சூடுபிடிக்கும் களம்.. இண்டு இடுக்கெல்லாம் புகும் எடப்பாடி பழனிசாமி.. 5 நாட்கள் ஷெட்யூல்.. ஆஹா!
எடப்பாடி பழனிசாமி 5 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஐந்து நாள்களுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பிப்ரவரி 15- ஆம் தேதி முதல் 17 வரையிலும், 24, 25 ஆகிய நாட்களிலும் ஈரோடு கிழக்கில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் ஈபிஎஸ். ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட அத்தனை பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார் ஈபிஎஸ்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினர் தங்கள் பலத்தை நிரூபிக்க கடுமையாக களமிறங்கியுள்ளனர்.
117 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்து களத்தைப் பரபரக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

கரைவேட்டிகள்
பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஈரோடு கிழக்கு தொகுதி கரைவேட்டிகளால் பரபரக்கிறது.

சூறாவளி பிரச்சாரம்
இந்நிலையில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். எடப்பாடி பழனிசாமி, பிப்ரவரி 15, 16, 17 மற்றும் 24, 25 ஆகிய 5 நாட்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் சூறாவளை பிரச்சார சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் ஒரு நாள்
அதேசமயம் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஒரே ஒரு நாள் மட்டும் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள் என என பெரும் படையே ஈரோட்டில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு கிழக்கில் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடப்போவதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சத்யா நகர், சம்பத் நகர் உட்பட 19 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட இருக்கிறார். அதேபோல் திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications