எடப்பாடியின் கூட்டத்தில் கிருஷ்ணசாமி முதல் ஜான்பாண்டியன் வரை.. அண்ணாமலை மட்டும் மிஸ்ஸிங் ஏன்?
ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் பங்கேற்காதது ஏன் என சிபி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு: ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணத்தை சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி அண்மையில் முடிவடைந்தது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அதிமுக, காங்கிரஸ், திமுக, பாஜக ஆகியவை தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்றிருந்தது. அதனால் கூட்டணி தர்மபடி, திமுக, காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டது. இதில் கடந்த முறை வெற்றி பெற்ற திருமகன் ஈவேரா அகால மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு போட்டியிட காங்கிரஸ் சீட் கொடுத்துள்ளது.

பிரச்சாரம்
அதேநேரம் கடந்த முறை அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த முறை அதிமுகவிற்கு விட்டுக்கொடுத்துவிட்டது. இதனால் அதிமுக சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக திமுகவினரும் களம் இறங்கி உள்ளனர்.

ஜான்பாண்டியன்
திமுக கூட்டணி இப்படி என்றால், அதிமுக கூட்டணியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக-வுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், பூவை ஜெகன்மூர்த்தி, டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அண்ணாமலைக்கு பதிலாக முன்னாள் எம்.பியும், பாஜக தேசியச் செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

ஸ்டாலின் பொம்மை முதல்வர்
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் ஒரு பொம்மை முதல்வர் ஆட்சி செய்யுறாரு. அவரை சூப்பர் முதல்வருன்னு சொல்றாங்க. ஆமாம். அவர் சூப்பர் முதல்வராகத் தான் இருக்கிறார். எதில் தெரியுமா. கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் ஆகியவற்றில் தான் சூப்பர் முதல்வராக உள்ளார். அவரை பொருத்தவரை யார் அதிகமாக கமிஷன் தருகிறாரோ அவரு தான் சிறந்த அமைச்சர் என்பார் அப்படிப்பட்ட ஒரு அமைச்சர் இந்தத் தொகுதியில் தேர்தல் வேலை செய்கிறார். அந்த அமைச்சருக்கு மக்கள் பணி செய்யுறதுல விருப்பமில்லை. மக்களுக்கு ஆசைகாட்டி பணம் தருவதாகக் கூறி ஒரு குடோனில் அடைச்சு வச்சிருக்கார். அனைத்து தேர்தல் விதிமுறைகளும் மீறப்படுகின்றன. இந்த விதிமீறல்களுக்கு காவல்துறையும், அதிகாரிகளும் துணை போறாங்க.. அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்படனும்.. நாளைக்கே ஆட்சி மாறலாம். தற்போது மக்களுக்கு எதிராக செயல்படுற அதிகாரிங்க எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தக் கூட்டத்தின் மூலம் எச்சரிக்கிறேன்" இவ்வாறு கூறினார்.

அண்ணாமலை மிஸ்ஸிங்
கூட்டத்துக்குப் பின், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏன் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை?' என்ற செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த, சி.பி.ராதாகிருஷ்ணன், " நமது அண்டைநாடான இலங்கை யாழ்ப்பாணத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் கலாசார மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா உள்ளிட்ட இலங்கையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் முருகனுடன் அண்ணாமலை சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சி ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதால்தான் அவரால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை" என்றார்.

யாழ்பாணம் பயணம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இதே கருத்தைத்தான் இன்று தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்கள் இன்று கேட்கையில், அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது, இதில் பாஜகவினுடைய மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. யாழ்பாணம் சென்றுவிட்டார். இதை எப்படி பார்க்குறீங்க என்றார். இதற்கு ஜெயக்குமார், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி என்பதால் அண்ணாமலை யாழ்பாணம் சென்றுவிட்டார். இதை அண்ணாமலையே சொல்லியிருக்கிறார். அதேபோல் நேற்றைய வேட்பாளர் அறிமுக கூடடத்தில் பாஜக சார்பில் சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார் என்று விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications