காஷ்மீர் எல்லையில்... கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. மூவர் படுகாயம்
ஸ்ரீநகர்: காஷ்மீரின் நவ்ஷேரா-சுந்தர்பானி செக்டாரில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அமைந்துள்ள நவ்ஷேரா-சுந்தர்பானி செக்டாரில் பாதுகாப்புப் படையினர் இன்று வழக்கம் போல ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்குப் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ராணுவ அதிகாரி என்றும் மற்றொருவர் வீரர் என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் உயிரிழந்தவர்கள் லெப்டினன்ட் ரிஷி குமார் மற்றும் சிப்பாய் மஞ்சித் என அடையாளம் காணப்பட்டுள்ளது.லெப்டினன்ட் ரிஷி குமார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அதேபோல சிபாய் மஞ்சித் சிங் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகும். இருவரின் தியாகத்திற்குத் தேசமும் இந்திய ராணுவமும் என்றும் கடமைப்பட்டிருக்கும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஜம்முவில் உள்ள பிர்பஞ்சல் பகுதியில் உள்ள ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டார் கடந்த மூன்று வாரங்களாக ராணுவத்தின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அங்கு பூஞ்ச் காடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
இதுவரை இதில் எந்தவொரு பயங்கரவாதியும் பிடிபடவில்லை. ஆனால் இரண்டு அதிகாரிகள் உட்பட 9 வீரர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கொல்லப்பட்டனர். கடந்த 18 ஆண்டுகளில் இப்பகுதியில் நடந்து வரும் மிக நீண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும்.