• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலையங்கம்: இருளில் கிடக்கும் மறுமலர்ச்சியை வைகோ வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டிய தருணம் இது...

By Mathi
Google Oneindia Tamil News

அரசியல் வாழ்வின் பொன்விழாவை கொண்டாடுகிறார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ.. அவர் தனிக்கட்சி தொடங்கி 21 ஆண்டுகள் உருண்டோடியும் விட்டது..

இத்தனை ஆண்டுகாலத்தில் தேர்தல் அரசியல் களத்தில் சரித்திரம் படைத்தவராகத்தான் வைகோ இருக்கிறார்.. ஆம்.. எந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டாரோ அதே திமுகவுடனும் கூட்டணி வைத்தார்... "யூ கேம் த்ரூ கைபர் போலன் பாஸ்" என்று வசைபாடிய வாஜ்பாய் அத்வானிகளின் அந்நாளைய பாஜகவுடனும் கூட்டணி வைத்தார்..

Vaiko will lead alternative front in 2016 assembly elections?

கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாரை எதிர்த்து 51 நாட்கள் நடையாய் நடந்தாரோ அதே ஜெயலலிதாவின் அதிமுகவுடன் பின்னாளில் கூட்டணி அமைத்தார்..

தமிழீழ விடுதலைப் புலிகளை நேற்றும் இன்றும் என்றும் ஆதரிப்பேன் என்று முழங்கியபடியே விடுதலைப் புலிகளின் பரம வைரி கட்சியான காங்கிரஸுடனும் கூட்டணி அமைத்துப் பார்த்தார்... என்றும் மதவாதத்தை எதிர்ப்போம் என்று பேசிக் கொண்டே மோடியை பிரதமர் வேட்பாளராக்கிய இந்நாளைய பாரதிய ஜனதாவுடனும் கூட்டணி வைத்துவிட்டார்..

வைகோவின் அரசியல் பார்வையில் இயல்பான தோழமை சக்திகளான இடதுசாரிகளும் விடுதலை சிறுத்தைகளும் வைகோவின் இந்த கூட்டணிகளில் சில நேரங்களில் இடம்பெற்று விட்டனர்.. பாட்டாளி மக்கள் கட்சியும் தேமுதிகவும் கூட வைகோவின் மதிமுக இருக்கும் அணியில் இடம் பிடித்தாகிவிட்டது.. உச்சகட்டமாக 2011 சட்டசபை தேர்தலையும் கூட புறக்கணித்தாயிற்று...

ஒரு அரசியல் தலைவர் தேர்தல் களத்தில் எத்தனை வியூகங்களை வகுக்க வேண்டுமோ அத்தனை வியூகங்களையும் வகுத்துப் பார்த்துவிட்டார் வைகோ என்றுதான் சொல்ல வேண்டும்.. ஆனாலும் வியூகங்கள் அனைத்தும் வீணாகிப் போன ஒன்றாகிவிட்டது.. வைகோ சொல்வது போல போர்களைத் தான் இழந்திருக்கிறோம் போர்க்களங்களை அல்ல என்பது அப்போதைக்கு வேண்டுமெனில் எழுச்சியூட்டக் கூட்டதாக இருக்க முடியும்.. ஆனால் 21 ஆண்டுகால அரசியல் பயணத்தில் பத்தோடு பதினொன்று என்ற நிலையில்தான் வைகோவின் மதிமுக இருக்கிறது எனில் எங்கே பிழை?

வைகோவின் அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் தூய்மை; இலட்சியத்தில் உறுதி என்பதெல்லாம் பாராட்டுதல்களுக்கும் போற்றுதல்களுக்கும் உரித்தானவைதான்.. சிறையிலடைபட்ட போதிலும் அவரது சளைக்காத தமிழீழ ஆதரவு நிலைப்பாடும் சல்யூட்டுக்கு உரித்தானதுதான்! ஆனாலும் வைகோ ஏன் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாக உருவெடுக்க முடியாமல் போனது?

வைகோ என்ற தனிமனிதருக்காக மாபெரும் அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் 9 மாவட்ட செயலாளர்கள், 400க்கும் மேற்பட்ட பொதுக்கு உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனரே.. இவர்களில் பெரும்பகுதியானோரை வைகோவால் ஏன் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை?

"உலகில் வேறு எந்த இயக்கத்திலும், கட்சித்தலைமையைக் கண்டித்து தீக்குளித்த மடிந்ததாக வரலாறு இல்லை" என்று பெருமை பேசும் வகையில் நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் என பலரும் வைகோ மீதான திமுகவின் ஒழுங்கு நடவடிக்கையைக் கண்டித்து தீக்குளித்து மடிந்தார்களே.. அந்த தியாகமெல்லாம் வீணாகிப் போனதே ஏன்?

ஈழத் தமிழர் விவகாரம் மற்றும் தமிழ்நாட்டு உரிமை பிரச்சனைகளில் வைகோ நடத்தாத அறப்போர்களா? ஏன் எதுவுமே வைகோவுக்கு வளர்ச்சியைத் தராமல் போனது?

ஒருவேளை தன்னுடைய "உரத்த குரல்" பேச்சுதிறன் ஒன்றே வாக்குகளை கொண்டு வந்துவிடும் இப்போதும் கணக்கு போடுகிறாரா வைகோ? தொடக்கத்தில் மிக அமைதியாகவும் நடுவே உச்ச ஸ்தாயில் கர்ஜித்தும் இறுதியாக இந்தியப் பேரரசே! 100வது சுதந்திர நாளில் இந்திய தேசமே இருக்காது!! என்றும் எதிர்கால இளைஞர்கள் இப்படியே இருக்கமாட்டார்கள்.. இந்தியா துண்டு துண்டாக சிதறிப் போய்விடும் என்றும் நாடி நரம்புகளை முறுக்கேற்றுகிற அரை நூற்றாண்டுகால பேச்செல்லாம் கவைக்கும் வாக்கு சேகரிக்கவும் உதவாது என்பதை இன்னமும் வைகோ உணரவில்லையா?

திமுகவை விட்டு வெளியேறும் போது மதிமுகவின் அரசியல் பயணத்துக்கு அற்புதமான வாய்ப்பு இருந்தது. தமிழகத்தில் திமுக- அதிமுகவுக்கு மாற்றாக தலைமை தாங்கி செல்லக் கூடிய அளவுக்கு சூழல் இருந்தது.

வைகோவும் கூட 1996 சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்துதான் தேர்தலை சந்தித்தார்.. ஆனால் வெல்ல முடியாமல் போனது... அப்போது மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் வந்தது.. வென்றது என்றெல்லாம் வறட்டு வசனம் பேசி தமக்கு தாமே ஆறுதலை வரலாறாய் இன்னமும் வைத்துக் கொண்டிருப்பதால்தான் வைகோவும் மதிமுகவும் எழாமலேயே இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்..

எல்லாமும் முடிந்து போகட்டும்.. வைகோவுக்கு இப்போதும் கூட வரலாறு அற்புதமான வாய்ப்பை முன்னெப்போதையும் விட வழங்கியிருக்கிறது.. உங்களைப் போலவே பாஜகவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறது பாமக... திக்கு தெரியாத திசையில் தேமுதிக திணறிக் கொண்டிருக்கிறது... எங்கே செல்லும் இந்தப் பாதை என இருட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் இடதுசாரிகள்.. மீண்டும் திமுகவுடனா? என்று அசந்து போய் நிற்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி..

ஆகையால் வரும் 2016 சட்டசபை தேர்தலிலாவது வலுவான ஒரு "முன்னணி"யை வைகோ முன்முயற்சி எடுத்து உருவாக்கி "மாற்று சக்திகளில்" ஒன்றாக இடம்பிடித்தால் மட்டுமே 21 ஆண்டுகாலம் இருளில் கிடக்கும் "மறுமலர்ச்சி"யை தொண்டர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வைகோவால் காட்ட முடியும்! எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கைகளையும் வைகோவால் தக்க வைக்கவும் முடியும்!!

English summary
MDMK leader Vaiko now get chances to lead an alternative front for the 2016 Assembly polls in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X