ஆளுநர் ரவி ராஜ்பவனில் இருக்கவேண்டிய ஆளே இல்லை.. அவர் இருக்க வேண்டிய இடமே வேற.. சீமான் பரபர!
ஈரோடு: "ஆளுநர் ரவி ராஜ்பவனில் இருக்க வேண்டிய ஆளே இல்லை, மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சனாதனம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசு வருவது பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "ஆளுநர் ரவி ராஜ்பவனில் இருக்க வேண்டிய ஆளே இல்லை, மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர். முற்றிவிட்டது. எதையாவது பேசிக்கொண்டு அலைகிறார்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், "எனது தாத்தன் வள்ளலார், சனாதன கொடுமைகளுக்கு எதிராகத்தான் சுத்த சன்மார்க்கம் என்ற அமைப்பையே தொடங்கினார். அவரைப்போய், சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் எனக் கூறினார் என்றால் இது நல்ல மனநிலை உள்ளவர் பேசுகிற பேச்சா இது" என விமர்சித்தார் சீமான்.
மேலும் பேசிய சீமான், "மகாராஷ்டிரா மாநிலத்தில் 5000 கோடி கொடுத்து எம்எல்ஏக்களை வாங்கியுள்ளனர். எம்.பி தேர்தலில் போட்டியிடுவது என் விருப்பமே இல்லை. ராமேஸ்வரத்தில் பிரதமர் போட்டியிடவில்லை என்றால் நானும் போட்டியிடவில்லை. அவர் போட்டியிட்டால் நான் போட்டியிடுவேன். இல்லையென்றால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்." என்றார்.
மேலும், "திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 80 விழுக்காடு நிறைவேற்றியதாக கூறுகின்றனர். 8 விழுக்காடாவது நிறைவேற்றியதாக காட்டட்டும். புதிய ஏர்போர்ட், இலவச பேருந்து கேட்காத நிலையில் பேராசிரியர், மீனவர்கள் உள்ளிட்டோர் போராடி வரும் நிலையில் நாடே தெருவில் நிற்கும் நிலையில் நல்லாட்சி கொடுப்பதாக தெரிவிப்பது ஏற்க முடியாது.
நீட் தேர்வு முறையை கொண்டுவந்தது காங்கிரஸ். அப்போது கூட்டணியில் திமுக தான். கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆளுகிறது. காவிரியில் தண்ணீர் தர அந்த அரசு மறுக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பினார் சீமான்.












Click it and Unblock the Notifications