பிரதமர் மோடியை புறக்கணித்த தெலுங்கானா முதல்வர் கேசிஆர்.. யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஓடிப்போய் வரவேற்பு
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் வந்த பிரதமர் மோடியை வரவேற்பதை புறக்கணித்து, அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை நேரில் சென்று வரவேற்றுள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் ஹைதராபாத் வருகின்றனர். இதனையொட்டி ஹைதராபாத் நகரமே காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானாவில் நடத்தப்படுவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. வடகிழக்கு மற்றும் வடமாநிலங்களில் பலமாக கால் ஊன்றியுள்ள பாஜக, அடுத்ததாக தென் மாநிலங்களில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே ஹைதராபாத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தெலங்கானாவில் பாஜக வளர்ச்சி அதிகரித்து வரும் சூழலில், இந்த செயற்குழு கூட்டம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பேகம்பேட் விமான நிலையம் வந்தார். அப்போது அவரை வரவேற்க தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரேசேகர் ராவ் செல்லவில்லை. மாறாக, ஒரு அமைச்சருடன் அதிகாரிகள் சென்று பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றுள்ளனர். இதன்மூலம் கடந்த 6 மாதங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதை முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் புறக்கணித்துள்ளார்.
இதற்கு பதிலாக, பிரதமர் மோடி வருவதற்கு ஓரிரு மணி நேரங்களுக்கு முன்னதாக, அதே விமான நிலையத்தில் வந்திறங்கிய எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவை சந்திரசேகர் ராவ் நேரில் சென்று வரவேற்றுள்ளார். அண்மையில் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு சந்திர சேகர் ராவ் ஆதரவளித்திருந்தார்.
இந்த நிலையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவிடம் ஆதரவு கோருவதற்காக யஷ்வந்த் சின்ஹா இன்று வந்துள்ளார். இவரது வருகையையொட்டி, பாஜகவுக்கு எதிராக சந்திர சேகர் ராவ் கூட்டம் நடத்துவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் யஷ்வந்த சின்ஹாவுடன் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவுள்ளனர். தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க சந்திர சேகர் ராவ் திட்டமிட்டிருந்த நிலையில், பாஜகவின் நகர்வுகள் அவரை மீண்டும் காங்கிரஸ் கூட்டணியை நோக்கி வர வைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், பாஜக செயற்குழு கூட்டத்திற்காக வரும் பிரதமர் மோடியை வரவேற்க அக்கட்சி நிர்வாகிகள் வைத்துள்ள பேனர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் , யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்று டிஆர்எஸ் கட்சி நிர்வாகிகள் பேனர் வைத்துள்ளனர்.