சோகத்தின் உச்சம்.. ஆந்திராவில் அறுந்து விழுந்த மின்கம்பி.. ஆட்டோவில் சென்ற 8 பேர் உடல் கருகி சாவு
ஐதராபாத்: ஆந்திராவில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து ஆட்டோ மீது விழுந்ததில் அதில் பயணித்த 7 தொழிலாளர்கள், டிரைவர் என 8 பேர் உடல் கருகி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் குன்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளிகள் பிற கிராமங்களுக்கு கூலி வேலைக்கும், விவசாய பணிகளுக்கும் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர்ஆட்டோக்களில் பயணங்கள் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
15 வயது சிறுமி கருக்கலைப்பு மாத்திரையால் பலி.. நம்பவைத்து மோசம் - போலி டாக்டர் உள்ளிட்ட 3 பேர் கைது!

ஆட்டோ மீது விழுந்த மின்கம்பி
இந்நிலையில் குன்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்த 7 தொழிலாளிகள் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் ஷேர் ஆட்டோவில் ஏறி விவசாய பணிகளுக்கு சென்றனர். சில்லகொண்டையப்பள்ளி வழியாக ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள சாலையின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து ஆட்டோ மீது விழுந்தது.

8 பேர் உடல் கருகி பலி
இதன்மூலம் ஆட்டோவில் மின்சாரம் பாய்ந்தது. தொழிலாளர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர்களால் ஆட்டோவில் இருந்து இறங்கி வெளியே வர முடியவில்லை. இதற்கிடையே ஆட்டோ தீப்பறி எரிய துவங்கியது. அதில் பயணித்த தொழிலாளர்களின் உடலிலும் தீப்பற்றி எரிந்தது. இதில் ஆட்டோவில் சென்ற 7 தொழிலாளர்கள், டிரைவர் என மொத்தம் 8 பேர் உடல் கருகி இறந்தனர்.

மின்சாரம் துண்டிப்பு
உயர் அழுத்த மின்கம்பியின் மின்சாரம் துண்டிக்கபடாமல் இருந்ததால் அவர்களை மற்றவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மின்வாரிய ஊழியர்கள் மின்இணைப்பை துண்டித்தனர். குன்றம்பள்ளி போலீசார் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். அதில் உடல் கருகிய நிலையில் 8 பேர் இறந்திருந்தனர். இதையடுத்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கதறி அழுத குடும்பத்தினர்
இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த குடும்பத்தினர் அங்கு திரண்டு கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். ஓடும் ஆட்டோ மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி 8 பேர் இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.