For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலையங்கம்: நெருப்பின் காயத்தை நெருஞ்சி முள் நீக்காது!

By Veera Kumar
Google Oneindia Tamil News

உலகை உலுக்கிய சிட்னி தீவிரவாத முற்றுகை சம்பவம் ஒரு வழியாக 16 மணி நேரங்கள் கழித்து முடிந்துள்ளது. பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 'தீவிரவாத எண்ணம்' கொண்ட ஈரான் அகதி சுட்டுக்கொல்லப்பட்டதும், கமாண்டோக்களால் இந்த ஆபரேசனுக்கு சுபம் எழுதப்பட்டது. ஆனால் 2 பிணைய கைதிகள் உயிர் அதற்கு விலையானது.

தீவிரவாதியிடமிருந்து தப்பி காபி கஃபேயை விட்டு வெளியே ஓடிவந்தவர்களின் கண்களில் காணப்பட்ட மரண பீதி கல் நெஞ்சையும் உலுக்கும். ஈ, எறும்புக்கு கூட உயிர் மீது பற்றுதல் உண்டு எனும்போது பல்வேறு கடமைகளை முதுகில் சுமந்து திரியும் மானுடரின் உயிர் பற்றை விளக்கி சொல்ல வேண்டியதில்லை. உயிருக்கு பயந்து காபி கஃபேயில் இருந்து வெளியே ஓடிவரும் சீன மாணவியின் படம் இன்று உலகமெங்கும் வைரலாக பரவியுள்ளது.

 Sydney Siege incident is a wake-up call for India

ஆஸ்திரேலியா எதிர்பார்க்காமல், திடீரென நடந்த நிகழ்வு இது என்று கூறிவிட முடியாது. ஆனால் எதிர்பாராத தருணத்தில் நடந்தது என்று வேண்டுமானால் கூறலாம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வளைகுடா நாடுகளில் நடைபெறும் பன்னாட்டு ராணுவ தாக்குதலில் ஆஸ்திரேலியாவும் இணைந்தபோதே இதுபோன் ஆபத்துகளை அந்த நாடு எதிர்பார்த்தது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடுத்தெருவில் வைத்து ஆஸ்திரேலிய மக்களின் தலைகளை வெட்டி எறிய திட்டமிட்டுள்ளதாக 2 மாதங்களுக்கு முன்பு வெளியான உளவுத்துறை அறிக்கையை கேட்டு உள்ளூர வியர்த்துவிட்டது ஆஸ்திரேலிய அரசுக்கு. உடனடியாக நாடு முழுவதும் ராணுவத்தினரை கொண்டு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்போர் என்று சந்தேகிக்கப்படுவோரின் வீடுகளில் அதிரடி சோதனைகளை நடத்திய அரசு, சிலரை கைதும் செய்தது. ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் செய்திகளை வெளியிட்டன ஆஸ்திரேலிய ஊடகங்கள்.

ஆனாலும் ஆஸ்திரேலிய பாதுகாப்பையும் மீறி, தீவிரவாதம் தனது கோர முகத்தை காட்டிவிட்டது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, காபி கஃபேயின் மீது ஏற்றப்பட்டது தீவிரவாதியின் கொடியல்ல, தீவிரவாத ஆதரவு எண்ணம் கொண்டவரின் கொடி என்பதைத்தான். தீவிரவாதிகளைவிட அவர்களுக்கான ஆதரவு எண்ணம் கொண்டவர்கள் ஆபத்தானவர்கள். தீவிரவாதிகளை கண்காணிப்பது எளிது, அந்த எண்ணம் கொண்டவர்களை.... எப்படி ஸ்கேன் செய்து பார்ப்பது?

ஆஸ்திரேலியாவில் இன்று நடந்தது நாளை இந்தியாவில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. கடந்த காலமும் நமக்கு அதேபோன்ற பாடத்தை கற்றுத் தந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கஃபே என்றால், நமக்கு மும்பை நட்சத்திர ஹோட்டல். ஆஸ்திரேலியாவைவிட நமது பாதுகாப்பு கட்டமைப்பு மிகவும் பலவீனமானது. ஆஸ்திரேலியாவைவிட நமது மக்கள் தொகை பல மடங்கு அதிகம் என்பதும் இதற்கு ஒரு காரணம்.

சென்னை சென்ட்ரலில் மெட்டல் டிடெக்டர் இருப்பதால் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்காது என்று நப்பாசை வைக்க முடியாது. பாதுகாப்பு ஏற்பாடு இல்லாத பட்டாபிராம் நிலையத்தில் 'பாமுடன்' ரயில் ஏறும் தீவிரவாதிக்கு சென்ட்ரலில் குண்டை வெடிக்கச் செய்வது எளிதான காரியமே.

பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் எப்பேர்பட்ட பாதுகாப்பு உள்ளது என்று யாரும் மார்தட்ட முடியாது. பின்வாசல் கேட்பாரற்று திறந்துதான் கிடக்கிறது.

தீவிரவாதிகள் ஊடுருவலை எல்லையில் ராணுவம் தடுக்க முடியும், ஆனால் அந்த எண்ணத்தை எந்த அணைகட்டியும் தடுக்க முடியாது என்பதற்கு உதாரணம்தான், மேதி மஸ்ரூர் பிஸ்வாஸ். பரந்து விரிந்த இணைய உலகம் பல்வேறு நன்மைகளுக்கு மத்தியில் இதுபோன்ற களைகளையும் வளரச் செய்கிறது.

இந்த களையை வேரறுக்க கத்தியும், அரிவாளும், வெடிகுண்டுகளும் வேலைக்கு ஆகாது. நெருப்பின் காயத்தை நெருஞ்சி முள்ளால் நீக்க முடியாது.

ஆஸ்திரேலியாவில் அதற்கான துவக்க புள்ளி போட்டாகிவிட்டது. கஃபேயில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இஸ்லாமியர் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் வெளியானதும், டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு மற்ற அப்பாவி இஸ்லாமியர்களுக்கு தங்கள் ஆதரவு கரத்தை நீட்டியுள்ளனர் ஆஸ்திரேலியர்கள். இது.. இந்த ஆதரவுதான் மற்ற நாடுகளும் தர வேண்டியது.

மனிதம் இருக்கும் இடத்தில் மதத்துக்கு என்ன வேலை?

English summary
Sydney Siege incident is a purely a wake-up call for India. If the people of this country united then terrorism will lose it's way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X