அப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்து முகாமிட்ட புலி வனப்பகுதிக்குள் சென்றதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி ஒன்று வெளியேறியது. அந்த புலி சிமிட்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த புதரில் பதுங்கியது.
இதை கண்ட அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வட இந்தியாவில் 'தத்துவார்த்த' அரசியலை கைவிட்ட 'சமூகநீதி' கட்சிகள்... சாதகமாக்கிய பாஜக!

ஓய்வு எடுத்த புலி
நேற்று பகல் முழுவதும் வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்தனர். புலி புதரை விட்டு வெளியேறாமல் அங்கேயே படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது.

வனத்துறையினர் ஏமாற்றம்
இதனால் நேற்று இரவு புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். புலி எப்படியும் கூண்டில் சிக்கியிருக்கும் என்று நினைத்து இன்று காலை கூண்டை பார்த்த வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர்.

புலியின் கால் தடம்
ஆனால் புலி கூண்டில் சிக்கவில்லை. இதையடுத்து வனத்துறையினர் புலியின் கால் தடம் பதிவானதை கண்டு பின்தொடர்ந்து சென்றனர்.

மக்கள் நிம்மதி
இரவில் புலி விவசாய தோட்டத்தை விட்டு வெளியேறி பள்ளம் மற்றும் ஓடைகள் வழியாக ஜீரகள்ளி வனப்பகுதிக்கு சென்றதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.