துப்பாக்கி முனையில் ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளை.. 6 பேர் கைது.. துப்புக் கொடுத்த செல்போன்!
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் நடந்த நகைக் கொள்ளையில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர் அருகே பாகலூர் சாலையில் உள்ளது தனியார் நிதி நிறுவனமான முத்தூட் நிதி நிறுவனம். இது 10 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் கர்நாடகா மாநிலம் தும்கூரு பகுதியைச் சேர்ந்த சீனிவாச ராகவா மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.

6 பேர்
இவை அனைத்தும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் நிறுவனத்தை திறந்தனர். அப்போது வாடிக்கையாளர்கள் போல் 6 பேர் அங்கு வந்தனர். இதையடுத்து கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி மேலாளர் சீனிவாச ராகவா, ஊழியர்கள் மாருதி, பிரசாத், காவலாளி ராஜேந்திரன் ஆகியோரை தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களை கட்டி போட்டனர்.

4 பேர் மாஸ்க்
ஊழியர்களிடம் இருந்து லாக்கர் சாவியை பெற்று 25 கிலோ தங்க நகைகளையும் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 4 பேர் மட்டுமே முகக் கவசம் அணிந்திருந்தனர். இருவர் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

ஆய்வு
மேலும் நிதி நிறுவனத்தின் காவலர் ராஜேந்திரனிடம் துப்பாக்கி இல்லை என்பதை தெரிந்தே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையனின் செல்போன் தமிழகம்- கர்நாடகா எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீஸார் ஆய்வு செய்தனர்.

பறிமுதல்
இந்த நிலையில் ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த 6 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் வேறு ஏதேனும் கொள்ளையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளார்கள்.