சத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பெண்கள் போட்ட கம்பம் ஆட்டம்.. அசத்தல் வீடியோ!
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் கம்ப ஆட்டம் ஆடி அசத்தினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோயிலில் கம்பம் நட்டு திருவிழா கொண்டாடுவது வழக்கம். சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இந்த ஆண்டு கம்பம் திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது.

இதையடுத்து கடந்த 28ம் தேதி கம்பம் வெட்ட செல்லுதல் நிகழ்ச்சியும், மே 1ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோயிலின் முன்பு நடப்பட்ட கம்பத்தை சுற்றிலும் தினமும் இரவில் கம்ப ஆட்டம் ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

மேள தாளத்திற்கேற்ப கம்ப ஆட்டம் நடனம் ஆடும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெரியவர்கள் சிறுவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு ஆடி மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்று இரவு புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கம்ப ஆட்டம் ஆடுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேள தாள இசைக்கேற்றபடி படி நடனம் ஆடி அசத்தினர்.

பெண்கள் கம்பம் ஆடுவதை அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.