For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆர்.கே.நகர்.. இப்படியும் ஒரு இடைத் தேர்தல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

அதோ, இதோ என்று ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் நெருங்கிவிட்டது. ஆளும் கட்சியான அதிமுக தொகுதியை அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்க, எதிர்க்கட்சிகளோ எதையோ வெறித்து பார்த்துக் கொண்டுள்ளன.

ஜனநாயகம் எனும் தேரின் அச்சாணிதான் தேர்தல். ஆனால், அச்சாணி இல்லாத தேர் எப்படி தறிகெட்டு ஓடுமோ அதே நிலைதான் இப்போது ஆர்.கே.நகருக்கும். இந்த இடைத் தேர்தலே முழுக்க, முழுக்க மக்களின் மீது திணிக்கப்பட்ட ஒன்று. ஆர்.கே.நகர் மக்கள் அதிமுகவின் வெற்றிவேலுக்கு 5 ஆண்டுகள் பதவியில் இருக்கத்தான் ஓட்டுபோட்டனர். ஆனால், அவரோ நாலாண்டுகளிலே, நானில்லையப்பா என்று ராஜினாமா செய்து ஓடிவிட்டார்.

R.K.Nagar by-election is a different ball game

மக்களின் தீர்ப்பை மதிக்காமல் ராஜினாமா செய்ததில் இருந்தே ஆரம்பிக்கிறது ஆர்.கே.நகர் தேர்தல்.

ராஜினாமா செய்தவர் சார்ந்த கட்சிதான் இப்போது தங்கள் கட்சியின் மற்றொரு வேட்பாளருக்கு ஓட்டுபோட சொல்லி மக்களிடம் செல்கிறது. ஏன் ஓட்டு போட வேண்டும்?, ஏற்கனவே போட்ட ஓட்டுக்கு என்ன மதிப்பு? என்ற 2 சிம்பிள் கேள்விகளை மக்கள் திருப்பி கேட்டால்.. அந்த முதுகெலும்பு மக்களிடம் இருந்தால்.. இனிமேல் மக்களை மதிக்காத வெற்றிவேல்கள் உருவாக மாட்டார்கள்.

அடுத்ததாக, ஜனநாயக தூண்களான எதிர்க்கட்சிகள். அவர்கள் எதிர்க்கட்சிகளா அல்லது, எதிரே கடைவிரிக்கும் வணிகர்களா என்ற குழப்பம் இப்போதெல்லாம் ஏனோ எட்டிப்பார்க்கிறது. கட்சி என்பது மக்களுக்கு சேவையாற்ற தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இடைத் தேர்தலில் தோற்றால், பொதுத்தேர்தலில் தொகுதி பேரம் பேச முடியாதே என்ற எண்ணத்தில் உள்ளவைகள் எப்படி எதிர் 'கட்சிகளாக' இருக்க முடியும்? 5 முறை முதல்வராக பதவியில் இருந்தவர் கட்சிதான் அஞ்சி ஓடுகிறது என்றால், அரசியல் அரிச்சுவடி படிக்கும் கட்சிகளும் கப்சிப்.

பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தோ, மும்பைக்கும், சீரடிக்கும் பறந்து கொண்டுள்ளார். திரும்பிவரும்போது ஆர்.கே.நகரில் தேர்தல் நடக்கிறதா.. நான் பேப்பர் படித்து பல நாள் ஆகிவிட்டது என்று சொல்வார் பாருங்கள். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கபோவது நாங்கதான் என மார்தட்டும், மத்திய ஆளும் கட்சியோ, விஜயகாந்த்தை கை நீட்டி தப்புவதில் குறியாய் இருந்தது. அவர் ஜகா வாங்கி பிறகும் ஜாகாவுக்கு வரவில்லை பாஜக.

எதெற்கெடுத்தாலும் அறிக்கைவிட்டு ஆட்சியை குற்றம்சொல்லும், பாமகவும், காங்கிரசும் ஆர்.கே.நகர் கிலோ என்ன விலை என்று கேட்கின்றன. ஏசி அறை அறிக்கைகளை அப்புறம் எழுதலாம்.. களத்தில் சென்று போராடலாம் என்ற எண்ணம் இரு கட்சிகளுக்கும் இல்லை. "அய்யய்யோ அராஜகம்.. அடிக்கிறாங்க.., குத்துறாங்க.." என அலறும் எதிர்க்கட்சிகள் அத்தனையுமே, தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் ஒரு டயலாக்கைதான் சொல்கின்றன. இடைத் தேர்தல் நியாயமாக நடைபெறாதாம். இப்படி சொல்வதற்கு இத்தனை கட்சிகள் எதற்கு.

இடைத் தேர்தல் என்றால் ஆளும் கட்சி வேட்பாளரையே, அன் அபோஸ்டாக, தேர்ந்தெடுத்துவிடுங்கள் என்று தமிழக சட்டசபையில் அத்தனை கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றிவிடலாமே. இடைத்தேர்தலுக்கு கொட்டப்படும் மக்களின் வரிப்பணமும், அவர்களின் பொன்னான நேரமுமாவது மிச்சமாகும். அதிமுகவும், திமுகவும் கூட இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கும். இரு கட்சிகளுமே அடுத்த கட்சியின் ஆட்சியில் நடக்கும் இடைத்தேர்தல்களை அப்படித்தானே பார்க்கின்றன.

அதெல்லாம் சரி.. இத்தனை கட்சிகளும் தலைதெறிக்க ஓட காரணமாக சொல்லும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க வேண்டியது யார்?, தேர்தல் ஆணைய அதிகாரிகள்தானே. நாட்டாமையாக இருந்து தீர்ப்பு சொல்ல வேண்டிய தேர்தல் அதிகாரிகளோ, நமக்கு எதுக்கு வம்பு என்று எதிர்க் கட்சிகளைவிட வேகமாக அஞ்சி ஓடிக் கொண்டிருக்கினர்.

ராயபுரம் முதல் சிமெட்ரி ரோடு வரை, தண்டையார்பேட்டை முதல் கொருக்குப்பேட்டை வரை, காசிமேடு முதல் புதுவண்ணை வரை என்று, மொத்த சாலைகளும் பளபளப்பாக்கப்பட்டுள்ளன. உடைந்து இருந்த பிளாட்பார்ம்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. குப்பைத் தொட்டிகளைக்கூட புதிதாக வைத்துள்ளார்கள் என்றால் கட்சிக்காரர்கள் கடமை உணர்வை என்னவென்று சொல்ல? தேர்தல் நடைபெறும் தொகுதியில், அரசு திட்டங்கள் எதையும் புதிதாக செயல்படுத்த கூடாது என்ற விதிமுறை ஏட்டில்தான் உள்ளது.

இந்த கூத்துக்களை பார்த்து திருவாளர் பொதுஜனத்தின் மனநிலை எப்படி இருக்கும்.. ஒருவேளை தேவையில்லாமல் தலையில் கட்டிய தேர்தல் என்று ஆளும் கட்சி மீது கடும் ஆத்திரத்தில் இருப்பார்களா?, பயந்து ஓடிய எதிர்க்கட்சிகளை பார்த்து கோபத்தில் இருப்பார்களா? இரண்டுமே இல்லையாம். போட்டி கம்மியா இருக்கே.. 'கவனிப்பும்' கம்மியாகிவிடுமே என்ற கவலை தான் அந்தத் தொகுதியில் பலரையும் வாட்டுகிறது.

இது மக்களின் மீது எந்தத் தப்பும் இல்லை. பணத்தை முதலீடு செய்து பணத்தை சம்பாதிக்கும் அரசியலில் பலியாடுகள் தான் அந்த மக்கள்.

English summary
R.K,Nagar by-election in which TN CM Jayalalitha contest behalf of AIADMK is a different ball game.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X