வாரிசு அரசியல் ஒழியும்! அழிவின் விளிம்பில் உள்ள கட்சிகளிடம் பிற கட்சிகள் பாடம் கற்கணும்: மோடி பேச்சு
ஐதராபாத்: அழிவின் விளிம்பில் உள்ள அரசியல் கட்சிகளை பார்த்து கேலி செய்யாமல் அந்தக் கட்சிகள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
Recommended Video - Watch Now
மேலும், வாரிசு அரசியல் ஒழிக்கப்பட்டு அடுத்த 30 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை நாடு முழுவதும் பாஜகவின் யுகமாகவே இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
’பாக்யநகர்’.. பிரதமர் மோடியின் பேச்சால் சர்ச்சை.. ஹைதராபாத் பெயர்மாற்றம் செய்யப்படுகிறதா?
தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழுவில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

பாஜக செயற்குழு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சர்வதேச மாநாடு மைதானத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் 19 மாநில பாஜக முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பாஜக செயற்குழுவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்து தங்கி இரண்டு நாள் செயற்குழுவிலும் முழுமையாக கலந்துகொண்டார்.

மோடி உரை
முதல் நாள் கூட்டத்தில் பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், நிர்வாகிகளும் உரை நிகழ்த்தி கட்சி வளர்ச்சிப் பணிகள் பற்றி விவாதித்தனர். இரண்டாம் நாள் கூட்டம் நடைபெற்ற நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, என முக்கியப் பிரமுகர்கள் உரையாற்றினர். அந்த வகையில் பிரதமர் மோடியின் உரை கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. அதாவது அழிவின் விளிம்பில் உள்ள அரசியல் கட்சிகளை பார்த்து கேலி செய்யாமல் அந்தக் கட்சிகள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என பாஜகவினருக்கு அட்வைஸ் செய்தார்.

வாரிசு அரசியல்
மேலும், தெலுங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வாரிசு அரசியல் ஒழிந்து அடுத்த 30 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை நாடு முழுவதும் பாஜகவின் யுகமாகவே இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். திரவுபதி மர்மு குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் அது நாட்டிற்கே கவுரமாக அமையும் என்றும் தன் வாழ்நாள் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்டவர் திரவு பதி மர்மு எனவும் பிரதமர் மோடி புகழாரம் சூடினார்.

தெலுங்கானாவுக்கு குறி
பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அடுத்தக் குறி தெலுங்கானா மாநிலம் தான் என்பதை பாஜக செயற்குழுவில் அவர்கள் பேசியதிலிருந்தே உணர முடிகிறது. பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக எதிர்க்ககூடிய தலைவர்களில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.