ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விவகாரம்:தமிழகம், கேரளா வரிசையில் தெலுங்கானா முதல்வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு
ஹைதராபாத்: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிகளுக்கு மாற்றுவதற்கான ஆட்சி பணி அதிகாரிகள் விதிகளில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாற்ற மாநில அரசுகளின் ஒப்புதல் அவசியம். ஆனால் மாநில அரசுகளின் இந்த வீட்டோ அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு, ஆட்சிப் பணி அதிகாரிகள் விதிகளில் திருத்தம் கொண்டுவர உள்ளது.

மத்திய அரசு கடிதம்
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு இதுவரை 3 கடிதங்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. மேலும் மத்திய அரசுப் பணிகளுக்கு செல்ல தயாராக உள்ள அதிகாரிகளின் பட்டியலையும் கேட்டிருந்தது மத்திய அரசு. அத்துடன் மாநில அரசுகள் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் அதனை கவனத்தில் கொள்ளப் போவது இல்லை என்கிற குறிப்பையும் சேர்த்து அனுப்பி வைத்திருந்ததாம் மத்திய அரசு.

மாநிலங்கள் எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு மமதா பானர்ஜி முதலில் கடிதம் அனுப்பினார். கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என கூறியிருந்தார் மமதா. இதேபோல் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் இதனை எதிர்த்திருந்தார். ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து இதர மாநிலங்களின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன என கவலை தெரிவித்திருந்தார் உமர் அப்துல்லா.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்பது மாநிலங்களின் முதல்வர்களின் கருத்து. மத்திய அரசின் இந்த விதிகள் திருத்த நடவடிக்கை மாநில சுயாட்சிக்கு எதிரானது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

தெலுங்கானாவும் எதிர்ப்பு
தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள கூட்டாட்சி தத்துவ நடைமுறைக்கு எதிரானது மத்திய அரசின் இந்த திருத்த நடவடிக்கை. அத்துடன் மத்திய அரசின் இந்நடவடிக்கையானது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் கட்டமைப்பையே சீர்குலைக்கும். ஆகையால் இந்த திருத்த நடவடிக்கையை தெலுங்கானா அரசு கடுமையாக எதிர்க்கிறது என சந்திரசேகர ராவ் குறிப்பிட்டுள்ளார்.