For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

69 பேர் படுகொலை செய்யப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் - 36 பேர் விடுதலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு குல்பர்க் சொசைட்டி பகுதிக்குள் நடந்த கலவரத்தில் 69 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்றும் 36 பேரை விடுதலை செய்தும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

2002ம் ஆண்டு பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது ரயிலின் எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்தப் பெட்டியில் இருந்த அயோத்திலிருந்து வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கர்சேவகர்கள் 59பேர் உயிரோடு உடல் கருகி மாண்டனர்.

24 Convicted In Gulbarg Society Massacre Case

இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லீம் சமுதாயத்தினரை குறி வைத்து வேட்டையாடினர் சங் பரி்வார் அமைப்பினர். மிகக் கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்டன. இதில் சிக்கி 2000 பேர் பலியானார்கள். கலவரத்தில் 254 இந்துக்களும் பலியானார்கள்.

பிப்ரவரி 28ம் தேதி 20000 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' பகுதியில் வசித்த முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதோடு, அடித்தும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் 69 பேர் உயிரிழந்தனர். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.

கலவரம் நடந்த போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் தூண்டுதலின் பேரில் தான் இந்தப் படுகொலை நடந்தது என ஈசன் ஜாப்ரியின் மனைவி ஜாகியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதைத் தொடந்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவோ, குல்பர்க் படுகொலையில் மோடிக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இதை ஜாகியா ஏற்றுக் கொள்ளவில்லை; விசாரணை முறையாக நடக்கவில்லை என்று கூறி மீண்டும் விசாரிக்க வேண்டு கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

முதலில் இந்த வழக்கை விசாரித்த, அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஜாப்ரிக்கு அனுமதி தந்தது. இந்த மனுவை விசாரித்த அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மோடிக்கு எதிரான ஜாகியா ஜாப்ரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 8 மாதங்களுக்கு முன் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், மே 31ம் தேதி தீர்ப்பு வழங்கும்படி சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி தேசாய் இன்று தீர்ப்பு வழங்கினார். 24 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி 36 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், 9 பேர் கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மற்றவர்கள் ஜாமீனில் உள்ளனர். 5 பேர் வழக்கு நடந்து போது உயிரிழந்தனர். ஒருவர் மாயமானர். தற்போது 36 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

குல்பர்க் சொசைட்டி கலவர வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை பின்னர் அறிவிக்கப்படும்.

English summary
24 of 66 people who stood trial in the Gulbarg society Gujarat riots case have been convicted, 11 of them for murder, by an Ahmedabad court today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X