ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைமை நீதிபதி இடமாற்றம்.. ஜெகனை விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி! கொலீஜியம் வெளிப்படைத்தன்மை பற்றி கேள்வி

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்த நடவடிக்கையை சுட்டிக் காட்டியுள்ள ஆந்திர ஹைகோர்ட் நீதிபதி ராகேஷ் குமார், கொலீஜியம் செய்த பணியிடமாற்ற நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்த நீதிபதிகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அழுத்தம் காரணமாக பணியிடமாற்றம் செய்ததாக மக்களிடையே அனுமானம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று நீதிபதி ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள், ரமணா நாரிமன் கன்வில்கர் லலித் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகேஸ்வரியை சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகானை உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமித்தது.

Andhra Pradesh High Court makes scathing observations against YS Jagan mohan Reddy

ஆந்திர முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி கடந்த அக்டோபரில் தலைமை நீதிபதி பாப்டேக்கு எழுதிய கடிதத்தில் "ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகேஸ்வரி மற்றும் நீதிபதிகள் எனது அரசை கலைக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர்" என்றுக் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆந்திரப்பிரதேசத்தில் அரசியல் சாசன இயந்திரம் பழுதுபட்டு விட்டது என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ராகேஷ் குமார் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியது ஜெகன்மோகன் ரெட்டி அரசு. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த தலைமை நீதிபதி, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கு தொந்தரவு அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில்தான் ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தெலுங்கானா தலைமை நீதிபதி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, அரசியல் சாசனம் தொடர்பான இந்த வழக்கு விசாரணை அமர்வுக்கு நீதிபதி ராகேஷ் குமார் தலைமை தாங்கியுள்ளார். அவர் அதிலிருந்து விலக வேண்டும் என்று ஆந்திர அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை, விசாரிக்கும் போது ராகேஷ் குமார் கூறியதை பாருங்கள்:

கொலிஜியம் மேற்கொண்ட பணியிட மாற்ற நடவடிக்கை பற்றி நான் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. ஆனால் இதில் சில வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் நீதிபதிகளை போலவே அரசியல் சாசன பதவியில் உள்ளவர்கள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆந்திரா முதல்வர் எழுதிய கடிதத்தின் காரணமாகத்தான் இந்த இரண்டு தலைமை நீதிபதிகள் இடமாற்றம் செய்யப் பட்டார்கள் என்று மக்கள் அனுமானம் கொள்வதற்கு இந்த நடவடிக்கை காரணமாக அமைந்துவிடும். இந்த பணியிட மாற்றம் காரணமாக ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் தாமதமாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. ஹைதராபாத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.

இந்த நீதிபதிகளின் பணியிட மாற்றம் காரணமாக அந்த வழக்கில் தாமதம் ஏற்படக்கூடும். ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிட மாற்றம் காரணமாகவும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேவையற்ற பலன் கிடைக்கும். இவ்வாறு ராகேஷ் குமார் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது என்று நீதிபதி ராகேஷ் குமார் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆந்திர அரசு தாக்கல் செய்த மனுவில், நீதிபதி ராகேஷ் குமார் மாநில அரசுக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆந்திராவில் அரசியலமைப்பு இயந்திரம் மொத்தமாக பழுதுபட்டுவிட்டது, எனவே இதன் நிர்வாகத்தை மத்திய அரசிடம் கொடுப்பதற்கு பரிந்துரைக்க வேண்டி இருக்கும் என்று நீதிபதி ராகேஷ் குமார், விசாரணையின்போது தெரிவித்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

இதன் அடிப்படையில் மாநில அரசு இந்த வழக்கு விசாரணையில் இருந்து அவரை விலக கேட்டுக்கொண்டது. ஆனால் நீதிபதி ராகேஷ் குமார் இது தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட ஒரு விளக்கத்தில் அதுபோன்ற எந்த ஒரு கருத்தையும் நீதிமன்றத்தில்தான் தெரிவிக்கவில்லை என்றும், அரசு நிலங்களை தனியார் குத்தகைதாரர்களுக்கு ஏலத்தில் வழங்க எடுத்த முடிவு பற்றிதான், சந்தேகங்கள் எழுப்பி இருந்ததாகவும் தெளிவுபடுத்தினார். தான் ஒரு சார்புடையதாக நடந்துகொள்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். அரசின் மனுவை தள்ளுபடி செய்தார்.

கடந்த ஆண்டு பாட்னா உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட நீதிபதி ராகேஷ் குமார், அங்குள்ள தனது சக நீதிபதிகள் பற்றி சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பீகார் முதல்வர் பற்றியும் விமர்சனங்களை செய்திருந்தார்.

கூகுளில் "கைதி எண் .6093" என்று போட்டு தேடினால் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பற்றிய பல தகவல் வருவதாகவும் ராகேஷ் குமார் கூறியிருந்தார். "ஆந்திர முதலமைச்சரின் 06.10.2020 தேதியிட்ட கடிதம் வெளியிடப்படும் வரை, அவரைப் பற்றி எனக்கு அதிக தகவல்கள் கிடையாது. ஆனால், அதன்பிறகு, அவரைப் பற்றி அறிய ஆர்வமாக இருந்தேன். அதன்பிறகு, நான் 'கூகுள்' தளத்துக்கு சென்று "கைதி எண் 6093" என்று தட்டச்சு செய்தால், பல தகவல்களைப் பெற முடிந்தது.

"ஜெகன் ரெட்டிக்கு எதிராக நிலுவையில் 30 கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆதாரங்கள் இல்லை என்று கூறி, பல வழக்குகளை போலீசார் மூடிவிட்டனர். ஆந்திர மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் யார் உத்தரவுப்படி செயல்பட முடியும்? இது விசாரணை அமைப்பை கேலி செய்வது போல உள்ளது" என்றும் நீதிபதி கூறியிருந்தார்.

English summary
Referring to the transfer of the Chief Justices of the Andhra and Telangana High Courts, Andhra Pradesh High Court Judge Rakesh Kumar said he expected transparency in the transfer process by the collegium.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X