கின்றனர்..

சர்வதேச நெருக்கடி.. அமெரிக்காவின் மிரட்டல்... வேறுவழியில்லாமல் தலிபான்களை ஒடுக்குகிறோம் என பாகிஸ்தானும் தாக்குதல் நடத்துகிறது..

இப்படி கடந்த ஜூன் மாதம் முதல் தலிபான்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடிதான் "பெஷாவர் படுகொலை" என்கிறார்கள் தலிபான்கள்.. அதற்காக பிஞ்சுக் குழந்தைகளை பலியெடுப்பது என்பது மன்னிக்க முடியாத மாபாதகம்..

போர்க்களத்தில் உற்றார் உறவுகள் என அனைவரையும் இழந்த பிள்ளைகள் அடைக்கலமாகி இருந்த தமிழீழத்தின் செஞ்சோலை மீது சிங்கள ராணுவம் கொண்டு வீசி 61 பிஞ்சுகளை பலி கொண்டது.. அதற்காக சிங்கள கல்வி நிலையங்கள் மீதும் பள்ளிக் கூடங்கள் மீதும் ஈழத் தமிழர்கள் தாக்குதல் நடத்திவிடவில்லை என்பது சில ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு... இதுதான் போர் மரபு..

உங்களது யுத்தம் பாகிஸ்தானுக்கு எதிரானது எனில் உலகமே அறியாத பிஞ்சு குழந்தைகளையா பலி கேட்பது பாதகர்களே! இந்த தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் என்ன செய்யப் போகிறது என்பதுதான் முதன்மையான கேள்வி!

"பலியான குழந்தைகள் என் குழந்தைகள்.. என்னுடைய இழப்பு" என்று பதறுகிறார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.. "தலிபான்களுக்கு எதிரான யுத்தம் தொடரும்" என்றும் பிரகடனம் செய்கிறார் ஷெரீப்.. இவை அனைத்துமே உணர்வுப்பூர்வமானவையே.. இதுவே பாகிஸ்தான் அமைதி பூமியாகிவிட வழியாகுமா?

பாகிஸ்தான் பெயரளவில் ஜனநாயக நாடாக இருப்பதுதான் அதன் சிக்கலே. முழுமையான ஒரு ஜனநாயக நாடாக அந்த நாடு உருவாக வேண்டும். ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நேசித்து இத்தகைய உயிரிழப்புகள் இல்லாது போகவேண்டுமெனில் அந்த மண்ணில் எந்த வகையான எவருக்கு எதிரான தீவிரவாதம் என்பது வேரறுக்கப்பட வேண்டும்.

நிலப்பரப்பு, மதப் பற்று இவற்றின் பெயரால் துவேஷங்களை உருவாக்கி தீவிரவாதிகளை படை படையாய் உருவாக்கி பாகிஸ்தான் சாதிக்கப் போவது எதைத்தான்? இப்போது பிஞ்சு குழந்தைகளை பலியெடுத்திருப்பது உங்களது சொந்த சகோதரர்கள்தானே..

இப்போது உங்களுக்கு ஆதரவாக அத்தனை மாச்சரியங்களையும் தூர எறிந்துவிட்டு கண்ணீரோடு ஆதரவுக் கரம் நீட்டுவது இந்தியா அல்லவா? இந்திய தேசத்தின் நாடாளுமன்றம் உங்களுக்காக கண்ணீர் சிந்துகிறது.. இந்திய தேசத்து பள்ளிப் பிஞ்சுகள் உங்களுக்காக பிரார்த்திக்கிறார்கள்.. நினைவேந்தல் நடத்துகிறார்கள்..

உங்களால் எத்தனையோ இன்னல் நேர்ந்த போதும் கூட இந்திய தேசம் கனத்த மனதுடன் உங்களின் பின்னால்தானே நிற்கிறது.. இந்த இந்தியப் பெருந்தேசத்துடன் கை கோர்த்து உற்ற உறவாய் சகோதரராக நீண்ட நெடுங்காலம் அமைதியாக வாழ ஏன் பாகிஸ்தானுக்கு தயக்கம்? இப்போதும் காலம் தாழ்ந்துவிடவில்லை..

இந்தியாவுடன் இணைந்து கரம் கோர்த்து தீவிரவாதம் என்ற நச்சுகளை இணைந்து பாகிஸ்தான் நசுக்கட்டும்.. எல்லையில் ஊடுருவல் போன்ற பயங்கரவாத செயல்கள் நடைபெறாத வகையில் இருதரப்பு உறவை வலுப்படுத்தட்டும்..

இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு சக்திகளையும் ஆதரிக்காமல் நேர்மையான நட்பு நாடாக பாகிஸ்தான் மலரட்டும்.. உங்களுக்கு எப்போதும் அரணாக, பாதுகாப்பாக இந்தியப் பெருநாடு நிச்சயம் இருக்கும்!

இருநாட்டு உறவு அமைதியான முறையில் மேம்பாடு அடையும்போதுதான் பாகிஸ்தான் முழுமையான வலிமையான ஜனநாயக நாடாக மேற்குலக சக்திகளின் மிரட்டல் உருட்டல்களை அஞ்சாத ஒரு பலமான வர்த்தக கேந்திரமாகவும் உருவெடுக்க முடியும்.. இதற்கான தருணமாகவும் இது இருக்கட்டும்!

பெஷாவரில் பலியான பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 142 பேருக்கும் நம் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துவதுடன் வருங்காலம் இத்தகைய துயரம் தோய்ந்ததாக இல்லாதிருக்கவும் உறுதியேற்போம்!!

English summary
Thousands of Indians are sending a message of support to Pakistan on Twitter in the wake of the Taliban school massacre in Peshawar. In this time Pakistan should join India to curb terrorism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X