வடமாநிலங்களை கலக்கிய தமிழன்! தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனரான தேனிக்காரர்! யார் இந்த சேர்மராஜன்?
ஹைதராபாத்: தேசிய போலீஸ் அகாடமியின் புதிய இயக்குநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான சேர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்? இவரின் சாதனைகள் என்ன? எங்கெல்லாம் பணியாற்றி கொடி நாட்டியுள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய குடிமைப் பணித் தேர்வில் காவல் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சர்தார் வல்லபாய் படேல் போலீஸ் அகாடமியில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலத்தில் முதலில் உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவர். உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், இந்த அகாடமி தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.
அண்ணாமலை ஐபிஎஸ் படிக்க காரணமே திமுக தான்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அதிரடி பேட்டி!

சேர்மராஜன் பிறப்பு
தேனி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.அய்யாசாமி மற்றும் ரத்தினம்மாள் தம்பதியின் மூத்த மகன் ஏ.சேர்மராஜன் என்ற ஏ.எஸ்.ராஜன். வணிகர் குடும்பத்தில் பிறந்த இவர், தேனி மாவட்டத்தில் உள்ள ஓடைப்பட்டி அரசு பள்ளியில் 10ம் வகுப்பும், நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பையும் முடித்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த இவர், உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ரௌத்தர் ஹவுதியா கல்லூரியில் வரலாற்றில் பட்டப்படிப்பை முடித்த சேர்மராஜன், மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வரலாற்றில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.

ஐபிஎஸ் பயிற்சி
முதல் தலைமுறை பட்டதாரியான சேர்மராஜன் 1987ல் தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப்பெற்றார். ஐபிஎஸ் மற்றும் பீகார் கேடராக ஒதுக்கப்பட்ட சேர்மராஜன், பிரிக்கப்படாத அப்போதைய பீகாரில் உள்ள ராஞ்சியில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியாக தனது பணியை தொடங்கினார். அவரது முதல் வழக்கமான பணி சசாரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்தது. காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற அவர், ரோஹ்தாஸ் மாவட்டத்தின் எஸ்பி-யாக நியமிக்கப்பட்டார்.

பணியில் அமர்க்களம்
பின்னர், கொள்ளையர்கள், ரவுடிகளின் ஆதிக்கம் நிறைந்த பல மாவட்டங்களிலும் பணியாற்றினார். என்கவுன்ட்டர் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் கொள்ளையர்கள், ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்கினார். சட்ட ஒழுங்கை நிலைநாட்டி, குற்றச் சம்பவங்களை வெகுவாக குறைத்து, பீகார் முழுவதும் புகழடைந்தார். பின்னர் மத்திய உளவுப் பிரிவு அதிகாரியாக டெல்லி, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றினார்.

புதிய பதவி
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திலும் சேர்மராஜன் மூன்றாண்டு காலம் பணியாற்றியவர் சேர்மராஜன். மிகவும் அனுபவம் மிக்க அதிகாரியான இவர், இப்போது ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.